மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தரங்கம்பாடி சாலையில் அமைந்துள்ளது தர்மபுரத்தால் தொடங்கப்பட்ட பழமையான மருத்துவமனை கட்டிடம். இதற்கு மயிலாடுதுறையில், தருமபுரம் ஆதீனம் சார்பாக இலவச மருத்துவமனை அமைக்க, ஆதீனத்துக்குச் சொந்தமான 2 ஏக்கர் இடம் வழங்கப்பட்டு, 1951- ஆம் ஆண்டு ஜூலை மாதம், அப்போதைய சென்னை மாகாண முதல்வர் குமாரசாமிராஜாவால் திறந்து வைக்கப்பட்டு, தருமபுரம் ஆதீனம் சார்பாக, பல ஆண்டுகளாக, பலருக்கும் இலவச மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வந்துள்ளது.
நகராட்சி வசமாகிய மருத்துவமனை
பின்னர், அந்த மருத்துவமனை நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனை, இலவச மகப்பேறு மருத்துவமனையாக செயல்பட்டு வந்திருக்கிறது. இந்த நிலையில், மயிலாடுதுறை நகராட்சியின் பராமரிப்பின்மை காரணமாக, மருத்துவமனை கட்டிடம் கடந்த பல ஆண்டுகளாக செயல்படாமல், நகராட்சியும், மருத்துவமனையை புனரமைக்காத சூழலில், கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம், பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி குப்பைகளை தரம் பிரிக்க, புதிய நுண்ணுயிர் கிடங்கை நகராட்சி நிர்வாகம் கொண்டு வந்தது. தற்போது நுண்ணுயிர் கிடங்கும் செயல்படாமல், குப்பைகள் குவிந்து அப்பகுதியே சுகாதார சீர்கேடாக காணப்படுகிறது.
ஆதீனம் சார்பில் கடிதம்
தருமபுரம் ஆதீனம் சார்பாக, தாங்கள் உருவாக்கிய மருத்துவமனையை, மீண்டும் ஆதீனமே பராமரித்து நடத்த, நகராட்சிக்கு கடிதம் எழுதியும், நகராட்சி சார்பில் எந்த பதிலும் அளிக்காத நிலையில், நகராட்சி, அந்தக் கட்டிடத்தை இடிக்கவிருப்பதாக செய்திகள் கடந்த 2023 -ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகியுள்ளன. இதனை அறிந்த தருமபுரம் ஆதீனம் 25 வது குருமகா சன்னிதானம், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கட்டிடத்தை இடிக்க கூடாது என கூறி தான் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க போவதாக அறிவித்தார். அதனை தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
விளக்கம் அளித்த நகராட்சி
இது குறித்து அப்போதைய மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் “தருமபுரம் அதீனம் இலவச மருத்துவமனை கட்டடத்தை இடிக்கும் எந்த திட்டமும் இல்லை. அப்படி அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. அக்கட்டிடம் பழைய மற்றும் பயனற்று இருப்பதால், சிலர் அத்துமீறிப் பயன்படுத்துகிறார்கள். அவர்களை வெளியேற அறிவுறுத்தியுள்ளோம் என தெரிவித்துள்ளார். மேலும் அக்கட்டிடத்தில் தற்போது மருத்துவமனை இயங்கவில்லை. அங்கு இயங்கிய வந்த ஆரம்பச் சுகாதார மையம், அருகில் அரசு கட்டடம் கட்டப்பட்டதால் அங்கு மாற்றப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
மீண்டும் சர்ச்சை
இந்நிலையில் மீண்டும் நாளை பிரசவ மருத்துவமனை வளாகத்தில் நகராட்சிக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை போடப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. தருமபுரம் ஆதீன மடாதிபதி வெளி மாநில யாத்திரை சென்றுள்ள நிலையில் திமுக நகராட்சி நிர்வாகம் அவசர அவசரமாக பூமி பூஜை போடுவதற்கு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகின இதனை அடுத்து தங்களுக்கு சொந்தமான இடத்தை நகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்பு செய்ய முயற்சி செய்வதாக கண்டனம் தெரிவித்து தருமபுரம் ஆதீன 27 வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் முன்னோர்கள் கட்டிய கட்டிடத்தை உயிர் போகும் வரை அன்பர்களோடு உண்ணாவிரதம் இருந்து காப்பாற்றுவோம் என்று தெரிவித்துள்ளார். நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த சைவ ஆதீன மடத்தின் மடாதிபதி உண்ணாவிரதம் அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆதீனத்தின் முகநூல் பதிவு
தருமையாதீன 24ஆவது குருமணிகள் தம் தாயார் நினைவாக மகப்பேறு மருத்துவமனை கவர்னரால் தொடங்கப்பெற்று 25ஆவது குருமணிகள் காலத்தில் மாநில முதல்வர் மாண்புமிகு குமாரசாமிராஜா அவர்களால் திறந்து வைக்கப்பெற்றது. இதில் ஜெர்மனிய மருத்துவர் பல்லாண்டுகாலம் இருந்து பலருக்கு இலவசமாக மருத்துவம் பார்க்கப்பெற்றது. இதை நாம் ஆதீனபராமரிப்பில் நடத்த நகராட்சிக்கு எழுதியும் பதில்வராத பொழுதே அதை இடிக்கபோவதாக செய்தி வந்துகொண்டுள்ளது அப்படியொரு நிகழ்வு ஏற்படுமாயின் நம்முன்னோர்கள் அமைத்த நினைவு அமைப்பினை காக்க சாகும் உண்ணாவிரதம் இருந்து காப்போம்.