வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


வாட்டி வதைத்த வெயில் 


கோடை காலம் தொடங்குவதற்கு முன்பாக தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் மக்களை வாட்டி வதைக்க தொடங்கி உள்ளது. அதிக வெப்பம் காரணமாக பொதுமக்கள் அவதி அடைய தொடங்கியுள்ளனர். குளிர்காலம் முடிந்து முறையாக கோடை காலம் தொடங்காத நிலையில், வெயில் அதிகரித்திருப்பது பொதுமக்கள் இடையே வேதனையடைய செய்துள்ளது.


டெல்டாவில் கனமழை


இந்த நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தென் மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோன்று டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வடகிழக்கு இந்திய பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில், மேல் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நடைபெற்று வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் அநேக இடங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்காலில் இன்று இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. 




ஆரஞ்சு அலர்ட்


ஒரு சில மாவட்டங்களுக்கு இன்று அதிக மழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது. தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இப்பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது. விருதுநகர், மயிலாடுதுறை, சிவகங்கை, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தொடரும் மழை


தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில நாட்களாக வறண்ட சூழல் நிலவியது. குறிப்பாக, கோடைக்காலத்தின் தொடக்கத்திலேயே வெப்பம் அதிகரித்து, பொதுமக்களை கடுமையாக பாதித்தது. இந்த நிலையில், கடந்த 24 மணி நேரங்களாக டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் மேற்கு கடலோர பகுதி மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, பல்வேறு இடங்களில் மிதமானது முதல் கன மழை வரை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக மழை எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று அதிகாலை முதல் மயிலாடுதுறை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தொடர்ந்து மிதமான மழை பெய்து வருகிறது.




பரவலாக பெய்த மழை மகிழ்ச்சியில் மக்கள்


மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி , வைத்தீஸ்வரன் கோயில், மணல்மேடு, செம்பனார்கோயில், பொறையார், தரங்கம்பாடி, குத்தாலம், மங்கைநல்லூர், பழையார், திருமுல்லைவாசல், கொள்ளிடம் பூம்புகார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால், வெப்பத்தால் அவதிப்பட்டிருந்த பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மழை காரணமாக மாவட்டம் முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. பொதுவாக, மார்ச் மாதம் தொடங்கி மே மாதம் வரை கடுமையான வெப்பநிலை இருக்கும். ஆனால், இந்த மழையால், குளிர்ச்சியான சூழல் உருவாகியுள்ளது. 


விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்


மயிலாடுதுறை மாவட்டம் விவசாயம் சார்ந்த பகுதியாக விளங்குகிறது. அதிக அளவில் நெல் சாகுபடி செய்யப்படும் இந்த மாவட்டத்தில், மழை காலத்தில் மட்டுமே நிலத்துக்கேற்ப போதுமான ஈரப்பதம் கிடைக்கும். இந்த மழையால், நிலத்துக்குள் உள்ள ஈரப்பதம் அதிகரித்து, பாசனத்திற்கான தேவைகள் குறையும். விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கூறுகையில், "பொதுவாக, இவ்வாறு மார்ச் மாதத்திலேயே மழை பெய்வது மிக அபூர்வம். நாங்கள் நீர் பற்றாக்குறையால் நெல் பயிருக்கு கஷ்டப்படுவோம். ஆனால், இந்த மழையால் நிலம் ஈரப்பதமாகி, தண்ணீர் தேவை குறையும். மழை தொடர்ந்து பெய்தால், விளைச்சலுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும்," என்று தெரிவித்தனர். அத்துடன், இந்த மழை தேங்காய், வாழை, காய்கறி உள்ளிட்ட பயிர்களுக்கு நல்ல பலன் அளிக்கலாம் என்று விவசாயிகள் கூறியுள்ளனர்.




மழையால் மின்சார பிரச்சனை


மழையால் மகிழ்ச்சி நிலவினாலும், சில இடங்களில் சிறிய சிக்கல்களும் ஏற்பட்டுள்ளன. அதிகாலை முதல் பெய்த மழையால், மயிலாடுதுறை, தரங்கம்பாடி, மணல்மேடு, செம்பனார்கோயில், பொறையார் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. மழையுடன் பலத்த காற்றும் வீசியதால், சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தது மின்விநியோகம் தடைப்பட்டது. இதனால், சில பகுதிகளில் பொதுமக்கள் மின்சார சேவையின்மையால் சிரமத்திற்குள்ளாகினர். மின் வாரியத்தினர் விரைந்து செயல்பட்டு, பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சாரத்தைக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை


தமிழக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, "இந்த மழை இன்னும் 24 மணி நேரம் தொடரலாம். குறிப்பாக, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என்று அறிவுறுத்தியுள்ளது.


மயிலாடுதுறை மழை அளவு 


மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று காலை 8 மணி முதல் 1 மணிவரை 94.40 மில்லிமீட்டர் மழையானது பதிவாகியுள்ளது. மயிலாடுதுறையில் 15.80, சீர்காழியில் 16.40, கொள்ளிடத்தில் 14.60, தரங்கம்பாடியில் 4.00, செம்பனார்கோயில் 18.60 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.