மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி மற்றும் குத்தாலம் அரசு மருத்துவமனைகளில் நிலவி வரும் கடுமையான மருத்துவர்கள் பற்றாக்குறை, செவிலியர்கள் இல்லாமை மற்றும் மருத்துவ உபகரணங்களின் பழுது போன்ற காரணங்களால், சிகிச்சை பெறவரும் ஏழை எளிய பொதுமக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். கோடிக்கணக்கில் செலவு செய்து புதிய கட்டிடங்கள் மற்றும் அதிநவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தாலும், உரிய பணியாளர்கள் நியமிக்கப்படாததால் ஏழை மக்களின் மருத்துவக் கனவு கேள்விக்குறியாகியுள்ளது.

Continues below advertisement

சீர்காழி அரசு மருத்துவமனை: புதிய சிடி ஸ்கேன் இயந்திரம் பழுது மற்றும் மருத்துவர்கள் குறைபாடு

மயிலாடுதுறை மாவட்டத்தின் முக்கியப் பகுதிகளுள் ஒன்றான சீர்காழி அரசு மருத்துவமனைக்கு, இப்பகுதியைச் சுற்றியுள்ள ஏராளமான கிராமங்கள் மற்றும் நகர்ப்புறப் பகுதிகளைச் சேர்ந்த 2,000-க்கும் மேற்பட்ட நோயாளிகள் தினமும் வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கைகளை ஏற்று, இந்த மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உயர்தர சிகிச்சை வழங்கும் நோக்கில் அதிதீவிர சிகிச்சை பிரிவு (ICU) கட்டிடம் புதிதாகக் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.

எனினும், இவ்வளவு பிரம்மாண்டமான புதிய கட்டிடம் பயன்பாட்டுக்கு வந்தும், போதிய அளவில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நியமிக்கப்படவில்லை. இதன் காரணமாக, அங்கு அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்குத் தடையான மற்றும் முறையான சிகிச்சைகளை வழங்க முடியாத சூழல் மருத்துவர்களுக்கே ஏற்பட்டுள்ளது.

Continues below advertisement

இதற்கிடையில், மருத்துவமனையில் புதிதாக நிறுவப்பட்ட சிடி ஸ்கேன் இயந்திரம் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாகப் பழுதடைந்து எவ்வித பயனுமின்றி முடங்கிக்கிடக்கிறது. அரசு மருத்துவமனைக்கு வரும் ஏழை நோயாளிகள் இலவசமாக அல்லது குறைந்த செலவில் சிடி ஸ்கேன் எடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு பொய்த்துப் போயுள்ளது. இயந்திரம் பழுதானதால், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் ஸ்கேன் எடுக்க நோயாளிகள் கட்டாயமாகத் தனியார் ஸ்கேன் மையங்களுக்கு அனுப்பப்படுகிறார்கள்.

தனியார் மையங்களில் அதிகக் கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயத்தால், அன்றாடக் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தும் ஏழை எளிய நோயாளிகள் தங்களின் பொருளாதாரச் சுமையைத் தாங்க முடியாமல் கண்ணீருடன் திரும்பிச் செல்வதாகவும், சிலர் கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.

குத்தாலம் அரசு மருத்துவமனை: மருத்துவர்கள் பற்றாக்குறையும் இரவு நேர அவலமும்

இதேபோன்று, மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள குத்தாலம் அரசு மருத்துவமனையிலும் முறையான மருத்துவப் பணியாளர்கள் இல்லாததால் மருத்துவ சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இப்பகுதி பொதுமக்களின் நலன் கருதி, கூடுதல் படுக்கை வசதிகள் கொண்ட பிரம்மாண்டமான புதிய கட்டிடங்கள் சமீபத்தில் கட்டப்பட்டுள்ளன. ஆனால், கட்டிடங்கள் பெரிதாகி என்ன பயன்? நோயாளிகளைச் கவனித்துக்கொள்ளப் போதுமான மருத்துவர்கள் இல்லையே என்ற கேள்வி எழுந்துள்ளது.

குத்தாலம் அரசு மருத்துவமனையை நம்பி, சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த விவசாயக் கூலித் தொழிலாளிகளும், ஏழை எளிய நடுத்தர மக்களுமே அதிகளவில் தினமும் வந்து செல்கின்றனர். இந்த மருத்துவமனையில் சுமார் 8 மருத்துவர்கள் பணியில் இருக்க வேண்டிய அவசியமான சூழலில், தற்போது வெறும் 4 மருத்துவர்கள் மட்டுமே ஒட்டுமொத்தப் பணியையும் கவனித்து வருகின்றனர். இதனால், வெளி நோயாளிகள் பிரிவில் மக்கள் நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் காத்திருந்து சோர்வடைந்து போகின்றனர்.

மிகவும் கவலைக்குரிய விஷயமாக, இரவு நேரங்களில் பெரும்பாலான வேளைகளில் மருத்துவர்கள் இல்லாத நிலை நிலவுகிறது. இரவு நேரங்களில் விபத்துகளில் சிக்குபவர்கள், மாரடைப்பு அல்லது கடுமையான உடல்நலக் குறைவால் வருபவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் இல்லாததால், அவர்கள் மேல் சிகிச்சைக்காக வேறு ஊர்களுக்கு அனுப்பப்படும் அவலம் தொடர்கிறது.

மேலும், காலை நேரங்களில் மருத்துவர்களின் எண்ணிக்கைக் குறைவு காரணமாக ஏற்படும் கடுமையான கூட்ட நெரிசலால், மருத்துவமனைக்கு வரும் விவசாயக் தொழிலாளர்களின் தினசரி வேலைகளும் கூலி வேலைக்குச் செல்லும் நேரமும் தாமதமாகிறது. இதனால் ஒரு நாள் கூலி வீணாகி, அவர்களின் அன்றாட வாழ்க்கைவாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.

பொதுமக்களின் தவிப்பும் தமிழக அரசுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கையும்

சீர்காழி மற்றும் குத்தாலம் ஆகிய இரண்டு அரசு மருத்துவமனைகளிலும் நிலவும் இந்த உள்கட்டமைப்பு மற்றும் மனிதவளப் பற்றாக்குறை குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கும் சுகாதாரத்துறைக்கும் பலமுறை கோரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தாலும், இதுவரை உரிய நிரந்தரத் தீர்வு எட்டப்படவில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

சீர்காழி மருத்துவமனைக்கு: புதிதாகக் கட்டப்பட்டுள்ள தீவிர சிகிச்சை பிரிவிற்குத் தேவையான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை உடனடியாக நியமிக்க வேண்டும். மேலும், இரண்டு மாதங்களாக முடங்கி கிடக்கும் சிடி ஸ்கேன் இயந்திரத்தை உடனடியாகத் பழுது நீக்கி மக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும்.

குத்தாலம் மருத்துவமனைக்கு: காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்களை உடனடியாக நிரப்பி, 24 மணி நேரமும் சுழற்சி முறையில் மருத்துவர்கள் பணியில் இருப்பதை உறுதி செய்து இரவு நேரச் சேவையைப் பலப்படுத்த வேண்டும்.

அரசு மருத்துவமனைகளை நம்பிவரும் ஏழை, எளிய மக்களின் உயிரைக் காக்கும் வகையில், தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாகத் தலையிட்டு சீர்காழி மற்றும் குத்தாலம் மருத்துவமனைகளின் குறைகளை விரைந்து களைய வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் தற்போதைய ஒட்டுமொத்தக் கோரிக்கையாக உள்ளது.