மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்காவிற்கு உட்பட்ட ஆறுபாதி கிராமத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு கீழ மாரியம்மன் ஆலயத்தின் 35-ஆம் ஆண்டு தீமிதி திருவிழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. பக்தி கோஷங்கள் முழங்க நடைபெற்ற இந்த விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தீக்குண்டம் இறங்கி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

Continues below advertisement

திருவிழா தொடக்கம்

ஆறுபாதி கிராமத்தின் காவல் தெய்வமாக விளங்கும் கீழ மாரியம்மன் ஆலயத்தில் ஆண்டுதோறும் சித்திரை அல்லது வைகாசி மாதத்தில் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான 35-ஆம் ஆண்டு பெருவிழா கடந்த 21-ஆம் தேதி அன்று கொடியேற்றம் மற்றும் காப்புக் கட்டுதலுடன் வெகு விமர்சையாகத் தொடங்கியது.காப்பு கட்டிய நாள் முதல், நாள்தோறும் அம்மனுக்குப் பல்வேறு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு வந்தன. தினந்தோறும் இரவு நேரங்களில் அம்மன் வெவ்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கிராமமே விழாக்கோலம் பூண்டிருந்த நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி உற்சவம் நேற்று இரவு கோலாகலமாக நடைபெற்றது.

காவிரி கரையில் இருந்து சக்தி கரகம் புறப்பாடு

விழாவின் முக்கிய அங்கமாக,  காவிரி கரையில் அம்மனுக்குச் சிறப்புப் பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடத்தப்பட்டன. விரதமிருந்த பக்தர்கள் அங்கு புனித நீராடினர். பின்னர், மேள தாளங்கள் மற்றும் நாதஸ்வர இசை முழங்க, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சக்தி கரகம் காவிரி கரையில் இருந்து ஊர்வலமாகப் புறப்பட்டது.மஞ்சள் ஆடை உடுத்தி, கைகளில் வேப்பிலை ஏந்தி, 'ஓம் சக்தி... பராசக்தி...' என்ற பக்தி முழக்கத்துடன் நூற்றுக்கணக்கான பக்தர்கள் சக்தி கரகத்தைப் பின்தொடர்ந்து ஊர்வலமாக வந்தனர். இந்த ஊர்வலம் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று ஆலய வளாகத்தை வந்தடைந்தது.

Continues below advertisement

பக்திப் பரவசத்தில் தீமிதி உற்சவம்

ஆலயத்தின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட தீக்குண்டத்தில், அக்னி பிழம்புகள் தணிந்து கனன்றுகொண்டிருந்த வேளையில், முதலில் சக்தி கரகம் தீக்குண்டத்தில் இறங்கி தீமிதி உற்சவத்தைத் தொடங்கி வைத்தது.அதனைத் தொடர்ந்து, கடந்த பத்து நாட்களாகக் கடும் விரதம் மேற்கொண்ட பக்தர்கள் வரிசையாகத் தீக்குண்டத்தில் இறங்கினர். தங்களது வேண்டுதல் நிறைவேறியதற்காகவும், குடும்ப நலன் வேண்டியும் தீக்குழியில் இறங்கி மெய்சிலிர்க்க வைத்தனர்.

குழந்தைகளுடன் தீமிதி

பல பக்தர்கள் தங்களது கைக்குழந்தைகளைத் தோளில் சுமந்தபடியும், கைகளில் ஏந்தியபடியும் தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தியது காண்போரைக் வியப்பில் ஆழ்த்தியது. 16 அடி அலகு: விழாவின் சிகரமாக, ஒரு சில பக்தர்கள் 16 அடி நீளம் கொண்ட பிரம்மாண்ட 'அலகு' எனும் வேல் போன்ற கூர்மையான கம்பிகளை வாயில் குத்திக்கொண்டு, ஆக்ரோஷமாகத் தீக்குண்டத்தில் நடந்து வந்து தங்களது பக்தியை வெளிப்படுத்தினர்.மஞ்சள் ஆடை அணிவகுப்பு: தீமிதித்த பக்தர்கள் அனைவரும் மஞ்சள் உடை உடுத்தி, உடல் முழுவதும் திருநீறு மற்றும் சந்தனம் பூசி பக்திப் பரவசத்துடன் காணப்பட்டனர்.

மஹா தீபாராதனை மற்றும் திரளான பக்தர்கள் வருகை

தீமிதி உற்சவம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கீழ மாரியம்மனுக்குப் பால், தயிர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அம்மன் மலர் அலங்காரத்தில் காட்சியளிக்க, மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.இந்த விழாவில் ஆறுபாதி மட்டுமின்றி, தரங்கம்பாடி, மயிலாடுதுறை, பொறையார் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். பக்தர்களுக்குத் தேவையான குடிநீர், அன்னதானம் மற்றும் பாதுகாப்பு வசதிகளைக் கோவில் நிர்வாகத்தினரும், ஊர் பொதுமக்களும் செய்திருந்தனர். பாதுகாப்புப் பணியில் உள்ளூர் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டனர்.இந்த ஆண்டு தீமிதி திருவிழா பக்தி மணம் கமழ, எவ்வித அசம்பாவிதமும் இன்றி மிகச்சிறப்பாக நிறைவு பெற்றது. அம்மனின் அருளைப் பெற்றுச் சென்ற பக்தர்கள், மனநிறைவுடன் கலைந்து சென்றனர்.