மயிலாடுதுறை மாவட்டத்தில் 2024-25 ஆண்டிற்கான மணிமேகலை விருதிற்கான 9 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 4 லட்சம் ரூபாய்க்கான காசோலையினை மாவட்ட ஆட்சியர் வழங்கியுள்ளார்.
மணிமேகலை விருது
மயிலாடுதுறை மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் சிறப்பாக செயல்படும் மகளிர் சுய உதவிக்குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், வட்டார அளவிலான கூட்டமைப்புகள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் நகர்ப்புற பகுதியில் சிறப்பாக செயல்படும் மகளிர் சுய உதவிக்குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்புகளுக்கு 2024-25 ஆம் ஆண்டு மாநில மற்றும் மாவட்ட அளவிலான சிறந்த சமுதாய அமைப்புகளை மணிமேகலை விருதிற்கு தேர்வு செய்திட மகளிர் திட்ட வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, தகுதியான சமுதாய அமைப்புகளின் தொடர்புடைய வட்டார இயக்க மேலாண்மை அலகில் சமுதாய அமைப்புகள் தேர்வு செய்யப்பட்டு மாநில அளவில் பரிந்துரைக்கப்பட்டது.
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு லட்சங்களில் பரிசு தொகை
மேலும் மணிமேகலை விருதிற்கு பரிந்துரைக்கப்ட்ட சமுதாய அமைப்புகளுக்கு தகுதியின் அடிப்படையில், மாநில அளவில் தேர்வு செய்யப்படும் வட்டார அளவிலான கூட்டமைப்பிற்கு ரூபாய் 5 லட்சம், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புக்கு ரூபாய் 3 லட்சம், கிராம வறுமை ஒழிப்பு சங்கத்திற்கு ரூபாய் 1 லட்சமும், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூபாய் 1 லட்சம் வீதமும், நகர்ப்புற பகுதிகளுக்கு பகுதி அளவிலான கூட்டமைப்பிற்கு ரூபாய் 3 லட்சம், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூபாய் 1 லட்சமும், மாவட்ட அளவில் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புக்கு ரூபாய் 1 லட்சமும், கிராம வறுமை ஒழிப்பு சங்கத்திற்கு ரூபாய் 50 ஆயிரமும், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூபாய் 25 ஆயிரமும், நகரப் பகுதிகளை சேர்ந்த பகுதி அளவிலான கூட்டமைப்பிற்கு ரூபாய் 1 லட்சமும், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தலா ரூபாய் 25 ஆயிரமும் மணிமேகலை விருதிற்கு வழங்கப்படுகிறது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மணிமேகலை விருது பெற்றவர்களின் விபரம்
அதன்படி, இன்று மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் பேரூராட்சி, மேலசெட்டித்தெரு - பகுதி அளவிலான கூட்டமைப்பிற்கு ரூபாய் 1 லட்சமும், மயிலாடுதுறை வட்டாரம், சோழம்பேட்டை - ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிற்கு ரூபாய் 1 லட்சமும், செம்பனார்கோவில் வட்டாரம், இளையாளுர் - ஊரக வறுமை ஒழிப்பு குழுவிற்கு ரூபாய் 50 ஆயிரமும், மயிலாடுதுறை நகராட்சி, சக்திஒளி மகளிர் சுய உதவிக்குழுவிற்கு ரூபாய் 25 ஆயிரமும், சீர்காழி நகராட்சி, சாராடி அம்மன் மகளிர் சுய உதவிக்குழுவிற்கு ரூபாய் 25 ஆயிரமும், சீர்காழி நகராட்சி, முத்துலெட்சுமி ரெட்டி மகளிர் சுய உதவிக்குழுவிற்கு ரூபாய் 25 ஆயிரமும், குத்தாலம் வட்டாரம், தத்தங்குடி ஊராட்சி, தென்றல் மகளிர் சுய உதவிக்குழுவிற்கு ரூபாய் 25 ஆயிரமும், குத்தாலம் வட்டாரம், பருத்திக்குடி ஊராட்சி, சரஸ்வதி மகளிர் சுய உதவிக்குழுவிற்கு ரூபாய் 25 ஆயிரமும் என மொத்தம் ரூபாய் 4 லட்சத்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கியுள்ளார். இந்நிகழ்ச்சியில், மகளிர் திட்டம் திட்ட அலுவலர் சீனிவாசன் உடன் இருந்தார்.