தமிழகத்தில் தற்போது கோடைக்காலம், அதன் வெப்பம் தாக்கமும், முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு மக்களை வாட்டி வதைத்து வருகிறது. மேலும் பள்ளிகளுக்கு கோடை விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் கோடை வெயிலின் தாக்கத்தை கூட பொறுத்து கொண்டு விடலாம் போல ஆனால் இந்த குழந்தைகளை சமாளிக்க முடியாமல் பல பெற்றோர்கள் திண்டாடி வருகின்றனர். மேலும் விடுமுறையை போக்க அவர்கள் சுற்றுலா அழைத்து செல்ல பாடாய்படுத்துக்கின்றனர். 


கடற்கரை சுற்றுலா தளம்:


தொன்று தொட்டு விளங்கும் தமிழகத்தின் செழுமையான கலாச்சார பாரம்பரியத்தையும், வரலாற்று முக்கியத்துவத்தையும் நாம் ஒருநாளும் மறக்க முடியாது. அதற்கு சான்றாக பல கோயில்களும், அரண்மனைகளும், கோட்டைகளும், கோபுரங்களும் நிற்கின்றன. அந்த வகையில் இந்தியாவிற்கு வருகை தந்த வெளிநாட்டவர்களான டென்மார்க்கை சேர்ந்த டேனிஷ்காரர்கள் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் எழுப்பியிருக்கும் டான்ஸ்போர்க் கோட்டை மற்றும் தேவாலயத்தை பற்றி நாம் கட்டாயம் தெரிந்துக் கொள்ள செல்ல வேண்டிய ஒர் இடமாகும்.




கோட்டையின் வரலாறு 


இந்தியாவை பல ஆண்டுகாங்கள் ஆங்கிலேயர்கள் ஆண்டிருந்தாலும், முதன்முதலாக இந்தியாவிற்கு கடல் வழியை கண்டுபிடித்து வர்த்தகம் செய்ய வந்தவர்கள் போர்த்துகீசியர்கள் தான், அவர்களை தொடர்ந்து டச்சு, டேனிஷ், பிரெஞ்சு, பிரிட்டிஷ் என ஒருவர் பின் ஒருவராக வந்தனர். அனைத்து ஐரோப்பியர்களும் இந்தியாவின் பல பகுதிகளில் கோட்டைகளையும், கோபுரங்களையும், தேவாலயங்களையும் எழுப்பினர். அவற்றில் ஒன்று தான் தரங்கம்பாடியில் இருக்கும் டான்ஸ்போர்க் கோட்டை.




டேனிஷ் கோட்டை


இந்தியா இருந்து வெளிநாட்டுக்கு இருதரப்பு வர்த்தகத்தைத் தொடங்குவதற்காகக் கட்டப்பட்ட டேனிஷ் கோட்டை, காலத்தின் சோதனையைத் தாங்கி நிற்கும் டிரான்க்யூபார் கடற்கரையில் இன்றும் காணலாம். சிறிய நகரத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், டேனிஷ், பிரிட்டிஷ், ஜெர்மன் மற்றும் பிரஞ்சு காலனிகளின் கலவைகளைக் காணலாம். இது இரண்டாவது பெரிய டேனிஷ் கோட்டையாகும். இந்த தளம் நிறைய வரலாறு மற்றும் கலாச்சாரத்துடன் இணைக்கப்பட்டுள்ளதை நாமே உணரலாம். தரங்கம்பாடியை அடைந்தவுடன் கடலோரத்தில் அமைதியாக கம்பீரமாக வீற்றிருக்கும் கோட்டையை பார்வையிட்டுவிட்டு நாம் அடுத்தடுத்த இடங்களுக்கு செல்லலாம்.





தரங்கம்பாடி கடற்கரை


அழகு நிறைந்த கடற்கரைகளில் ஒன்றான தரங்கம்பாடி கடற்கரை பொழுதுபோக்கிற்கு ஏற்ற இடமாகும். ஆடும் அலைகளின் நிலம் என்று பொருள்படும் தரங்கம்பாடி, அலைகளின் இனிமையான தாலாட்டுப் பாடல்களையும் அடிவானத்தின் மூச்சடைக்கக் கூடிய காட்சிகளையும் பார்வையாளர்களுக்கு வெளிப்படுத்துகிறது. தம்பதிகள் நிதானமாக உலா செல்வதற்கும், நெருக்கமான நேரத்தை ஒன்றாக செலவிடுவதற்கும் இது சரியான இடமாக உள்ளது. மேலும் மனிதர்களுக்கு நன்மை பயக்கும்  ஓசோன் காற்று இந்த கடற்கரையில் அதிகம் வீசப்படுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.



புதிய ஜெருசலேம் தேவாலயம் 


புதிய ஜெருசலேம் தேவாலயம் டேனிஷ் கட்டிடக்கலையின் மற்றொரு தொன்மையான வடிவமாகும். அமைதியான தேவாலயத்தில் ஒரு கல்லறை அமைந்துள்ளது. 1718 -ல் கட்டப்பட்ட இந்த தேவலாயத்தில், மத அமைப்பு இந்திய மற்றும் ஐரோப்பிய பாணிகளின் தாக்கத்தை காணலாம். லூத்தரன் மதகுருக்களின் புகழ்பெற்ற உறுப்பினரான பர்த்தலோமஸ் ஜீகன்பால்கின் கல்லறை இருக்கும் இடமாகவும் இந்த தேவாலயம் உள்ளது. இதனால் தரங்கம்பாடியில் உள்ள தேவாலயம் பிரபலமான சுற்றுலாத் தலமாக திகழ்ந்து வருகிறது.




கடல் அலையில் மாசிலாமணி நாதர் கோயில்


700 ஆண்டுகள் பழமையான கோயில், அதன் தனித்துவமான கட்டிடக்கலையால் தனித்துவமாக தெரிகிறது. சீன மற்றும் தமிழ் வடிவமைப்புகளின் நேர்த்தியான தொகுப்பைக் கொண்ட இக்கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும். தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையிலிருந்து இடது புறத்தில்  நடந்து செல்லும் தூரத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது. கோயில் கட்டாயம் நீங்கள் பார்வையிட வேண்டிய கோயிலாகும். இவை மட்டுமின்றி, சீயோன் தேவாலயம், பழைய டேனிஷ் கல்லறை ஆகியவற்றையும் நீங்கள் காணலாம்.


எல்லாம் சரி வழி சொல்லுங்க....


தரங்கம்பாடி நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து தனியாக பிரிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ளது. மயிலாடுதுறையில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு செல்ல சிதம்பரம் -நாகப்பட்டினம் செல்லும் பேருந்துகளில் ஏறி தரங்கம்பாடியில் இறங்கி கொள்ளலாம். ரயிலில் செல்ல வேண்டும் என்றால் மயிலாடுதுறை வரை ரயில் வந்து அங்கிருந்து காரைக்கால், நாகப்பட்டினம் செல்லும் பேருந்துகள் வழியாகவும் செல்லலாம்.  சிதம்பரம், காரைக்கால், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் பகுதியிலிருந்து தரங்கம்பாடியை எளிதாக சென்றடையலாம். சொந்த வாகனத்திலும் தரங்கம்பாடிக்கு வரலாம். அது சரி கோடைக்கால விடுமுறைக்கு இன்னும் கொஞ்ச காலம்தான் இருக்கு அதற்குள் சென்று கடலில் ஒர் ஆட்டம் போடுங்க..!