பள்ளி வாகனங்கள் கூட்டாய்வு
மயிலாடுதுறையை அடுத்த லட்சுமிபுரத்தில் அமைந்துள்ள குட் சமரிட்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளின் மாணவர்கள் பயணிக்கும் வாகனங்களின் கூட்டாய்வு சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.மீனா முன்னிலையில் நடைபெற்றது.
ஆய்வின் போது பேசிய ஆட்சியர்
இம்முகாமில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்ததாவது, தமிழ்நாடு அரசானது தமிழ்நாடு மோட்டார் வாகனம் பள்ளி வாகனங்கள் ஒழுங்குமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் சிறப்பு விதி 2012 -ன் படி, மாவட்டத்தில் உள்ள பள்ளி வாகனங்கள் அனைத்தும் மாவட்ட அளவிலான குழுவின் முன்பு ஆண்டுக்கு ஒரு முறை ஆய்வுக்கு உட்படுத்திட உத்திரவிடப்பட்டுள்ளது. அதன்படி இன்றைய தினம் மாவட்ட பள்ளி வாகனங்கள் கூட்டாய்வு சிறப்பு முகாமில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் பள்ளி வாகனங்களில் கூண்டு அமைப்பு, ஏறும் மற்றும் இறங்கும் வழி, அதன் கதவுகள், படிக்கட்டுகள், ஓட்டுநர் இருக்கை அறை, வாகனத்தில் உள்ள இருக்கைகள், புத்தக ரேக்குகள், வாகனம் உள்ளிருக்கும் தளப்பகுதி, ஜன்னல்கள் மற்றும் அதில் பொருத்தப்பட்டுள்ள கம்பிகள், அவசரகால வழி, வாகனத்தை சுற்றி ஒட்டப்பட்டுள்ள பிரதிபலிப்பான், முதலுதவி பெட்டி மற்றும் அதில் பராமரிக்கப்படும் மருந்துகள், தீ தடுப்பான்கள், வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள வேகக் கட்டுப்பாட்டு கருவி (50கி.மீ மணிக்கு), வாகனத்தில் உள்ளே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா, வாகனத்தின் வெளிப்புறம் முன் மற்றும் பின்புறம் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களும் அதை கண்காணிக்க ஓட்டுநர் இருக்கையில் பொருத்தப்பட்டுள்ள டிஸ்ப்ளே மானிட்டர், வாகனத்தின் அனுமதி சீட்டு, தகுதி சான்று, காப்பீடு சான்று, ஓட்டுநர் உரிமம், உதவியாளர் மற்றும் புகை சான்று குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
18 வாகனங்கள் தகுதி நீக்கம்
பரிசோதனையில் மயிலாடுதுறை மற்றும் சீர்காழி பகுதியில் உள்ள 76 பள்ளிகளில் இருந்து 396 வாகனங்களில் வருகை தந்த 226 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதில் குறைகள் கண்டறியப்பட்ட 18 வாகனங்களுக்கு தகுதி சான்று தற்காலிக நீக்கம் செய்யப்பட்டது. அவைகள் ஏழு நாட்களுக்குள் சரி செய்து மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்திய பின்னரே பயன்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டும். மேலும் அனைத்து பள்ளிகளும் உள்ள அனைத்து பள்ளி வாகனங்களையும் கட்டாயம் ஆய்வுக்கு உட்படுத்திய பின்னரே பொதுச் சாலையில் பள்ளி குழந்தைகளை ஏற்றி பயன்படுத்தப்பட வேண்டும்.
அவ்வாறு ஆய்வுக்கு உட்படுத்தாமல் பள்ளிகளில் பயன்படுத்தும் வாகனங்கள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆண்டைவிட இந்தாண்டு மாவட்டத்தில் விபத்துக்கள் குறைந்துள்ளது. விபத்து எதிர்பாராமல் நடைபெற கூடியது. ஓட்டுநர்கள் நல்ல தூக்கம், உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும். நல்ல உணவு பழக்க வழக்கங்களை வைத்துக்கொள்ள வேண்டும். ஓட்டுநர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்தார்கள்.
மேலும் பல நிகழ்வுகள்
தொடர்ந்து வாகன ஆய்விற்கு வந்திருந்த அனைத்து பள்ளி கல்வி வாகன ஓட்டுனர்களுக்கு மாவட்ட சுகாதாரத் துறை மருத்துவ குழு மூலம் கண் பரிசோதனை செய்யப்பட்டது. முன்னதாக தீயணைப்பு துறை மூலம் நிலைய அலுவலர் மற்றும் அவரது குழுவினர் திடீரென ஏற்படும் தீ விபத்தை எவ்வாறு தடுத்து கட்டுப்படுத்துவது குறித்து செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனர். 108 ஆம்புலன்ஸ் சேவை குறித்தும் அவசர காலங்களில் அவற்றை எவ்வாறு கையாண்டு பயன்படுத்தி விபத்துகளில் இருந்து காப்பாற்றுவது குறித்து செயல்முறை விளக்கம் ஒருங்கிணைப்பாளர் தலைமையிலான குழுவினர் செய்து காட்டினார்.
இவ்வாய்வின்போது, வருவாய் கோட்டாட்சியர் யுரேகா, துணை காவல் கண்காணிப்பாளர் திருப்பதி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அம்பிகாபதி, மாவட்ட கல்வி அலுவலர் நிர்மலா ராணி , மயிலாடுதுறை மோட்டார் வாகன ஆய்வாளர் ராம்குமார் மற்றும் சீர்காழி மோட்டார் வாகன ஆய்வாளர் விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டு வாகனங்களின் தகுதி குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.