மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை அடுத்த அகணி கிராமத்தில், கோயில் நிலம் தொடர்பான பிரச்சினையில் பாதிக்கப்பட்ட பெண்களை, ஒரு வாட்ஸ்அப் குழுவில் கொச்சைப்படுத்தியும், தனிப்பட்ட வாழ்க்கையைத் தாக்கியும் அவதூறு செய்திகளைப் பதிவிட்ட ஓய்வு பெற்ற உதவி காவல் ஆய்வாளர் மீது சீர்காழி காவல் துறையினர் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். காவல்துறை துரிதமாகச் செயல்பட்டு நடவடிக்கை எடுத்ததற்கு பாதிக்கப்பட்ட பெண்களும், கிராம மக்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
கோயில் நிலப் பிரச்சினைதான் காரணமா?
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை அடுத்த அகணி, மன்னன்கோவில் கிராமத்தைச் சேர்ந்தவர் 45 வயதான மங்கையர்கரசி. இவர் இல்லத்தரசியாக இருந்து வருகிறார். மன்னன்கோவில் கிராமத்தில் உள்ள மன்னாதசுவாமி மற்றும் நல்லகாத்தாயி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் மங்கையர்கரசியின் குடும்பத்தினர் மற்றும் சில குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இந்நிலையில், கடந்த 18/09/2025 அன்று, இந்த நிலத்தை விட்டு உடனடியாக காலிசெய்து வெளியேற வேண்டும் என மயிலாடுதுறை இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தின் தொடர்புடைய அதிகாரிகளிடம் இருந்து அவர்களுக்கு அறிவிப்பு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த அறிவிப்பு வருவதற்கு, ஏனாக்குடி வடக்குத்தெருவைச் சேர்ந்த, 67 வயதான வீரமணி என்பவரே காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இவர் ஓய்வு பெற்ற உதவி காவல் ஆய்வாளர் ஆவார்.
அதிகாரிகளிடம் முறையிட்ட குடும்பத்தினர்
இந்த அறிவிப்பால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்ற அச்சத்தில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் ஒன்று திரண்டனர். நிலத்தை விட்டுத் தங்களை வெளியேற்றாமல், வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும் என்று கோரி, கடந்த 22/09/2025 அன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்தனர்.
அதைத் தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையரைச் சந்தித்தும் இதே கோரிக்கையை வலியுறுத்தி மனு அளித்துள்ளனர். தங்களின் வீடுகளிலிருந்து வெளியேறாமல் இருக்க வழிசெய்யுமாறு அவர்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.
வாட்ஸ்அப் குழுவில் கொச்சைப்படுத்திய முன்னாள் அதிகாரி
பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் ஆட்சியர் மற்றும் உதவி ஆணையரிடம் மனு கொடுத்தது குறித்து அறிந்த ஓய்வு பெற்ற உதவி காவல் ஆய்வாளர் வீரமணி, இதனால் கடும் கோபமடைந்ததாகத் தெரிகிறது. உடனே அவர், மனு கொடுத்த பெண்களையும், அவருடன் சென்ற ஊர்க்காரர்கள் மற்றும் அவருக்கு ஆதரவாகச் செயல்பட்டவர்களையும் குறிவைத்து, ‘நல்லகாத்தாயி அம்மன்’ என்ற பெயரில் இயங்கும் 121 பேர் கொண்ட வாட்ஸ்அப் குழுவில் அவதூறான மற்றும் கொச்சைப் படுத்தும் வகையில் கருத்துகளைப் பதிவிட்டுள்ளார்.
மேலும், அந்தப் பெண்களின் தனிப்பட்ட குடும்ப வாழ்வைச் சாடியும், பொய்யான அவதூறு செய்திகளையும் புகைப்படத்துடன் பதிவேற்றம் செய்து, அனைவருக்கும் பகிருமாறும் அந்த வாட்ஸ்அப் குழுவில் கோரியுள்ளார். இது மன்னன்கோவில் கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
காவல்துறையில் புகார், வழக்கு பதிவு
வாட்ஸ்அப்பில் நடந்த இந்த அவதூறு பிரச்சாரத்தால் பாதிக்கப்பட்ட மன்னன்கோயில் கிராமத்தைச் சேர்ந்த பெண்களும், ஊர்க்காரர்களும் ஒன்றுகூடிச் சீர்காழி காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தனர். புகாரைப் பெற்ற சீர்காழி காவல் துறையினர் உடனடியாக விசாரணை மேற்கொண்டனர். புகாரின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு, ஏனாக்குடியைச் சேர்ந்த நாகப்பன் மகன் வீரமணி மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தற்போது குற்றவாளியான வீரமணியைத் தேடும் பணியில் சீர்காழி காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
காவல்துறைக்கு கிராம மக்கள் நன்றி
சமூக வலைதளத்தில் பெண்களை அவதூறாகப் பேசிய இந்த விவகாரத்தில், துரிதமாகச் செயல்பட்டு வழக்கு பதிவு செய்த சீர்காழி காவல் நிலைய ஆய்வாளர் கமல்ராஜ் மற்றும் உதவி ஆய்வாளர் வீரராகவன் ஆகியோருக்குப் பாதிக்கப்பட்ட பெண்களும், மன்னன்கோவில் கிராமவாசிகளும் தங்களின் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் கோவில் நிலம் தொடர்பான பிரச்சினை ஒருபுறம் இருக்க, மறுபுறம் ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரியே பெண்களுக்கு எதிராக அவதூறு பரப்பிய சம்பவம், சீர்காழியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.