''பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு, கற்பனைக்கு அப்பாற்பட்ட வகையில் பதிலடி கொடுப்போம். தீவிரவாதிகளையும் அவர்களுக்குத் துணை நிற்பவர்களையும் கண்டுபிடித்து வேட்டையாடுவோம்'' என்று பிரதமர் மோடி ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். ''இந்தியாவின் ஆன்மாவைத் தாக்கி உள்ளனர். தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேசம் துணை நிற்கும்'' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் மாநிலம், பஹல்காமின் பைசரன் பள்ளத்தாக்கில் ஏப்ரல் 22ஆம் தேதி மாலை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட 28 பேர் பலியாகினர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேரும் அடங்குவர்.

பிரதமர் மோடி ஆவேசம் 

தாக்குதலுக்குப் பிறகு முதன்முதலாக பிஹார், மதுபானியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

’’ஜம்மு, காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22ஆம் தேதி, அப்பாவி மக்கள்மீது பயங்கரவாதிகள் கொடூரமாகத் தாக்குதல் நடத்தியதில் ஒட்டுமொத்த தேசமே கவலையில் உள்ளது. தெளிவான வார்த்தைகளில் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்.

கற்பனை செய்வதைக் காட்டிலும் பெரிய பதிலடி

இந்த தீவிரவாதிகளுக்கும் அவர்களுக்கு உதவியவர்களுக்கும் அவர்கள் கற்பனை செய்வதைக் காட்டிலும் பெரிய பதிலடி கொடுக்கப்படும். 140 கோடி இந்தியர்களின் மன உறுதி, தாக்குதல்காரர்களை முறியடிக்கும்.  

இன்று பிஹார் மண்ணில், நான் முழு உலகத்திற்கும் கூறுகிறேன், இந்தியா ஒவ்வொரு பயங்கரவாதியையும், அவர்களை ஆதரிப்பவர்களையும் அடையாளம் கண்டுபிடித்து தண்டிக்கும். பூமியின் முனைகள் வரை அவர்கள் சென்றாலும் துரத்திப் பிடிப்போம்.

இந்தியாவின் ஆன்மா பயங்கரவாதத்தால் ஒருபோதும் சிதைக்கப்படாது. பயங்கரவாதம் தண்டிக்கப்படாமல் போகாது. நீதி நிலைநாட்டப்படுவதை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். இந்த நிலையில் முழு தேசமும் ஒன்றுபட்டுள்ளது.

நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள்

மனிதநேயத்தில் நம்பிக்கை கொண்ட அனைவரும் நம்முடன் உள்ளனர். இந்த நேரத்தில் நம்முடன் நின்ற பல்வேறு நாடுகளின் மக்களுக்கும் அவற்றின் தலைவர்களுக்கும் நான் நன்றி கூறுகிறேன்.

தீவிரவாதிகளுக்கான தண்டனை கடுமையானதாகவும் குறிப்பிடத்தக்க வகையிலும் இருக்கும், அவர்கள் இதைப் பற்றி ஒருபோதும் நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டார்கள்."

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.