முன்பெல்லாம் கல்யாணம், காதுகுத்து, வளையல் காப்பு, மஞ்சள் நீராட்டு விழா, புதுமனை புகுவிழா, அலுவலகங்கள், கடைகள் என பல்வேறு விழாக்களுக்கு உறவினர்கள் மற்றும் நண்பர்களை அழைப்பதற்காக பத்திரிகை அச்சடித்து அதனை வழங்கி விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுப்பார்கள். அதற்காக ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பத்திரிகையினை குறைந்த செலவிலும் வழக்கமான ஒர் டெம்ப்ளேடில் தயார் செய்து வழங்குவார்கள்.
வைரலாகும் பத்திரிகை
ஆனால் தற்போதைய காலகட்டத்தில் அனைத்து விழாக்களுக்கும் பத்திரிகை அடிப்பதில் பலரும் புதிய முறைகளையும், வித்தியாசங்களையும் கையாளுகின்றனர். அதுவும் பல லட்சங்களை பத்திரிகைக்காக செலவும் செய்கின்றனர். இந்நிலையில் தான் அதுபோன்ற ஒர் பத்திரிகை தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உணவகம் திறப்பு விழா
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அருகே மயிலாடுதுறை - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையோரம் ஸ்ரீ ஸ்ரீரங்கம் என்ற பெயரில் சைவ உணவகம் ஒன்றை பாலாஜி என்பவர் திறக்க உள்ளார். அதற்காக அழைப்பிதழ் அச்சடிக்க முடிவு செய்த பாலாஜி அதனை வித்தியாசமான முறையில் அடித்தால் பத்திரிகையில் புதுமை அதன் மூலம் உணவகத்திற்கும் நல்ல விளம்பரம் என்ற நோக்கில் அழைப்பிழை தாயார் செய்து வழங்கி வருகிறார். அவரின் முயற்சி அவர் நினைத்தால் போல் தற்போது வெற்றியும் அடைந்துள்ளது. அந்த பத்திரிகையினை வடிவமைப்பில் இவ்வாறு சுவாரஸ்யமாக தயார் செய்துள்ளனர்.
Sri Srirangam Veg Restaurant
திருமண அழைப்பிதழ்
திரு & திருமதி இட்லி - பொடி இட்லி மற்றும் திருமதி மசால் வடை - மசாலா போண்டா மகிழ்வும், பெருமையும் ததும்ப, எங்களது இல்ல மணவிழாவிற்கு உங்கள் வரவேற்கிறோம்.
நிகழும் மங்களகரமான குரோதி வருடம் பங்குனி மாதம் 27 ஆம் தேதி (10.04.2025) வியாழக்கிழமை காலை 7:30 மணிக்கு மேல் 9 மணிக்குள்
மணமக்கள்
- திருவளர்ச்செல்வன்
சோளா பூரி
S/o பூரி என்கிற வரனுக்கும்
- திருவளர்செல்வி
உப்புமா கொழுக்கட்டை
D/o நீர் கொழுக்கட்டை
என்கிற கன்னிகைக்கும்
திருமணம் செய்வதாய் இறைவன் அருளால் தீர்மானிக்கப்பட்டு மேற்படி நிகழ்வு
திரு. பாலாஜி திருமதி. ஜெயஸ்ரீ பாலாஜி இவர்களின் முன்னிலையில் வைத்தீஸ்வரன் கோயில்ரோடு, பைபாஸ் ரவுண்டானா சட்டநாதபுரம் ஸ்ரீ ஸ்ரீரங்கம் சைவ உணவகத்தில் நடைபெற இருப்பதால் தாங்கள் தங்கள் சுற்றமும் நட்பும் சூழ வருகை தருமாறு அன்புடன் அழைக்கிறோம்.
தங்கள் அன்புள்ள
- சாப்பாடு
- வடை & தயிர் வடை
- அடை & அவியல்
- கேசரி & பொங்கல்
- சாம்பார் சாதம் & தயிர் சாதம்
- வெஜ் பிரியாணி & காளான் பிரியாணி
- புளி சாதம்
குட்டீஸ்
காபி, மசாலா பால், மெதுவடை, சமோசா, பணியாரம்,
என உணவு உறவு முறைகளில் பத்திரிக்கை அச்சிடப்பட்டு வழங்கிய நிலையில், தற்போது அது சமூக வலைத்தளங்களில் வைரலாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. வித்தியாசமான இந்த முயற்சியை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
பத்திரிகையை பொறுத்தவரை மிகவும் வித்தியாசமான ரசனையில் உருவாக்குகிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக ஆதார் கார்டு வடிவில் கல்யாண பத்திரிகைகள் வெளியானது. அடுத்ததாக போலீஸ் ஸ்டேசனில் கைதாவது போல் வித்தியாசமான முறையில் கல்யாண பத்திரிகை வந்தது. இதேபோல் பிளக்ஸ் பேனரிலும் வித்தியாசனமான முறையில் வைக்கிறார்கள். நாளிதழ் போன்று வித்தியாசமான முறையில் பிளக்ஸ் பேனரை வடிவமைக்கிறார்கள். அதில் நாளிதழில் வரும் தலைப்புச் செய்தி, விளையாட்டு செய்தி போன்ற வாசகங்களுடன், மணமகன், மணமகள் மற்றும் நண்பர்கள் படங்களை குற்றவாளிகள் போன்றும் வடிவமைத்து பேனர் ஒட்டுகிறார்கள். இப்படி பல்வேறு வகையான பேனர்கள், பத்திரிகைகள் வலம் வருகிறது.