சீர்காழி அருகே கோவில்பத்து கிராமத்தில் மளிகை கடை நடத்தி வந்தவர் கொலையான வழக்கில் மகன் உட்பட மூன்று இளைஞர்களை  காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.


மளிகை கடை உரிமையாளர் கொலை


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கோவில்பத்து கிராமத்தை சேர்ந்தவர் 62 வயதான முகமது ரபிக்.  இவர் வெளிநாட்டு வேலை பார்த்து வந்த நிலையில், தற்போது நாடு திரும்பி அதே பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு புதியதாக ஜெனரல் ஸ்டோர் தொடங்கி நடத்தி வருகிறார். இந்நிலையில் அவரது கடை வாசல் முன்பு நேற்று முன்தினம் இரவு முகமது ரபிக் கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் சீர்காழி காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். 




காவல்துறையினர் விசாரணை 


தகவலை அடுத்து சீர்காழி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முகமது ரபீகின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  முதல் கட்ட விசாரணையில் முகமது ரபீக்கிற்கு  அபுரோஜா கனி என்ற மனைவியும், இரண்டு மகள், இரண்டு மகன்கள் உள்ளனர். மனைவி, மகன், மகள் ஆகியோருடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து மளிகை கடை வந்து கொண்டு ரபீக் தனியாக  வசித்து வருவது விசாரணையில்  தெரிய வந்தது. 




சிசிடிவி காட்சிகள்


தொடர்ந்து கொலைக்கான காரணம் குறித்து மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் சம்ப இடத்திற்கு நேரில் வந்து விசாரணை செய்தார். மேலும் சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் ராஜ்குமார், சீர்காழி காவல் ஆய்வாளர் புயல்பாலசந்திரன், காவல் உதவி ஆய்வாளர் காயத்திரி, தனிப்பிரிவு தலைமை காவலர் மூர்த்தி உள்ளிட்ட காவல்துறையினர் கடையில் இருந்த சிசிடிவி காட்சி பதிவுகளை கைப்பற்று தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். 




விசாரணையில் சிக்கிய மகன்


CCTV காட்சிகளை கொண்டு விசாரணை செய்ததில் முகமது ரபீகின் மகனான 22 வயதான முகமது யூசப் மற்றும் அவர்களது நண்பர்களான அதே ஊரை சேர்ந்த கலைக்கண்ணன் என்பவரது 22 வயதான சுபாஷ் மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் கீழவாசலை சேர்ந்த ஜலாலுதீன் மகன் 19 வயதான முகமது பாசித் இவர்கள் மூவரும் சேர்ந்து அரிவாளால் மற்றும் காத்தியால் வெட்டியதில் ரபீக்  உயிரிழந்துள்ளதும், படுகொலை செய்யப்பட்ட ரபீக் மற்றும் குடும்ப பிரச்சனையால் ஆத்திரமடைந்த இரண்டாவது மகன் முகமது யூசப் தனது நண்பர்களுடன் கொலை செய்ததும்  விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து போலீஸார்  கொலைக்கு பயன்படுத்திய அரிவாள், கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்து மூவரையும் கைது செய்தனர்.




தப்பியோட முயற்சித்த குற்றவாளி 


இந்நிலையில் கைது செய்யப்பட்ட மூவரையும்  கொலை நடந்த இடத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றபோது போலீஸாரின் பிடியில் இருந்து பாசித் மற்றும் சுபாஷ் தப்ப முயன்றுள்ளனர். அப்போது அவர்கள் இருவரும் நிலைத் தடுமாறி கீழே விழுந்துள்ளனர்.  அதில் சுபாஷ் மற்றும் பாசித் ஆகியோருக்கு வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அவர்களுக்கு சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவல்துறையினர் சிறையில் அடைத்ததனர். தந்தையை மகன் நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.