சீர்காழி, ஜூலை 17:மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள விளந்திடசமுத்திரம் கிராமத்தில் அமைந்துள்ள, மிக பழமையான மற்றும் புகழ்பெற்ற அருள்மிகு பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் ஆடி மாத தீமிதி திருவிழா தற்பொழுது மிக விமரிசையாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம் மற்றும் பறவை காவடி எடுத்து வந்து அம்மனுக்கு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

Continues below advertisement

ஆடி மாத உத்சவமும் காப்பு கட்டுதலும்

விளந்திடசமுத்திரம் கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் பத்திரகாளி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் தீமிதி திருவிழா மற்றும் பால்குடப் பெருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டிற்கான ஆடி திருவிழா உத்சவம் கடந்த 8-ம் தேதி புதன்கிழமை அன்று மங்கள இசை மற்றும் சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்வு மிக விமரிசையாக நடைபெற்றது. காப்பு கட்டிய நாள் முதல், விரதமிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினசரி அம்மனை தரிசித்து, விழாவிற்கான ஏற்பாடுகளைச் செய்து வந்தனர்.

பறவை காவடி மற்றும் பால்குட ஊர்வலம்

விழாவின் மிக முக்கிய மற்றும் சிகர நிகழ்வான பால்குடம் மற்றும் காவடி எடுத்தல் திருவிழா இன்று  விமரிசையாகத் தொடங்கியது. இதையொட்டி, இப்பகுதியைச் சேர்ந்த படித்துறை ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து திரளான பக்தர்கள் திரண்டனர். அங்கு அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு, விரதமிருந்த பெண் பக்தர்கள் தங்களது தலைகளில் பால்குடங்களை ஏந்தி பக்தி முழக்கமிட்டனர்.

Continues below advertisement

மேலும், நேர்த்திக்கடன் செலுத்தவிருந்த ஆண் பக்தர்கள் மற்றும் இளைஞர்கள் தங்களது உடம்பில் பல்வேறு வடிவங்களில் அலகுகள் குத்திக்கொண்டும், விசித்திரமான முறையில் வான்வெளியில் தொங்கியபடி வரும் பறவை காவடி, மயில் தோகைகளால் அலங்கரிக்கப்பட்ட அலகு காவடி மற்றும் வண்ணமயமான கரகம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு ஊர்வலமாகப் புறப்பட்டனர்.

பக்தர்களின் பக்தி முழக்கம்

ஊர்வலம் புறப்பட்டபோது மங்கள கரமான மேளதாளங்கள் முழங்க, கண்கவர் வானவேடிக்கைகள் அதிர, "ஓம் சக்தி, பராசக்தி" என்ற பக்தர்களின் பக்தி கோஷம் விண்ணைத் தொடும் அளவுக்கு எதிரொலித்தது.

முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம்

படித்துறை ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து புறப்பட்ட இந்த பிரம்மாண்ட பால்குட ஊர்வலம், நகரின் முக்கிய வீதிகளான, * புழுகாபேட்டை தெரு * சீர்காழி பழைய கடைவீதி * கொள்ளிடம் முக்கூட்டு சாலை * தாடாளன் கோவில் தெருஉள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக, பக்தி பரவசத்துடன் அசைந்தாடி வந்தது. ஊர்வலம் சென்ற பாதையெங்கும் சாலையின் இருபுறங்களிலும் திரளான பொதுமக்கள் திரண்டு நின்று, காவடி மற்றும் பால்குடம் எடுத்து வந்த பக்தர்களுக்கு குளிர்ந்த நீர் தெளித்தும், மாரியம்மன் மற்றும் பத்திரகாளி அம்மனை மனமுருகி வழிபட்டனர்.

அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் வழிபாடும்

நகர வீதிகளை வலம் வந்த பால்குட ஊர்வலம் இறுதியாக விளந்திடசமுத்திரம் பத்திரகாளி அம்மன் கோவிலை வந்தடைந்தது. அதன் பின்னர், பக்தர்கள் கொண்டு வந்த புனித பால் குடங்களில் இருந்த பால், அம்மனுக்கு ஊற்றப்பட்டு மகா அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர். மாலை விழாவின் இறுதி கட்டமான தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் விரதம் இருந்த பக்தர்கள் தீ மிதித்து தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தினர்.