மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே பத்தாம் வகுப்பு மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவரை மணல்மேடு காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆசிரியரின் தொடர் பாலியல் சீண்டல்களால் மாணவி இந்த விபரீத முடிவை எடுத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Continues below advertisement

குற்ற பின்னணி

மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு காவல் சரகத்திற்கு உட்பட்ட ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, அங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்தார். சமீபத்தில் பொதுத்தேர்வு எழுதி முடித்திருந்த அந்த மாணவி, கோடை விடுமுறையில் வீட்டில் இருந்து வந்துள்ளார்.

கடந்த மாதம் 27-ஆம் தேதி, எதிர்பாராத விதமாக வீட்டின் பூஜை அறைக்குள் சென்ற மாணவி, கதவைத் தாழிட்டுக்கொண்டு தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர், கதவை உடைத்து மாணவியை மீட்டனர். பலத்த தீக்காயங்களுடன் இருந்த அவரை உடனடியாக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி கடந்த 28-ஆம் தேதி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

Continues below advertisement

தாயின் புகார் மற்றும் திடுக்கிடும் தகவல்கள்

மாணவியின் மரணம் குறித்து அவரது தாய் மணல்மேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரில் அவர் குறிப்பிட்டிருந்த தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின:

"எனது மகள் பயின்ற பள்ளியில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றி வரும் கார்த்திகேயன் (42) என்பவர், அடிக்கடி எனது மகளின் செல்போனுக்கு அழைத்து தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இது குறித்து எனக்குத் தெரியவந்ததும், நான் அந்த ஆசிரியரைக் கண்டித்தேன். இதனால் மனமுடைந்த எனது மகள் தற்கொலை செய்து கொண்டார்." ஆரம்பத்தில் இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சந்தேக மரணம் (194 BNSS) என வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.

மக்கள் போராட்டம் மற்றும் காவல்துறை நடவடிக்கை

காவல்துறையினர் மெத்தனமாகச் செயல்படுவதாகக் கூறி, பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்களும் கிராம மக்களும் கடும் கொந்தளிப்படைந்தனர். சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். "ஆசிரியர் கொடுத்த பாலியல் தொல்லை தான் மாணவியின் மரணத்திற்கு நேரடி காரணம், எனவே அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்ய வேண்டும்" என முழக்கமிட்டனர்.

இதனைத் தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது. மாணவியின் செல்போன் தரவுகள் மற்றும் குறுஞ்செய்திகளை ஆய்வு செய்ததில், ஆசிரியர் கார்த்திகேயன் அந்தச் சிறுமிக்குத் தொடர்ச்சியாக மெசேஜ் அனுப்பியும், ஆபாசமாகப் பேசியும் பாலியல் ரீதியான தொந்தரவுகளைக் கொடுத்து வந்தது உறுதியானது.

ஆசிரியர் கைது - சிறையில் அடைப்பு

விசாரணையில் குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டதையடுத்து, வழக்கை மாற்றியமைத்த காவல்துறையினர், ஆசிரியர் கார்த்திகேயன் மீது, தற்கொலைக்குத் தூண்டுதல், போக்சோ (POCSO) சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். தலைமறைவாக இருந்த கார்த்திகேயனைப் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அவர் தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா, மனக்குண்ணம் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதும், இவருக்குக் காதல் திருமணமாகி ஏற்கனவே இரண்டு பிள்ளைகள் இருப்பதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட கார்த்திகேயன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

சமூகத்தின் கவலை

கல்வி புகட்டும் ஆசிரியரே, மாணவியின் உயிரிழப்பிற்குக் காரணமாக இருந்த சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அரசுப் பள்ளிகளில் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யக் கூடுதல் கண்காணிப்பு தேவை எனப் பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்கொலை எண்ணம் இருந்தால் அல்லது மன உளைச்சலில் இருந்தால், உதவிக்கு 104 (தமிழக அரசு உதவி எண்) அல்லது சிநேகா தற்கொலை தடுப்பு மையம் 044-24640050 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.