தமிழ்நாட்டில் சுனாமி பேரலை தாக்கியதால் ஏற்பட்ட பேரழிவின் 19 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதுகுறித்த சிறப்பு தொகுப்பு ஒன்றை காணலாம்
கடல் என்னும் இயற்கை மடி
இயற்கை நமக்கு தந்த வரப்பிரசாதமான பரந்து விரிந்த கடலை யாருக்கு தான் பிடிக்காது. ஒருமுறையாயினும் கடலை பார்க்க வேண்டும் என நினைப்பவர்கள் எத்தனைப் பேர்?. அப்படியே கரையில் நின்று பார்த்தால் கடல் உள்ளே சென்றால் எப்படி இருக்கும் என நினைக்காத நாளில்லை. அமைதியின் உருவமாய் இருக்கும் கடல் மீனவர்களுக்கு அன்னைமடியாக திகழும். அப்படிப்பட்ட கடல் எத்தகைய பெரிய ஆபத்தை விளைவிக்கும் என்பதை நம் கண்முன்னே காட்டியது “டிசம்பர் 26”. அது தான் ‘சுனாமி என்னும் ஆழிப்பேரலை தாக்குதல்’
மறக்க முடியாத சுனாமி பேரலை
வழக்கம்போல டிசம்பர் மாதம் பேரழிவு சம்பவங்கள் நடைபெறும் மாதம் என்ற நிலையில் அந்த மாதத்தில் தான் சுனாமி பேரலை தாக்குதலும் நிகழ்ந்தது. 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் தேதி அனைவரும் மகிழ்ச்சியாக கிறிஸ்துமஸ் விடுமுறையை கழித்து விட்டு மறுநாள் 26 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கம்போல கடற்கரை பகுதிகளில் அதிகாலை முதலே மக்கள் குவிய தொடங்கினர்.
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான இந்தோனேசியா ரிங் ஆப் ஃபயர் என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கு அடிக்கடி நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு ஏற்படுவது வழக்கம். அந்த வகையில் டிசம்பர் 26 ஆம் தேதி இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கம் எப்படி இருந்தது என்றால் சுமார் 30 அடி உயரத்துக்கு அலைகள் எழுந்து ஊருக்குள் புகுந்தது. இந்தியா, இந்தோனேசியா, இலங்கை, மாலத்தீவு, தாய்லாந்து, மலேசியா உள்ளிட்ட 14 நாடுகளில் உள்ள கடற்கரைப் பகுதிகளை சுனாமி பேரலைகள் தாக்கியது.
கடல் தண்ணீர் ஊருக்குள் வருகிறதா என மக்களே ஆச்சரியப்பட்டு போயினர். ஆனால் அது ஆபத்து என தெரியாமலேயே போய் விட்டது. என்ன நடக்கிறது என தெரியாமல் கடற்கரையில் இருந்தவர்கள், கடலோர கிராமத்தினர் என அனைவரும் கடல் பசிக்கு இரையாயினர். இதில் தூக்கத்தில் இருந்த மக்களும் அதிகம். இந்த சுனாமி பேரலை தாக்குதலில் 2,29,866 பேர் இறந்து போனதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், 43,786 பேர் காணாமலே போயினர்.
சோகத்தில் மூழ்கிய தமிழ்நாடு
தமிழ்நாட்டில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை கிழக்கு கடலோர பகுதிகள் சுனாமி தாக்குதலில் கடுமையாக பாதிக்கப்பட்டது. மொத்தம் 10000க்கும் அதிகமான மக்கள் இறந்தனர். அதிகப்பட்சமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் 6,065 பேரும், கடலூரில் 610 பேரும், சென்னையில் 206 பேரும் உயிரிழந்தார்கள். பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் பொருட்சேதம் ஏற்பட்டது.
கடலோரத்தில் எழுந்த அந்த மரண ஓலம் ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. ஆண்டுகள் பல கடந்தும் ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வளவு ஆறுதல் சொன்னாலும் அந்த வடு மறையாது. இன்று 19 ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.இன்று கடலோரப் பகுதியில் சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பொதுமக்கள் பால் ஊற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்துவார்கள். சுனாமி நிகழ்வு கடலை ரசிக்க சென்றவர்களுக்கு இன்றளவும் ஒரு பயத்தை விதைத்து சென்றது என்பதே உண்மை..!