மயிலாடுதுறை நகராட்சி பகுதியில் நான்கு நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படாததால் காலி குடங்களுடன் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுவாக தண்ணீர் தட்டுபாடு பிரச்சினை கோடைக்காலங்களான ஏப்ரல், மே, ஜூன் மதங்களின் நிலவும், ஆனால் மழை காலங்களிலும், மழை காலம் முடிந்து சில மாதங்களுக்கு தண்ணீர் பிரச்சினை என்பது இருக்காது. ஆனால் இதற்கு மாறாக மயிலாடுதுறை நகராட்சியில் தற்போது தண்ணீர் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மாவட்டம் முழுவதும் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தில் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை நகராட்சிக்கு கொள்ளிடம் ஆற்றில் முடிகண்டநல்லூர் என்னும் இடத்தில் இருந்து நீரேற்றம் செய்யப்பட்டு, மயிலாடுதுறை மக்களுக்கு தினமும் காலை ஒன்றரை மணி நேரம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இந்த சூழலில் நீரேற்று நிலையத்தில் மின் மோட்டார்கள் பழுதடைந்த காரணத்தால் கடந்த ஜனவரி 17 -ஆம் தேதி முதல் நான்கு நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை.
இதன் காரணமாக மயிலாடுதுறை நகரத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் இன்னலுக்கு ஆளாகினர். போதிய டேங்கர் வசதி செய்து குடிநீர் வழங்காத காரணத்தால் பாதிப்படைந்த பொதுமக்கள் ஆத்திரமடைந்து, மயிலாடுதுறை - திருவாரூர் நெடுஞ்சாலையில் கண்ணார தெரு என்ற இடத்தில் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் நகராட்சி ஊழியர்கள் சாலை மறியல் செய்தவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
மேலும் இன்றைய தினம் நிச்சயம் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றும், அதுவரை டேங்கர் மூலம் தண்ணீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதன் பேரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் தங்களுடைய போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதன் காரணமாக மயிலாடுதுறை திருவாரூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சர்வதேச கடிதம் எழுதும் போட்டி; பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் - ரூ.50 ஆயிரம் பரிசு, சான்றிதழ்