மயிலாடுதுறையில் இரட்டை கொலை குற்றவாளிகள் - குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைப்பு...!
மயிலாடுதுறையில் கல்லூரி மாணவர்கள் இருவர் கொலையான வழக்கில் தொடர்புடைய மூன்று சாராய வியாபாரிகளை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம், பெரம்பூர் காவல் சரகம், முட்டம் கிராமத்தில் கடந்த பிப்ரவரி 14 -ம் தேதி அன்று குடும்ப தகராறு மற்றும் முன்விரோதம் காரணமாக சாராய வியாபாரிகளால் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மூன்று முக்கிய குற்றவாளிகள் மீது தற்போது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொலை சம்பவத்தின் பின்னணி
முட்டம் கிராமத்தை சேர்ந்த தினேஷ் என்பவர் அதே பகுதியை சேர்ந்த சாராய வியாபாரிகள் முன்விரோதம் காரணமாக கடந்த மாதம் பிப்ரவரி 14-ஆம் தேதி இரவு, தினேஷை கத்தியால் தாக்கியுள்ளனர். அப்போது, தினேஷை காப்பாற்ற வந்த அவரின் நண்பர்களான 25 வயதான ஹரிஷ் மற்றும் 20 வயதான சக்தி ஆகிய இருவரையும் கத்தியால் குத்தியுளாளனர். இதில் இரத்த வெள்ளத்தில் சரிந்த இருவரும் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக ஹரிஷின் சகோதரர் பெரம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் அந்த புகாரின் பேரில் சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர்.

குற்றவாளிகள் கைது மற்றும் விசாரணை
இந்த கொலை வழக்கில் முதன்மையாக தொடர்புடையவர்களாக தங்கதுரை (28), முவேந்தன் (24), ராஜ்குமார் (34) ஆகிய மூவரும் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. காவல்துறையின் உடனடி நடவடிக்கையால் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். மேலும், வழக்கு விசாரணையின் போது, தங்கதுரை மற்றும் முவேந்தனின் பெற்றோர்கள் முனுசாமி (47) மற்றும் மஞ்சுளா (48) ஆகியோரும் இந்தக் கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என தெரியவந்தது. சஞ்சய் (வடக்கு தெரு, முட்டம்) என்பவரும் குற்றவாளிகளுக்கு உதவியதற்காக கைது செய்யப்பட்டார்.
குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை
கொலை வழக்கில் தொடர்புடைய முதன்மை குற்றவாளிகள் தங்கதுரை, முவேந்தன், மற்றும் ராஜ்குமார் ஆகிய மூவரும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதை கருத்தில் கொண்டு, அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் மாவட்ட ஆட்சியரிக்கு பரிந்துரை செய்தார். இதனை ஏற்ற மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அவர்கள் மூவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார். இதனை அடுத்து, செம்பனார்கோயில் காவல் ஆய்வாளர் கருணாகரன் மற்றும் காவல்துறையினர் குற்றவாளிகளை கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
மயிலாடுதுறை காவல்துறையின் கடுமையான நடவடிக்கைகள்
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஆண்டு மட்டும் 47 நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டு இதுவரை, பொது அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்திய 3 நபர்கள், திருட்டு குற்றங்களில் ஈடுபட்ட 3 நபர்கள், மதுவிலக்கு சட்டங்களை மீறிய 4 நபர்கள் என ஆக மொத்தம் 10 நபர்கள் இந்தக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறையின் எச்சரிக்கை
மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ரௌடிசத்தில் ஈடுபடும் நபர்கள், ரெளடிகள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்கள், கஞ்சா, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மற்றும் மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபடுவோர் மீது தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.