மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அரசு அருங்காட்சியக துறை இயக்குநர் மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் கவிதா ராமு, மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகளிடம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தனர்.

Continues below advertisement

அனைத்து துறை ஆலோசனை கூட்டம் 

கனமழை எச்சரிக்கை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியராக கூட்ட அரங்கில் அனைத்து துறை அலுவலர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் கவிதா ராமு, மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

Continues below advertisement

செய்தியாளர் சந்திப்பு 

இக்கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கூறியதாவது; மயிலாடுதுறை மாவட்டத்தை பொறுத்தவரை டெல்டா பகுதி என்பதால் வயல்வெளி பகுதி பொறுத்தவரை தண்ணீர் தேங்க நிறைய வாய்ப்பு இருக்கும். தமிழ்நாடு அரசு நமக்கு 10.47 கோடி நிதி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதன் அடிப்படையில் கிட்டத்தட்ட 695 கி.மீ. வாய்க்கால் சீரமைக்கப்பட்டுள்ளது. 600 கி.மீ. சி.எம்.டி. வாய்க்கால், அதன்பிறகு 1301 குளங்களுக்கு செல்லுகின்ற வாய்க்கால் 2093 கி.மீ. தூரத்திற்கு சீரமைக்கப்பட்டுள்ளது. 

நடவடிக்கைகள் 

1301 ஊரக வளர்ச்சித் துறையின் வாய்க்கால் உள்ளது. நெடுஞ்சாலையை பொறுத்தவரை 1570 பாலங்களில் உள்ள அடைப்பு சரிசெய்யப்பட்டுள்ளது. தண்ணீர் தேங்கா வண்ணம் செயல்பட்டு கொண்டிருக்கின்றோம். மொத்தம் 13 இடங்களில் காவிரி மற்றும் துணை ஆறுகள் கடலில் கலக்கும் முகத்துவாரங்கள் சரிசெய்யப்பட்டுள்ளது. 

திருவாலி, பெருந்தோட்டம் ஆகிய கிராமங்களில் உள்ள 2 குளங்கள் 95 சதவீதம் நிரம்பியுள்ளது. ஆறுகள் மற்றும் குளங்கள், வாய்க்கால்கள் இவை அனைத்தும் தண்ணீர் தேங்காமல் செல்வதற்காக அனைத்தையும் சீரமைக்கப்பட்டுள்ளதால், அதிக மழை பெய்தாலும் தண்ணீர் தேங்காமல் கடலுக்கு மிக விரைவாக செல்லும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், ஒரு சில இடங்களில் ஆறுகளில் உடைப்பு ஏற்படும் பட்சத்தில் அதை உடனடியாக தடுப்பதற்கு 30,000 மணல் மூட்டைகள் கையிருப்பில் உள்ளது. கடலோரங்களில் 28 கிராமங்களில் உள்ள மீனவர்கள் கடந்த 22-ம் தேதி முதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலுக்கு செல்லவில்லை. அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக வீடுகளில் உள்ளனர். அவர்களின் மீன்பிடி வலை மற்றும் படகு பாதுகாப்பாக உள்ளது.

விவசாயம் 

விவசாயத்தை பொறுத்தவரை, 69 ஆயிரம் ஹெக்டரில் 15 நாள் முதல் 60 நாள் வரை உள்ள நெற்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் 20 செ.மீ. மழை பெய்யும் பட்சத்தில், 28 ஆயிரம் ஹெக்டர் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது. ஏற்கனவே, நாம் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையினால், எவ்வளவு மழை பெய்தாலும் உடனடியாக தண்ணீர் வடியும் நிலை உள்ளது. இதனால் பயிர்சேதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு. மயிலாடுதுறை நகராட்சியை பொறுத்தமட்டில், 72 கி.மீ சீர்காழி 13 கி.மீ சுற்றளவுள்ள இடங்களில் மழைநீர் தேங்காத வண்ணம் நகராட்சி ஆணையர் மற்றும் பணியாளர் மூலம் சரிசெய்யப்பட்டு, தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

குழுக்கள் 

காவல் துறையில் 30 பேர் கொண்ட 2 குழுக்களாக பிரிக்கப்பட்டு, பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் மீட்பு பணிகளை துரிதப்படுத்த தயார்நிலையில் உள்ளனர். தீயணைப்பு துறையின் மூலம் 8 குழுக்கள் தயார்நிலையில் உள்ளனர். மேலும், தீயணைப்பு துறையில் ஆட்கள் பற்றாக்குறை ஏற்படும் பட்சத்தில அருகாமையில் உள்ள மாவட்டங்களில் இருந்து மீட்பு பணிக்கு அழைக்கப்படுவர். மருத்துவ துறையை பொறுத்தவரை நடமாடும் மருத்துவ குழுக்கள் 5 உள்ளது. அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவுகள் தயார் நிலையில் உள்ளது. தாய்மார்களின் பிரசவ சிகிச்சைக்காக சிறப்பு குழுக்களும் செயல்பட்டு வருகிறது. 

Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை!

மின்வார வாரியம் 

மின்சார வாரியத் துறையில் 5200 மின்கம்பங்கள் கையிருப்பில் உள்ளது. 4 நடமாடும் குழுக்கள் உள்ளன. மின்தடை ஏற்படும் பட்சத்தில் உடனுக்குடன் சரிசெய்ய தனி கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. 15 நடமாடும் குழுக்கள் உள்ளது. 24 மணிநேரமும் குழுக்களாக செயல்படக்கூடியது. பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையம் 11 உள்ளது. நிவாரண மையங்கள் 362 உள்ளது. இவை அனைத்தும் தயார்நிலையில் உள்ளது. 4 வட்டங்களுக்கும் துணை ஆட்சியர்கள் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டு, பஞ்சாயத்து செயலர், கிராம நிர்வாக அலுவலர்கள் கிராம உதவியாளர்கள் மற்றும் அரசு துறையை சார்ந்தவர்கள் தயார்நிலையில் உள்ளனர்.

அளக்குடி, திருமயிலாடி, மகேந்திரப்பள்ளி போன்ற 12 இடங்களில் தண்ணீர் வடியாத நிலை உள்ள பகுதிகளும் 24 மணிநேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதுவும் 4 வட்டங்களில் 4500 தன்னார்வலர்கள் தயார் நிலையில் உள்ளனர். ஜேசிபி 85, 164 ஜெனரேட்டர்கள், 31 ஹிட்டாச்சி, 40,351 மணல் மூட்டைகள், 84 மரம் அறுக்கும் கருவிகள், 34,810 சவுக்கு மரங்கள், பிளிச்சிங் பவுடர் ஒவ்வொரு பஞ்சாயத்திற்கும் 10 மூட்டைகள் வீதம் இவைகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளது. ஒரு வட்டத்திற்கு 3 குழுக்கள் வீதம் 12 தனி குழுக்கள் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். எந்தவித சூழ்நிலையிலும் தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, தயார் நிலையில் உள்ளோம் என தெரிவித்தார்கள்.