மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பட்டமங்கலம், வெள்ளாலகரம், காளி, திருச்சிற்றம்பலம், வரதம்பட்டு ஆகிய வருவாய் கிராமங்களில் ஊரக பகுதிகளுக்கான மூன்றாம் கட்ட மக்களுடன் முதல்வர் திட்ட முகாமினை உயர்கல்வி துறை அமைச்சர் முனைவர்.கோவி செழியன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தொடங்கி வைத்து, பார்வையிட்டு, உடனடி தீர்வு காணப்பட்ட கோரிக்கை மனுக்களுக்குரிய பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நலத்திட்ட உதவிகள்
மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பட்டமங்கலம், வெள்ளாலகரம், காளி, திருச்சிற்றம்பலம், வரதம்பட்டு ஆகிய வருவாய் கிராமங்களில் ஊரக பகுதிகளுக்கான மூன்றாம் கட்ட மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் வேளாண்மைத்துறை சார்பில் பாரம்பரிய விவசாய மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 3 குழுவிற்கு தலா 40 ஆயிரம் ரூபாய் மதிப்பில் மானியத்துடன் கூடிய எண்ணெய் பிழியும் இயந்திரம் மற்றும் பேக்கிங் இயந்திரமும், 15 பயனாளிகளுக்கு தொழிலாளர் நல வாரிய அட்டைகளையும், 10 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்ட அட்டையையும், 10 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகையும், கூட்டுறவுத்துறை மூலம் 2 பயனாளிகளுக்கு 2 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பில் பயிர்கடனும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை சார்பில் ஒரு பயனாளிக்கு 40 ஆயிரம் ரூபாய் மதிப்பில் சிறுபான்மை வகுப்பினர் மேம்பாட்டுக் கடனும், 1 பயனாளிக்கு மறுவாழ்வு நிதியையும் உயர்கல்வி துறை அமைச்சர் முனைவர்.கோவி செழியன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வழங்கினார்.
நிகழ்வில் கலந்துகொண்டவர்கள்
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் உமாமகேஷ்வரி, வேளாண்மை துறை இணை இயக்குநர் சேகர், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தயாள விநாயக அமுல்ராஜ், துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) உமாமகேஷ்வரன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் எஸ்.சாமிநாதன், மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுதாகர், விஜயலெட்சுமி, முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் இளையபெருமாள், சுரேஷ் மற்றும் முன்னாள் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
திமுகவினர் நலத்திட்ட உதவி
இந்நிலையில் மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சியினை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ஒன்றியத்திற்கு உட்பட்ட பட்டமங்கலம் ஊராட்சியில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் 72 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
அமைச்சரை வழி மறித்த பொதுமக்கள்
அதனை முடித்துவிட்டு அமைச்சர்கள் மேடையில் இருந்து புறப்பட்டனர். அப்போது அப்பகுதியில் உள்ள பட்டமங்களம் குளத்தை தூர்வாரக்கோரியும், பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் பொதுமக்களுக்கு பட்டா வழங்க கோரியும் அமைச்சர்களை வழிமறித்து பொதுமக்கள் மனு அளித்தனர். தொடர்ந்து குளத்தை பார்வையிட்டு செல்லுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அமைச்சர்கள் ஆகாயத்தாமரைகள் மண்டி கிடந்த குளத்தை பார்வையிட்டனர். அப்போது அமைச்சர் கோவி.செழியன் இந்த குளத்தை பார்க்காமல் போனால்தான் நான் செய்த பாவம் என்று கூறிய நிலையில், கூட்டத்தில் இருந்த ஒருவர் இந்த பகுதியில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை என்றும், திமுகவிற்கு ஓட்டளித்த நாங்களுக்கு இந்த குளத்தை தூர்வாரி அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரவில்லை என்றால் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவினருக்கு ஓட்டளிக்க மாட்டோம் என்று தெரிவித்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர்கள் கூறி அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.