மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகர் பகுதியில் சட்ட விதிமுறைகளை மீறி அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்களை (மியூசிகல் ஹாரன்கள்) பயன்படுத்திய தனியார் பேருந்துக்கு சீர்காழி போக்குவரத்து காவல் துறையினர் 10,500 அபராதம் விதித்துள்ளனர். இந்த நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Continues below advertisement

முக்கிய நகர்பகுதி

மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி நகர் பகுதி பள்ளிகள், கல்லூரிகள, மருத்துவமனைகள், காவல்நிலையம், வங்கிகள், வட்டாட்சியர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகம், நீதிமன்றம் உள்ளிட்ட இன்னும் பல அரசு அலுவலகங்கள் இயங்கி வரும் ஒரு முக்கிய நகமாக திகழ்ந்தது வருகிறது. இதன் காரணமாக இங்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் இந்த நகர் வழியாக பயணிக்கின்றன. இதனால் நகர்ப்புறங்களில் போக்குவரத்து நெரிசல் என்பது சாதாரணமாகிவிட்டது.

Continues below advertisement

பொதுமக்கள் கோரிக்கை 

இதற்கிடையே, சில தனியார் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் சட்டவிரோதமாக அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்களைப் பயன்படுத்துவதால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு பெரும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் இந்த அதிகப்படியான ஒலி மாசு பெரும் சிரமங்களை ஏற்படுத்துகிறது. இதனால், ஒலி மாசுவைக் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

நகரில் ஒலி மாசுக்கு முடிவு

இந்நிலையில் பொதுமக்களின் புகார்களை அடுத்து, சீர்காழி போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் மனவாளன் தலைமையில் சீர்காழி போக்குவரத்து காவல்துறையினர் சீர்காழி நகரப்பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சீர்காழியில் இருந்து கும்பகோணத்திற்குச் செல்லும் ஒரு தனியார் பேருந்து, சட்டவிரோதமான அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான் (மியூசிகல் ஹாரன்) பயன்படுத்தியது தெரியவந்தது.

ஓட்டுநருக்கு அபராதம் 

அதனை அடுத்து பேருந்தின் ஓட்டுநர் ராகவனிடம் விசாரணை நடத்தியதில், அவரிடம் ஓட்டுநர் உரிமம் இல்லை என்பதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, சட்டவிரோத ஒலிப்பான் பயன்படுத்தியதற்காக 10,000 ரூபாய் அபராதமும், ஓட்டுநர் உரிமம் இல்லாததற்காக 500 ரூபாய் அபராதமும் என மொத்தம் 10,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், ஓட்டுநர் உரிமம் இல்லாததால் ஓட்டுநர் ராகவனின் உரிமத்தைப் பறிமுதல் செய்யவும் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த அதிரடி நடவடிக்கை, சட்டவிரோத ஒலிப்பான்களைப் பயன்படுத்தும் மற்ற வாகன ஓட்டிகளுக்கு ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.

தொடரும் கண்காணிப்பு

இது குறித்து போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் மனவாளன் கூறுகையில், "பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சட்டவிரோத ஒலிப்பான்களைப் பயன்படுத்தும் வாகனங்கள் மீது தொடர்ந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்கி, விதிகளை மதித்து வாகனங்களை இயக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், சீர்காழி போக்குவரத்து போலீசார் எடுத்துள்ள இந்த நடவடிக்கை குறித்து பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. "இன்றைய காலகட்டத்தில், அதிகப்படியான ஒலி மாசு என்பது ஒரு பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக, மியூசிகல் ஹாரன்கள் என்ற பெயரில் காதுகளைப் பிளக்கும் ஒலியை எழுப்பும் ஒலிப்பான்கள் பெரும் இடையூறை ஏற்படுத்துகின்றன. போக்குவரத்து போலீசார் எடுத்த இந்த நடவடிக்கை மிகவும் பாராட்டத்தக்கது. இது போன்ற நடவடிக்கைகள் தொடர வேண்டும்" சட்டவிரோத ஒலிப்பான்களைப் பயன்படுத்துவது குறித்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியமாகும். ஒலி மாசுவின் தீமைகள் குறித்தும், சட்ட விதிமுறைகள் குறித்தும் தெளிவான புரிதல் இருந்தால் மட்டுமே இது போன்ற விதிமீறல்களைத் தடுக்க முடியும். போக்குவரத்து போலீசார் எடுத்துள்ள இந்த நடவடிக்கை ஒரு நல்ல தொடக்கமாக அமைந்துள்ளது. தொடர்ந்து இது போன்ற நடவடிக்கைகள் மூலம் சீர்காழி நகரில் ஒலி மாசுவை கட்டுப்படுத்தி, அமைதியான சூழலை உருவாக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றனர்.