மயிலாடுதுறை அருகே விஷம் கலந்த மதுவை குடித்த இளைஞர் இறந்த வழக்கில் திடீர் திருப்பமாக நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட முன்விரோதத்தால் மதுபானத்தில் விஷத்தை கலந்து கொடுத்து நண்பனை கொலை செய்துவிட்டு தானும் விஷமருந்தி மருத்துவமனையில் சேர்ந்து நாடகமாடுவதாக குற்றம்சாட்டி உயிரிழந்த இளைஞரின் உடலை சாலையில் வைத்து உறவினர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


விஷம் கலந்த மதுவை குடித்த இளைஞர்கள்


மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பெரம்பூர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பில்லாவிடந்தை கிராமத்தை சேர்ந்தவர் 32 வயதான ஜோதிபாசு. இவர் தனது மனைவியிடம் அடிக்கடி சண்டையிட்டு வந்ததால் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் சில மாதங்களுக்கு முன்பு மனைவி சகிலா பிரிந்து கோயமுத்தூருக்கு சென்றுவிட்டார். மனைவியை ஊருக்கு வரசொல்லி வராததால் விரக்தியில் இருந்த ஜோதிபாசு கடந்த 9-ம் தேதி மாலை மதுவில் விஷம் கலந்து குடித்துகொண்டிருந்தபோது அதே பகுதியை சேர்ந்த 24 வயதான ஜெரால்டு என்பவர் ஜோதிபாசு வைத்திருந்த விஷம் கலந்த மதுவை எடுத்து குடித்ததால் இருவரும் மயிலாடுதுறை அரசு மருத்துவனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அதில் ஜெரால்டு 9-ம் தேதி இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தாக கூறப்பட்டது.




இயற்கைக்கு மாறான மரணமாக வழக்குப்பதிவு 


இதுகுறித்து அவரது தாயார் மேரிஸ்டெல்லா அளித்த புகாரின் பேரில் இயற்கைக்கு மாறான மரணமாக (194) வழக்குப்பதிவு செய்த பெரம்பூர் காவல்துறையினர் ஜெரால்டு உடலை உடற்கூறு ஆய்வு செய்து, நேற்று அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். தற்கொலைக்கு முயற்சித்த ஜோதிபாசு மேல்சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். 




திடீர் திருப்பம்


இந்நிலையில் கணவரை பிரிந்துவாழும் பெண் ஒருவருடன் ஜோதிபாசு மற்றும் ஜெரால்டுக்கும் பழக்கம் இருந்ததாகவும், இருவருக்கும் இடையேயான பழக்கம் தொடர்பாக ஜெரால்டு ஜோதிபாசு இடையே முன்விரோதம் இருந்ததால் ஜோதிபாசு திட்டமிட்டு மதுவில் விஷத்தை கலந்து கொடுத்து, ஜெரால்டை கொலை செய்துள்ளார் என்று குற்றம்சாட்டிய உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் இவ்வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து ஜோதிபாசுவை கைது செய்ய வேண்டும். மேலும் இறந்த ஜெரால்டு குடும்பத்திற்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கூறி பில்லாவிடந்தையில் இருந்து கடலி கிராமத்தில் செம்பனார்கோவில் - நல்லாடை மெயின்ரோட்டில் ஜெரால்டு உடலை அடக்கம் செய்யாமல் கொண்டு வந்து சாலையில் போட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 




சாலையில் வைக்கப்பட்ட உடல்


தனது மகன் ஜெரால்டை ஜோதிபாசு அவரது சகோதரர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தாக்கிதாகவும், அதனைத் தொடர்ந்து தற்பொது மதுவில் விஷம் கலந்துகொடுத்து கொலை செய்துவிட்டனர் என்று குற்றம்சாட்டினார். இச்சம்பவம் அறிந்து வந்த மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் திருப்பதி, தரங்கம்பாடி வட்டாட்சியர் மகேஷ் ஆகியோர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இரண்டு நாளில் விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.




ஆனால் அதனை ஏற்காமல் பிரீசர் பாக்ஸ்சை கொண்டுவந்து ஜெரால்டு உடலை அதில் வைத்து   6 மணி நேரத்திற்கு மேலாக சாலைமறியல் போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால் செம்பனார்கோவில் நல்லாடை சாலையில் போக்குவரத்து மாற்றிவிடப்பட்டது. தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக எழுத்துபூர்வமாக உறுதியளித்ததன் பேரில் 6 மணி நேர போராட்டத்தை விலக்கி கொண்டு ஜெரால்டு உடலை சாலையில் இருந்து எடுத்து சென்று அடக்கம் செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.