Old Vs New Tax Regime: பழைய மற்றும் புதிய வரி முறைகள் இடையே மாறுவது எப்படி என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

2024-25 நிதியாண்டு தொடக்கம் - வரி  விதிப்பு முறை:

2024-25 நிதியாண்டு இன்று தொடங்கிய நிலையில், வருமான வரி செலுத்துவோருக்கு, இனி புதிய வரி விதிப்பு முறையின் கீழ் வரி விதிக்கப்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அதேநேரம், தங்களது நிதி இலக்குகளுக்கு மிகவும் பொருத்தமானதாக இருந்தால், பழைய வரி முறையைத் தேர்ந்தெடுப்பதற்கான விருப்பம் பொதுமக்களுக்கு தற்போதும் வழங்கப்படுகிறது. வரி விதிப்பு முறைகளுக்கு இடையில் மாறுவதற்கான முறைகள் என்பது, தனிப்பட்ட வரி செலுத்துபவரின் வருவாய்  வகையைப் பொறுத்தது.

மாத சம்பளம் வாங்குவோர்:

மாத சம்பளம் பெறும் தனிநபருக்கு, வரி விதிகளுக்கு இடையே மாறுவது மிகவும் எளிதானது.  மேலும் அவர்கள் ஒவ்வொரு நிதியாண்டிலும் இந்த மாற்றத்தை எத்தனை முறை வேண்டுமனாலும் செய்யலாம். சம்பந்தப்பட்ட ஆண்டிற்கான வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்யும் போது தங்களுக்கு விருப்பமான வரிவிதிப்பு முறையைத் தேர்வு செய்யலாம். மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) ஊழியர்கள்  தங்கள் வரிக் கணக்கைத் தாக்கல் செய்யும் போது, தங்கள் வரி முறையைத் தேர்ந்தெடுப்பதற்கான விருப்பத்தை முதலாளிகள் வழங்குவதை கட்டாயமாக்கியுள்ளது. 

வணிகம் அல்லது தொழில்முறை வருமான வரி செலுத்துவோர்:


வணிகம் அல்லது தொழில்முறை வருமான வரி செலுத்துவோர்,  தங்கள் வரிவிதிப்பு முறையை ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே தேர்வு செய்ய முடியும். உதாரணமாக, வணிக வருமானம் கொண்ட  வரி செலுத்துவோர் 2023 நிதியாண்டில் ஒருமுறை புதிய வரி முறையைத் தேர்வுசெய்தால், அவர்களால் மீண்டும் பழைய முறைக்குத் திரும்ப முடியாது. மேலும், புதிய வரி விதிப்பில் இருந்து விலக அவர்கள் தேர்வு செய்தால், எதிர்காலத்தில் அதை மீண்டும் தேர்ந்தெடுக்க முடியாது. எனவே அவர்கள் தங்கள் வரி முறையை மாற்றுவதற்கான வாய்ப்பை சரியாக பயன்படுத்துவது முக்கியம். வரி செலுத்துவோர், ரிட்டர்ன் தாக்கல் செய்யும் காலக்கெடுவிற்கு முன் படிவம் 10-IEA தாக்கல் செய்வதன் மூலம் புதிய வரி விதிப்பு முறையில் இருந்து விலகலாம்.

பழைய மற்றும் புதிய வரி முறை:

வருமான வரித்துறை வழங்கிய பல வரி விலக்குகள் மற்றும் விலக்கு விருப்பங்களுக்காக,  பழைய வரி முறையை வரி செலுத்துவோர் விரும்புகின்றனர். இது தனிநபர்களின் வரிப் பொறுப்புகளைக் குறைக்க உதவுகிறது. ஏனெனில் அவர்கள் வீட்டு வாடகைக் கொடுப்பனவு (HRA), விடுப்புப் பயணக் கொடுப்பனவு (LTA), பிரிவு 80C, 80D, 80CCD(1b), 80CCD(2) உள்ளிட்ட பலவற்றின் கீழ் பயனாளர்கள் வரி விலக்குகளை பெறலாம்.

புதிய வரி விதிப்பு முறையும் சில வரி விலக்குகளை வழங்குகிறது. இருப்பினும், வரி செலுத்துவோருக்கு இது வரம்புகளை உயர்த்துகிறது. மேலும், வரி செலுத்துவதற்கு முன் அவர்களுக்கு அதிக இடைவெளியை அனுமதிக்கிறது. கீழே உள்ள அட்டவணை 2023-24 நிதியாண்டிற்கான தற்போதைய வரி அடுக்குகளை வழங்குகிறது. 

வருமான வரி அடுக்கு புதிய முறையில் வரி விதிப்பு சதவிகிதம் வருமான வரி அடுக்கு பழைய முறையில் வரி விதிப்பு சதவிகிதம்
0-3 லட்சம் 0% 0-2.5 லட்சம் 0%
3-6 லட்சம்  5% 2.5-5 லட்சம் 5%
6-9 லட்சம் 10% 5-10 லட்சம் 20%
9-12 லட்சம் 15% 10 லட்சத்திற்கும் மேல் 30%
12-15 லட்சம் 20%    
15 லட்சத்திற்கும் மேல் 30%