மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ரெட் அலாட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் இரவு முதல் கனமழை பெய்துவருவதால் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி விடுமுறை அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை
வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 15 ஆம் தேதி தொடங்கி தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை தொடர்பான அறிவிப்பு அடுத்தடுத்து ஒவ்வொரு மாவட்டமாக வெளியாகி வருகிறது. இன்றும் நாளையும் இரண்டு நாட்களுக்கு நல்ல மழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் போதிய முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம்
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக வலுப்பெற்று வருகிறது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்றைய தினம் மாறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து டெல்டா மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று நவம்பர் 26-ம் தேதி மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெளுக்கும் கனமழை
மேலும் ஒருசில இடங்களில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. விழுப்புரம், கடலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்கள், புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக் கூடும். ராமநாதபுரம், திருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.இதன் காரணமாக போதிய முன்னேற்பாடுகளை மாவட்ட ஆட்சியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிப்பு
இதற்கிடையில் கனமழை காரணமாக கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நாகை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்றை தினமே நவம்பர் 26 தேதியான இன்று விடுமுறை அறிவித்து ஆட்சியர் ஆகாஷ் உத்தரவு பிறப்பித்த இருந்தார். அதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் இரவு தொடங்கி தற்போது வரை தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மழை அளவு
மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறையில் 4.50 மில்லி மீட்டர் மழையும், சீர்காழியில் 6.00 மில்லிமீட்டர் மழையும், கொள்ளிடத்தில் 6.00 மில்லிமீட்டர் மலையும் தரங்கம்பாடியில் 12 மில்லிமீட்டர் மழையும் செம்பனார்கோயிலில் 7.80 மில்லி மீட்டர் மலையும் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக தரங்கம்பாடியில் 12 மில்லி மீட்டர் மழையும் குறைந்த பட்சமாக மயிலாடுதுறையில் 4.5 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. சராசரியாக 6.5 மில்லி மீட்டர் மழை மயிலாடுதுறை மாவட்டத்தில் தற்போது வரை பதிவாகியுள்ளது. மாவட்டம் முழுவதும் ஒட்டுமொத்தமாக 36.30 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.