சீர்காழி, ஜூலை 17: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று மாலை நடத்திய அதிரடி சோதனையில், கணக்கில் வராத ரூ.42,770 ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், தாசில்தாரின் வங்கி கணக்கிற்கு அவரது ஓட்டுநர் மற்றும் உதவியாளர் மூலமாக டிஜிட்டல் முறையில் லஞ்சப் பணம் பரிமாறப்பட்டதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

பொதுமக்கள் புகார் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை

சீர்காழி தாலுகா அலுவலகத்தில் பட்டா மாறுதல், சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு அரசுச் சேவைகளைப் பெற வரும் பொதுமக்களிடம் அங்கிருக்கும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பெருமளவில் லஞ்சம் கேட்பதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன. இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாருக்கு ரகசியத் தகவல்களும், தொடர் புகார்களும் சென்ற வண்ணம் இருந்தன. இதனடிப்படையில், லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சீர்காழி தாலுகா அலுவலகத்தைக் கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில், இன்று மாலை லஞ்ச ஒழிப்புத் துறை இன்ஸ்பெக்டர் அருள் பிரியா தலைமையிலான போலீசார், மயிலாடுதுறை தாலுகா வட்ட வழங்கல் தாசில்தார் சுகுமாரன் முன்னிலையில், சீர்காழி தாலுகா அலுவலகத்திற்குள் திடீரென நுழைந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

Continues below advertisement

அலுவலகக் கதவுகள் அடைப்பு: தீவிர சோதனை

சோதனை தொடங்கப்பட்டவுடன் தாலுகா அலுவலகத்தின் அனைத்து வெளிவாயில் கதவுகளும் மூடப்பட்டன. உள்ளே இருந்த அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் வெளியில் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அதேபோல வெளியிலிருந்து யாரும் உள்ளே வரவும் தடை விதிக்கப்பட்டது.லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் அருள் பிரியா தலைமையிலான குழுவினர், தாலுகா அலுவலகத்தில் உள்ள ஒவ்வொரு பிரிவிலும் தீவிர சோதனையை மேற்கொண்டனர்.

குறிப்பாக, சீர்காழி தாசில்தார் ராஜரத்தினத்தின் அறை, அவரது ஓட்டுநர் அமர்ந்திருந்த இடம் மற்றும் அங்கு பணியில் இருந்த கிராம நிர்வாக அலுவலர்களின் (VAO) ஆவணங்கள் மற்றும் உடமைகள் தீவிரமாகச் சோதனை செய்யப்பட்டன.

ரூ.42,770 ரொக்கம் பறிமுதல்

பல மணி நேரம் நீடித்த இந்த அதிரடி சோதனையின் முடிவில், கணக்கில் வராத லஞ்சப் பணம் ரொக்கமாகக் கைப்பற்றப்பட்டது. தாசில்தார் ராஜரத்தினம், அவரது அரசு வாகன ஓட்டுநர் (டிரைவர்) மற்றும் அலுவலகத்தில் இருந்த இரண்டு கிராம நிர்வாக அலுவலர்கள் (VAO) ஆகியோரிடமிருந்து உரிய ஆவணங்கள் இல்லாத ரூ. 42,770 ரொக்கப் பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். இந்தப் பணம் பொதுமக்களிடமிருந்து பல்வேறு சேவைகளுக்காக இன்று ஒரே நாளில் லஞ்சமாகப் பெறப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

டிஜிட்டல் ஊழல்: ‘ஜி-பே’ மூலம் ரூ.1.16 லட்சம் பரிமாற்றம்!

ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கைபேசிகள் (Mobile Phones) மற்றும் வங்கி கணக்கு விபரங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கே அதிர்ச்சியளிக்கும் ஒரு முக்கியத் தகவல் வெளிச்சத்திற்கு வந்தது.தற்போதைய சீர்காழி தாசில்தார் ராஜரத்தினம் இந்த அலுவலகத்தில் பொறுப்பேற்று வெறும் 3 மாதங்களே ஆகிறது. ஆனால், இந்த குறுகிய காலத்திற்குள் அவரது வங்கி கணக்கிற்கு, அவரது ஓட்டுநர் மற்றும் உதவியாளரின் வங்கி கணக்குகளில் இருந்து ‘ஜி-பே’ (G-Pay) என்ற டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை செயலி மூலம் மொத்தம் ரூ. 1,16,500 அனுப்பப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையின்படி

 பொதுமக்கள் மற்றும் புரோக்கர்களிடம் இருந்து நேரடியாகத் தாசில்தார் லஞ்சப் பணத்தைப் பெறாமல், தனது ஓட்டுநர் மற்றும் உதவியாளரின் ஜி-பே கணக்குகளுக்குப் பணத்தை அனுப்பச் சொல்லியுள்ளார். பின்னர் அவர்கள் மூலமாக அந்தப் பணம் தாசில்தாரின் தனிப்பட்ட வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வருவாய்த்துறையினர் மத்தியில் பரபரப்பு

தாலுகா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாகப் புகுந்து சோதனை நடத்திய சம்பவம் சீர்காழி மற்றும் மயிலாடுதுறை மாவட்ட அரசு வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. லஞ்சப் பணம் வாங்குவதற்கு டிஜிட்டல் முறையைப் பயன்படுத்திய தாசில்தார் மற்றும் அதற்குத் துணையாக இருந்த ஓட்டுநர், உதவியாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் மீது துறை ரீதியான மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகள் பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது. இச்சம்பவம் சீர்காழி பகுதியில் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.