மயிலாடுதுறை அருகே தேங்காய் சிரட்டையை பயன்படுத்தி பிளாஸ்டிக்கிற்க்கு மாற்றமாக பல்வேறு கைவினைப் பொருட்களை உருவாக்கி சகோதரரிகள் இருவர் அசத்தி வருகின்றனர்.


நம்முடன் பிறந்த சகோதரி என்பவள் எப்போதும் இயற்கை நமக்கு அளித்த சிறந்த சினேகிதி என பழமொழியில் கூறுவார்கள். அது போன்று நீ வேறு நான் வேறு இல்லை நாம் இருவரும் ஒன்றிணைந்தால் சாதிக்கலாம் என்பதற்கு உதாரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் சகோதரிகள் ஒன்றிணைந்து கைவினை பொருட்கள் செய்து அசத்தி வருகின்றனர். அக்காவிற்கு சிறந்த சினேகிதியாக இருவரும் இணைந்து செய்து வரும் அற்புதங்கள் என்ன என்பது பற்றி இச்செய்தி தொகுப்பில் காணலாம்.




ஆக்கூர் கிராமத்தை சேர்ந்த சகோதரிகள் 


மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா ஆக்கூர் கிராமத்தில் வசித்து வருபவர்கள் ராமமூர்த்தி மற்றும் அருள் மங்கை தம்பதியினர். இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ள நிலையில் மூத்த மகள் அக்க்ஷயா முதுகலை இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவரின் மூன்றாவது மகள் யுவஸ்ரீ அரசு பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வருகிறார். இருவரும் கொரோனா காலகட்டத்தில் பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக புதியதாக கைவினைப் பொருட்களை செய்ய வேண்டும் என்ற நோக்கில் தேங்காய் சிரட்டைகளை சேகரித்து அவற்றில் கலை பொருட்களை செய்து புதிய முயற்சிகளை மேற்கொண்டனர்.




தேங்காய் சிரட்டைகளில் கலைப்படைப்புகள்


நாளடைவில் முட்டை ஓடுகள் மற்றும் கண்ணாடி பாட்டில்களில் விழிப்புணர்வு ஓவியம் வரைந்தனர். பின்னர் மேசையில் அலங்காரத்திற்கு வைக்கக்கூடிய பொருட்கள், தண்ணீர் அருந்துவதற்கான கப் உள்ளிட்டவற்றை தேங்காய் சிரட்டையை பயன்படுத்தி தயாரித்துள்ளனர். தொடர்ந்து சிறிய ரக பிளேடை மட்டுமே பிரதானமாக பயன்படுத்தி தேங்காய் சிரட்டையில் பல்வேறு பொருட்களை செய்ய துவங்கியுள்ளனர். அக்காவிற்கு உதவியாக தங்கை யுவஸ்ரீ தேங்காய் சிரட்டையில் மீதமானவற்றை ஒன்றாக சேகரித்து அதனை எரித்து அத்துகள்கள் மூலம் தேங்காய் சிரட்டையில் செய்யும் கைவினைப் பொருட்களுக்கு வர்ணம் பூசி தயார் செய்துள்ளார்.  






கரி துகள்களில் கலக்கும் ஓவியங்கள் 


மேலும் முழுக்க முழுக்க கெமிக்கல் பயன்படுத்திய வர்ணத்தை பூசி இக்காலகட்டத்தில் ஓவியம் வரைந்து வருபவர்கள் மத்தியில் தேங்காய் சிரட்டையை எரித்து அதில் வரும் கரி துகள்களை பயன்படுத்தி தத்ரூபமாக தங்கை ஓவியங்களை வரைந்து அசத்தி வருகிறார். இவர்கள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று தனித் திறமைகளை வெளிப்படுத்திய நிலையில், பலரும் இவர்களின் கைவினைப் பொருட்களை வாங்குவதற்கு ஆர்வமுடன் முன் வந்தனர். 




படிக்கும்போதே பணம்..


இருவரும் படித்துக் கொண்டு கிடைக்கும் நேரங்களில் தேங்காய் சிரட்டையை பயன்படுத்தி தேனீர் கோப்பை, கலைப் பொருள், தண்ணீர் கப் மற்றும் கிண்ணம் உள்ளிட்டவற்றை தயாரித்து வருகின்றனர். அதனை பலருக்கும் விற்பனை செய்து குறிப்பிட்ட அளவிலான லாபத்தையும், படிக்கும் வயதிலேயே ஈட்டி வருவது கூடுதல் சிறப்பம்சமாகும். அந்தத் தொகையை இருவரும் வீட்டை எதிர்பார்க்காமல் தங்களது கல்விச் செலவுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.




மேலும், பிளாஸ்டிகிற்கு மாற்றாக இதுபோன்று வித்தியாசமான கைவினைப் பொருட்களை செய்து சந்தைகளில் அறிமுகப்படுத்தி விற்பனை செய்யலாம் எனவும், மேலும் கல்லூரி படிப்பை நிறைவு செய்த பிறகு சுய தொழில் தொடங்குவதற்கு அரசு உதவினால் ஏதுவாக இருக்கும் என அக்க்ஷயா கோரிக்கை விடுத்துள்ளார். எதிர்காலத்தில் இதுபோன்று கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் முறையை அனைவருக்கும் இலவசமாக கற்றுத்தருவேன் என உற்சாகத்துடன்  தெரிவித்துள்ளார்.