பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் பொதுத் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களுக்கு தனது சொந்த செலவில் பூம்புகார் எம்.எல்.ஏ வழங்கிய பேனாவை தலைமையாசிரியர் கொடுக்காத நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


விலையில்லா மிதிவண்டி வழங்கு விழா


மயிலாடுதுறை அருகே பள்ளி மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டியினை கடந்த மாதம் வழங்கிய பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் அப்போது தனது தொகுதி மாணவர்கள் அனைவருக்கும் பொதுத் தேர்வு எழுத இலவசமாக பேனா வழங்குவதாக தெரிவித்தார். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே செம்பனார்கோவில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி கடந்த மாதம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக திமுக மாவட்ட செயலாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முருகன் பங்கேற்று 192 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.




இலவச பேனா திட்டம்:


முன்னதாக நிகழ்சியில் பேசிய அவர், தமிழக அரசின் பல்வேறு சாதனைகள் குறித்து விளக்கிப் பேசினார். மாதம் தோறும் பெண்மணிகளுக்கு அரசு சார்பில் ஆயிரம் ரூபாய் வழங்கி ஊக்குவித்து வருவதாகவும், பள்ளி முடித்துவிட்டு கல்லூரி செல்லக்கூடிய மாணவிகள் இந்த ஊக்கத் தொகையை பெற இருப்பதால் நன்கு படிக்க வேண்டும் என தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து எதிர்வரும் பொது தேர்வில் தனது பூம்புகார் தொகுதியில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் சிறப்பு பூஜை செய்து பேனா வழங்க உள்ளதாகவும், எனவே மாணவர்கள் தான் பூஜை செய்து கொடுக்கும் பேனாவை மட்டும் நம்பி இல்லாமல் தங்களது திறமையை நம்பி செயல்பட்டு, பொதுத் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என அறிவுரை வழங்கினார். 




இலவச பேனா வழங்கிய எம்எல்ஏ 


அதனைத் தொடர்ந்து அதனை நிறைவேற்றும் வகையில் மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுத்தேர்வு எழுதும் அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தனது சொந்த செலவில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் தேர்வு தொடங்கிய இருதினங்களுக்கு முன்பு நேரில் சென்று பேனாக்கள் வழங்கினார். 




இந்த நிலையில் பூம்புகார் தொகுதி சட்டமன் உறுப்பினர் நிவேதா முருகன் தனது தொகுதியில் உள்ள அரசு பள்ளி, அரசு நிதியுதவிபெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகள் உட்பட மொத்தம் 63 பள்ளிகளை சேர்ந்த 10368 மாணவ - மாணவிகளுக்கு தலா 80 ரூபாய் மதிப்புக் கொண்ட பேனாக்களை தனது சொந்த செலவில் வழங்க திட்டமிட்டு பொறையார் நிவேதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தரங்கம்பாடி தூய தெரசா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருக்கடையூர் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட அனைத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நேரில் சென்று வழங்கி வாழ்த்துகளை தெரிவித்து தனது வார்த்தையை நிறைவேற்றினார். 




எம்எல்ஏ பேனாவை கொடுக்காத தலைமையாசிரியர் 


இந்த சூழலில் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா கோமல் ஊராட்சியில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் பங்கேற்று பள்ளியில் பயிலக்கூடிய 153 மாணவ மற்றும் மாணவிகளுக்கு விலையில்லா மிதி வண்டியினை வழங்கினார். அப்போது நிகழ்ச்சி நடைபெற்ற பள்ளியில் மாணவர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் வழங்க கொடுத்த பேனா வழங்கப்படவில்லை என்கின்ற தகவல் கிடைத்துள்ளது. அதனை கேட்டு கோபமடைந்த எம்எல்ஏ. தொடர்ந்து மேடையிலேயே தலைமை ஆசிரியரிடம் எம்எல்ஏ சரமாரியாக கேள்வி எழுப்பினார். தேர்விற்கு முன்பாகவே பள்ளிக்கு பேனா கொடுக்கப்பட்ட நிலையில் ஏன் மாணவர்களுக்கு அதை தரவில்லை என தலைமை ஆசிரியரிடம் கடிந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து பொது தேர்வு எழுதுகின்ற மாணவர்கள் அனைவரையும் அழைத்து பேனாவினை எம்எல்ஏ நிவேதா முருகன் வழங்கினார்.