இந்திய அஞ்சல் துறை சார்பில் சர்வதேச அளவிலான கடிதம் எழுதும் போட்டிக்கு 9 முதல் 15 வயது வரையிலான பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டுக்கான Universal Postal Union (UPU)  என்ற பெயரில் இந்தப் போட்டி நடத்தப்படுகிறது. 


இதுகுறித்து ஈரோடு அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளர் ( Superintendent of Post Offices ) கருணாகரபாபு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி உள்ளதாவது:


150 வருட பழமையான உலகளாவிய அஞ்சல் ஒன்றியம் (UPU), உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு 8 தலைமுறைகளுக்கும் மேலாக சேவையாற்றி வருகிறது. அப்போதில் இருந்து உலகம் மாறிக் கொண்டே வருகிறது. இந்த சூழலில், எதிர்கால சந்ததியினருக்கு அவர்கள் பின்பற்ற வேண்டும் என்று நீங்கள் நம்பும் உலகத்தைப் பற்றி ஒரு கடிதம் எழுத வேண்டும்.


எந்த மொழியில் எழுதலாம்?


இதற்காக சர்வதேச அளவிலான கடிதம் எழுதும் போட்டி அஞ்சல் துறை சார்பில் நடத்தப்பட உள்ளது. இந்தப் போட்டியில் 9 வயது முதல் 15 வயதுக்கு உள்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். கடிதம் 800 வாா்த்தைகளுக்குள் இருக்க வேண்டும். தமிழ், ஆங்கிலம் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட மொழியில் கடிதம் எழுதலாம்.


இந்தப் போட்டியில் தொலைத்தொடர்பு வட்ட அளவில் முதல் இடம் பெறுபவர்களுக்கு ரூ. 25 ஆயிரம், இரண்டாம் இடம் பெறுபவர்களுக்கு ரூ. 10 ஆயிரம், மூன்றாம் இடம் பெறுபவர்களுக்கு ரூ. 5 ஆயிரம் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.


ரூ. 50 ஆயிரம் பரிசு


அதேபோல தேசிய அளவிலான போட்டியில் முதல் இடம் பிடிப்பவருக்கு ரூ. 50 ஆயிரம், இரண்டாம் இடம் பிடிப்பவருக்கு ரூ. 25 ஆயிரம், மூன்றாம் இடம் பிடிப்பவருக்கு ரூ. 10 ஆயிரம் பரிசாக வழங்கப்படும்.


தேசிய அளவில் சிறந்த கடிதங்கள் தேர்வு செய்யப்பட்டு, எழுதியவர்கள் சர்வதேசப் போட்டிக்கு அனுப்பப்படுவர். இந்தக் கடித போட்டி பள்ளி அளவில் ஜனவரி 31ஆம் தேதிக்குள் நடத்தப்பட வேண்டும். அதில் தேர்வு செய்யப்பட்ட கடிதங்களை விண்ணப்பத்துடன், எழுதிய மாணவரின் புகைப்படம், பிறந்த தேதி அல்லது ஆதார் அட்டை நகல் அல்லது பள்ளியில் வழங்கிய பிறந்த தேதிக்கான சான்று ஆகியவற்றுடன் அஞ்சல் கண்காணிப்பாளர், ஈரோடு கோட்டம், ஈரோடு 638 001 என்ற முகவரிக்கு பிப்ரவரி 5-ஆம் தேதிக்குள் கிடைக்கும்படி அனுப்ப வேண்டும்.


போட்டி நடைபெறும் இடம், தேதி ஆகியவை அஞ்சல் துறையின் சாா்பில் பிறகு அறிவிக்கப்படும். கடிதப் போட்டிக்கான தலைப்பு மற்றும் பிற விவரங்களை https://www.indiapost.gov.in/ என்ற இணையதளத்தில் அறியலாம். அல்லது ஈரோடு தலைமை அஞ்சல் அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம் என ஈரோடு அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார்.


தொலைபேசி எண்: 0424-2258066