மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா இலுப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நர்கீஸ் பானு. இவர் வெளிநாடு சென்ற தன் கணவரை காணவில்லை என்றும், அவரை மீட்டு தருமாறும் மக்கள் குறைதீர்க்கும் புகார் பெட்டியில் மனு அளித்து மாவட்ட ஆட்சியரிடம் கணவரை மீட்டு தர கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். அவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, தனது கணவர் அப்துல் ஜப்பார் ஹனிபா என்பவர் கடந்த 12.12.2023 ஆண்டு அன்று புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் காரைக்காலில் உள்ள வெளிநாட்டிற்கு ஆட்களை வேலைக்கு அனுப்பும் நவீன் என்ற ஏஜென்சி மூலமாக குவைத் நாட்டிற்கு அரேபியர் வீட்டிற்கு ஓட்டுனராக வேலைக்கு சென்றார்.
அவரைக் காணவில்லை என்றும், தனக்கு 12 வயதில் மனவளர்ச்சிக்குன்றிய பெண் குழந்தையும், ஆறாவது படிக்கும் மகனுடன் ஏழ்மை நிலையில் வாழ்ந்து வருவதாகவும், உடனடியாக தனது கணவர் அப்துல் ஜப்பார் ஹனிபாவை மீட்டு இந்தியாவிற்கு அழைத்து வர வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளார். அப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர் மகாபாரதியிடம் தன் நிலையை கூறி கண்ணீர் மல்க கணவரை மீட்டு தர கோரிக்கை விடுத்தார். நடவடிக்கை எடுக்க ஆவணம் செய்வதாக மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்தார்.