சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில், பயணிகளின் உயிரைப் பொருட்படுத்தாமல் அதிவேகமாக பேருந்துகளை இயக்கி, நடுரோட்டில் இறங்கி ஓட்டுநர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோதலால் சீர்காழி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

Continues below advertisement

சாலையில் அரங்கேறிய திக் திக் சம்பவம் 

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நோக்கி இரண்டு தனியார் பேருந்துகள் வந்துகொண்டிருந்தன. பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்குச் செல்வோர் என இரு பேருந்துகளிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

வழக்கமாகவே இந்த வழித்தடத்தில் இயங்கும் தனியார் பேருந்துகளுக்கு இடையே 'டைமிங்' எனப்படும் நேரக்கட்டுப்பாட்டைப் பின்பற்றுவதில் கடும் போட்டி நிலவுவது வழக்கம். ஆனால், நேற்று அது வரம்பு மீறியது. ஒரு பேருந்தை மற்றொரு பேருந்து முந்திச் செல்வதற்காக, குறுகிய சாலைகளிலும் அதிவேகமாகப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

Continues below advertisement

பயணிகளின் உயிரோடு விளையாடிய ஓட்டுநர்கள்

பேருந்துகள் அதிவேகத்தில் சென்றபோது, வளைவுகளில் திரும்பும்போதும், மற்ற வாகனங்களைக் கடக்கும்போதும் பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதும் நிலைக்குச் சென்றன. இதனால் உள்ளே இருந்த பயணிகள் மரண பயத்தில் கூச்சலிட்டனர். "வேகத்தைக் குறைத்து ஓட்டுங்கள்" என பயணிகள் பலமுறை எச்சரித்தும், போட்டி மனப்பான்மையில் இருந்த ஓட்டுநர்கள் அதைக் காதில் வாங்கிக்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில், ஒரு பேருந்தின் ஓட்டுநர் மற்றொரு பேருந்தை வழிமறித்து முந்திச் செல்ல முயன்றபோது, இரு பேருந்துகளும் மிக நெருக்கமாக உரசுவது போல் நின்றன. இதனால் ஆத்திரமடைந்த ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் பேருந்துக்குள்ளேயே ஒருவரை ஒருவர் சைகைகளால் திட்டித் தீர்த்தனர்.

நடுரோட்டில் மல்யுத்தம்: ஸ்தம்பித்த போக்குவரத்து

பேருந்துகள் சீர்காழி புதிய பேருந்து நிலையம் எதிரே வந்தபோது, ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற ஒரு ஓட்டுநர், தனது பேருந்தை சாலையின் குறுக்கே நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். பின்னால் வந்த மற்றொரு பேருந்து ஓட்டுநரும் இறங்கி வர, பொதுமக்கள் முன்னிலையிலேயே இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாகத் தாக்கிக்கொண்டனர்.

சம்பவ இடத்தின் காட்சிகள்

பேருந்துகள் சாலையின் நடுவே நிறுத்தப்பட்டதால் பின்னால் வந்த நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. பயணிகள் பேருந்தை விட்டு இறங்கி, பாதுகாப்பான இடத்திற்கு சென்றனர். ஓட்டுநர்களும் நடத்துநர்களும் சட்டையைப் பிடித்துக்கொண்டு கைகலப்பில் ஈடுபட்டதால் அந்த இடமே போர்க்களம் போல் காட்சியளித்தது.

இந்த மோதலால் சீர்காழி - சிதம்பரம் பிரதான சாலையில் போக்குவரத்து முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டது. அவசரத் தேவைக்காகச் சென்ற ஆம்புலன்ஸ் வாகனம் கூடச் செல்ல முடியாமல் தவித்தது பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

போலீசார் அதிரடி நடவடிக்கை

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சீர்காழி காவல் நிலையப் போலீசார், மோதலில் ஈடுபட்ட ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களைப் பிரித்துவிட்டனர். பின்னர், சாலையின் நடுவே நின்ற பேருந்துகளை அப்புறப்படுத்தி போக்குவரத்தைச் சீர்செய்தனர்.

மோதலில் ஈடுபட்ட இரண்டு தனியார் பேருந்துகளையும், அதன் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களையும் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அவர்களிடம் தற்போது தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் கோரிக்கை

தனியார் பேருந்துகளின் இந்த அராஜகப் போக்கு குறித்துப் பேசிய சமூக ஆர்வலர்கள், "சிதம்பரம் - சீர்காழி - மயிலாடுதுறை வழித்தடத்தில் தனியார் பேருந்துகள் எப்போதுமே ஒருவித போட்டி மனப்பான்மையுடன் தான் இயங்குகின்றன. போக்குவரத்துத் துறையினர் முறையாக ஆய்வு செய்து இவர்களின் நேர அட்டவணையை முறைப்படுத்த வேண்டும். பயணிகளின் உயிரை அடகு வைத்து இவர்கள் செய்யும் இந்த 'ரேஸ்' கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்," என வலியுறுத்தினர். இந்தச் சம்பவம் சீர்காழி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.