சீர்காழி அருகே அரசு மதுபான கடையில் மது அருந்தியவர் திடீரென உயிரிழந்ததை அடுத்து இறந்தவரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து உயிரிழப்புக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடரும் மதுபானம் தொடர்பான உயிரிழப்புகள்
கள்ளக்குறிச்சி சம்பத்தை தொடர்ந்து மதுபானம் தொடர்பான உயிரிழப்பு செய்திகள் தமிழகம் முழுவதும் பல இடங்களில் வந்த வண்ணம் உள்ளது. தமிழகத்தில் மது மற்றும் மது சார்ந்த உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் கூறி வருகின்றனர். இருந்த போதிலும் அரசு பூரண மதுவிலக்கை அமல்படுத்த தயக்கம் காட்டி வருகிறது. மேலும் அரசு பெருமளவிலான வருவாய் டாஸ்மாக் மதுபானம் மூலம் வருவதால் மது விலக்கை அமல்படுத்த அரசு முன்வரவில்லை என்பது எதார்த்தமான ஒன்று. அதிலும் குறிப்பாக மது விற்பனையை அதிகரிக்க இலக்கு நிர்ணயம் செய்வது, குறைந்த அளவிலான மது, கோதுமை பீர் போன்று புதிய வகையில் அறிமுகங்கள் செய்யப்பட்டுகிறது. இதன் மூலம் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு சாத்தியமில்லை என்பது புலப்படுகிறது.
அதிகரிக்கும் மதுபான தொடர்பான பிரச்சினை
மயிலாடுதுறை மாவட்டம் சேந்தங்குடி பகுதியை சேர்ந்தவர் 35 வயதான கனகராஜ். இவர் தனது சித்தப்பா மகன் செல்வகுமாருடன் கொண்டத்தூர் பகுதியில் தங்கி செங்கல் சூளையில் கல் அறுக்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று கதிராமங்கலம் அரசு மதுபான கடைக்கு இரண்டு பேரும் சைக்கிளில் சென்று மதுபானம் வாங்கி அருந்திவிட்டு திரும்பியுள்ளனர். அப்பொழுது கனகராஜ் மயக்கமுற்று கீழே விழுந்துள்ளார்.
டாஸ்மாக் மது அருந்திய நபர் உயிரிழப்பு
அதனை அடுத்து அவரை தூக்கி செல்வகுமார் கொண்டத்தூர் ஆற்றுப்பாலத்தில் அமர வைத்துவிட்டு, தனது உறவினர்களை அழைத்து வந்து கனகராஜை பார்த்துள்ளார். அப்பொழுது கனகராஜ் மயங்கிய நிலையில் கீழே கிடந்துள்ளார். இதனை அடுத்து 108 வாகனத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அங்கு வந்த 108 வாகன உதவியாளர் அவரை பரிசோதனை செய்து அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
காவல்துறையினர் விசாரணை
இதனை அடுத்து வைத்தீஸ்வரன் கோயில் காவல்துறைக்கு செல்வகுமார் மற்றும் கனகராஜன் தந்தை குணசேகரன் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின்பேரின் அங்கு சென்ற போலீசார் அவரது உடலை கைப்பற்றி சீர்காழி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். இந்நிலையில் தனது மகன் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாக கனகராஜின் தந்தை குணசேகரன் வைத்தீஸ்வரன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்ற காவல் துறையினர் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து அரசு மதுபான கடையில் மதுபானம் அருந்தியதால் உயிர் இழந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் உயிரிழந்தாரா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Earthquake: ஷாக்! இந்திய பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 6.4!