மயிலாடுதுறை அருகே பள்ளி மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டியினை வழங்கிய பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் தனது தொகுதி மாணவர்கள் அனைவருக்கும் பொதுத் தேர்வு எழுத இலவசமாக பேனா வழங்குவதாக தெரிவித்துள்ளார். அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பகுதியாக அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், பதினோராம் வகுப்பு பயிலும் மாணவர்கள் சிரமமின்றி பள்ளிக்கு செல்லும் வகையில் தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் ஒவ்வொருகல்வியாண்டும் இலவசமாக மிதிவண்டி வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தற்போது மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்தாண்டு ஒவ்ஒரு பள்ளிகளாக நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு ஒவ்வொரு தொகுதிகளுக்கும் அந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மூலம் விலையில்லா மிதிவண்டிகள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே செம்பனார்கோவில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக திமுக மாவட்ட செயலாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முருகன் பங்கேற்று 192 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
முன்னதாக நிகழ்சியில் பேசிய அவர், தமிழக அரசின் பல்வேறு சாதனைகள் குறித்து விளக்கிப் பேசினார். மாதம் தோறும் பெண்மணிகளுக்கு அரசு சார்பில் ஆயிரம் ரூபாய் வழங்கி ஊக்குவித்து வருவதாகவும், பள்ளி முடித்துவிட்டு கல்லூரி செல்லக்கூடிய மாணவிகள் இந்த ஊக்கத் தொகையை பெற இருப்பதால் நன்கு படிக்க வேண்டும் என தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து எதிர்வரும் பொது தேர்வில் தனது பூம்புகார் தொகுதியில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் சிறப்பு பூஜை செய்து பேனா வழங்க உள்ளதாகவும், எனவே மாணவர்கள் தான் பூஜை செய்து கொடுக்கும் பேனாவை மட்டும் நம்பி இல்லாமல் தங்களது திறமையை நம்பி செயல்பட்டு, பொதுத் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என அறிவுரை வழங்கினார்.