மயிலாடுதுறை அருகே சாலை நடுவில் பாலம் கட்டுமானத்துக்காக தோண்டப்பட்ட குழியில் தவறி விழுந்த இளைஞரின் தலையில் கம்பி குத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சாலை விரிவாக்க பணி
மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் நெடுஞ்சாலை கடந்த சில மாதங்களாக அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் பணியால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். சாலை அகலப்படுத்தும் பணிக்காக சாலையை கடந்து செல்லும் பாலங்கள் அனைத்தும் தற்போது இடிக்கப்பட்டு, புதிய பாலங்கள் சாலைக்கு தக்கவாறு அகலப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
எச்சரிக்கை பதாகைகள் இல்லாமல் நடைபெறும் பணி
இதற்காக சாலையின் குறுக்கே இருந்த பழைய சிறு பாலங்கள் இடித்து அகற்றப்பட்டு புதிய பாலங்களின் கட்டுமான பணி பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மயிலாடுதுறை அருகே எலந்தங்குடி என்ற இடத்தில் பழைய பாலத்தினை அகற்றி விட்டு புதிதாக பாலம் கட்டி வருகின்றனர். இந்நிலையில் அதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தை நெடுஞ்சாலை துறையினர் இரவில் போதிய அளவு சாலை தடுப்பான் கொண்டு மூடாமல், அரைகுறையாக மூடி விட்டு எவ்விதமான எச்சரிக்கை பதாகைகளும் வைக்காமல் இருந்துள்ளனர்.
பள்ளத்தில் வீழ்ந்த இளைஞர்
இந்த சூழலில் இந்த பள்ளத்தில் நேற்று இரவு சுமார் 11 மணி அளவில் வழுவூர் கிராமத்தை சேர்ந்த இளங்கோ என்பவரது மகன் 25 வயதான மணிகண்டன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது இரவில் பள்ளம் இருப்பது தெரியாமல் தடுமாறி பள்ளத்தில் வாகனத்தோடு விழுந்துள்ளார். இதில் பாலத்தின் கட்டுமானத்துக்காக அமைக்கப்பட்டிருந்த கம்பியில் மணிகண்டனின் தலை குத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இரவு வேலை என்பதால் ஆட்கள் நடமாட்டம் குறைவாக இருந்ததால் அவர் விழுந்ததை உடனடியாக யாரும் பார்க்க முடியாமல் போய் உள்ளது.
பொதுமக்கள் போராட்டம்
இதனை அடுத்து அப்பகுதி மக்கள் சம்பவ இடத்திற்கு வந்து போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தராத நெடுஞ்சாலை துறைக்கு எதிராக மணிகண்டனின் உடலை எடுக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் காவல்துறையினர் சுமார் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக பேச்சுவார்த்தை நடத்தி இது தொடர்பாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர். அதனை அடுத்து மணிகண்டனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மயிலாடுதுறை அரசினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து பெரம்பூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமூக ஆர்வலர்கள் கண்டனம்
மேலும் இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், மயிலாடுதுறையிலிருந்து திருவாரூருக்கு சாலை அகலப்படுத்தும் பணி கடந்த ஒரு வருடங்களாக நடைபெற்று வருகிறது. ஆனால் இந்தப் பணி முடிய பாதுகாப்பு வசதிகள் ஏதும் செய்யப்படாமல் மிகவும் ஆபத்தான முறையில், பணி செய்யும் பணியாளர்கள் மட்டுமின்றி சாலையில் பயணிக்கும் பொது மக்களுக்கும் பேராபத்தை விளைவிக்கும் வண்ணம் சாலை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் சாலை அமைக்கும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் குறித்து எந்த ஒரு இடத்திலும் அறிவிப்பு பலகைகளோ, தடுப்புகளோ இது நாள் வரை வைத்ததில்லை.
மேலும் மயிலாடுதுறை திருவாரூர் சாலையில் இந்த பள்ளத்தில் ஏராளமானோர் விழுந்து விபத்துக்கு உள்ளாகி வருகின்றனர். எல்லாவற்றிற்கும் மேலாக இன்று ஒரு இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஆகையால் பாதுகாப்பு வசதிகள் ஏதும் செய்யாமல் பொதுமக்களின் உயிர் மீது அக்கறையின்றி செயல்படும் சாலை ஒப்பந்ததாரை உடனடியாக கைது செய்ய வேண்டும். மேலும் இது போன்ற விபத்துகள் ஏற்படாத வண்ணம் உரிய பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.