பொங்கல் பண்டிகையின் இரண்டாம் நாளான இன்று, திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்படுகின்றது. மனிதன் அறநெறி கொண்டு வாழ வேண்டும் என்று வாழ்க்கைக்குத் தேவையான கருத்துக்களை ஈரடிக் குறளில் சொல்லி, முப்பால் தந்து நல்வழிப் படுத்திய திருவள்ளுவர்க்கு மரியாதை செலுத்தும் விதமாக ‘திருவள்ளுவர் தினம்’ பொங்கலுக்கு அடுத்தநாள் அனுசரிக்கப்படுகிறது. 1330 திருக்குறள் மூலம், வாழ்க்கை நெறிகளைக் கற்பித்தவர் திருவள்ளுவர். சமயம் சார்ந்திராத நூல்களில், நாற்பதிற்கும் மேற்பட்ட மொழிகளில், திருக்குறள், மொழி மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. ஆங்கில மொழியில் மட்டும் நூறு நபர்கள் திருக்குறளை மொழி மாற்றம் செய்துள்ளனர். பல பண்டைய புலவர்கள் திருக்குறளை புகழ்ந்து எழுதிய பாடல்கள் ‘திருவள்ளுவ மாலை’ என்று அழைக்கப்படுகிறது. 




திருவள்ளுவர் பிறந்த காலத்தைப் பற்றிப் பற்பல கருத்துக்கள் நிலவினாலும், ஆராய்ச்சி வல்லுநர்கள், திருவள்ளுவர் பிறந்த ஆண்டு கிறிஸ்து பிறப்பதற்கு 31 ஆண்டுகள் முந்தையது என்றும், அவர் பிறந்தது, வைகாசி அனுஷம் என்றும் முடிவெடுத்தார்கள். திருவள்ளுவர் பெயரில், தொடர் ஆண்டு ஒன்றைப் பின்பற்றுவது என்றும், அந்த தமிழ் ஆண்டை, ‘திருவள்ளுவர் ஆண்டு’ என்று குறிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தற்போதைய ஆங்கில ஆண்டு 2024 என்பது திருவள்ளுவர் ஆண்டு 2055. திருவள்ளுவர் திருநாள் கொண்டாட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது 1935, ஜனவரி 17ஆம் தேதி. இதற்காக காழி சிவகண்ணுச்சாமிப் பிள்ளை மற்றும், திரு.வ.சுப்பையா அவர்கள் ‘திருவள்ளுவர் திருநாட் கழகம்’ என்ற அமைப்பை ஆரம்பித்தார்கள்.




முதல் திருவள்ளுவர் திருநாள், 1935ஆம் ஆண்டு மே 17, 18 தேதிகளில், பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் கொண்டாடப்பட்டது. மறைமலையடிகளார், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், திரு.வி.க. ஆகிய தமிழ் அறிஞர்கள் கலந்து கொண்டனர். காலப் போக்கில், இது மறைந்து போக, பெருத்த முயற்சிக்குப் பிறகு, 1959ஆம் வருடம் மே 22 ஆம் தேதி (வைகாசி மாதம், அனுஷ நட்சத்திரம்) திருவள்ளுவர் தினம் அனுசரிக்கப்பட்டது. வைகாசி, அனுஷ நட்சத்திரம் என்று கொண்டாடப்படுவதால், ஆண்டுக்கு ஆண்டு, ஆங்கில நாட்காட்டியில் தேதி மாறுபாடும், அதைத் தவிர்க்க வேண்டும் என்ற கருத்து நிலவியது. தைப் பொங்கல், தமிழர் திருநாள் என்பதால், அந்த நாளை திருவள்ளுவர் தினம் என்று கொண்டாடப்பட வேண்டும் என்று தமிழறிஞர் கி.ஆ.பெ.விஸ்வநாதன், 1954 ஆம் ஆண்டு முன்மொழிந்தார்.


இதற்கு பலத்த எதிர்ப்பு இருந்தது. 1966 ஆம் ஆண்டு, ஜூன் 2 ஆம் தேதி, திருவள்ளுவர் தினமாக கொண்டாட அரசு விடுமுறை அளிக்கப்பட்டது. ஆனால், 1971 ஆம் ஆண்டு திருவள்ளுவர் தினம், தை மாதத்திற்கு மாற்றப்பட்டடு ஜனவரி 17 -ஆம் தேதி திருவள்ளுவர் தினம் அன்றுமுதல் கொண்டாடப்பட்டு வருகின்றது. 1971 ஆம் ஆண்டு, திருவள்ளுவர் ஆண்டு பற்றி, அரசின் இதழில் குறிக்கப்பட்டு, 1972ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. 1981ஆம் ஆண்டு, மதுரையில் நடந்த உலகத்தமிழ் மாநாட்டில், அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள், திருவள்ளுவர் ஆண்டை, தமிழக அரசின் ஆவணங்களில் பதிவு செய்ய அரசாணையைப் பிறப்பித்தார்.


இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பேருந்து நிலையம் அருகில் அய்யன் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு நாகை வள்ளுவர் குல சங்கத்தின் சார்பில் ஐயன் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதற்காக நாகை வள்ளுவர் குல சங்கத்தின் சார்பில் ஐயன் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு நமது நாகை வள்ளுவர் குல சங்கத்தின் சார்பில் சீர்காழி புதிய பேருந்து நிலையம் அருகாமையில் ஐயன் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதில் நமது நாகை வள்ளுவர் குல சங்கத்தின் மாவட்ட தலைவர் மாங்குடி எஸ்.பிரபாகரன் திருவள்ளுவர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் என்.எஸ் கண்ணன், மாவட்ட பொருளாளர் ஜோதி சிவா, மற்றும் சங்கத்தின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும், பொதுமக்களும் பெருந்திரளாக கலந்து கொண்டு ஐயா திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.