மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள வேட்டங்குடி கிராமத்தில், காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அரசு மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், வீட்டு ஒன்றில் வெளிமாநில மது பாட்டில்களைப் படுஜோராக மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சட்டவிரோத விற்பனைக் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருவதால், பொதுமக்கள் மத்தியிலும் சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
24 மணி நேரமும் நடக்கும் ரகசிய விற்பனை
சீர்காழியை அடுத்த வேட்டங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர். இவர் தனது சொந்த வீட்டில், அண்டை மாநிலமான புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து கடத்தி வரப்படும் மது பாட்டில்களை மொத்தமாகக் கொள்முதல் செய்து, அவற்றை 24 மணி நேரமும் கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வருவதாகக் கூறப்படுகிறது. உள்ளூர்வாசிகள் மற்றும் பக்கத்து கிராமங்களைச் சேர்ந்த குடிமகன்கள் இவரது வீட்டைத் தேடி வந்து அதிக விலை கொடுத்து மதுபானங்களை வாங்கிச் செல்வதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசு விடுமுறையில் கொழிக்கும் கள்ளச்சந்தை
இன்று (அக்டோபர் 2, காந்தி ஜெயந்தி தினம்) அரசு விடுமுறை தினம் என்பதால், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மதுபான கடைகளுக்கும் (டாஸ்மாக்) விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், மதுப்பிரியர்கள் மதுபானம் கிடைக்காமல் தவித்த நிலையில், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சேகர் தனது சட்டவிரோத விற்பனையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளார்.
இன்று காலை முதலே சேகர் வீட்டில் மதுபானம் வாங்குவதற்காகக் குடிமகன்கள் திரண்டிருந்தனர். காரைக்கால் பகுதியில் இருந்து லாரிகள் மூலமாக மொத்தமாக வாங்கிக் கொண்டுவரப்பட்ட பீர் மற்றும் பல்வேறு வகையான உயர் ரக மதுபானங்களை, சேகர் மற்றும் அவரது குடும்பத்தினர் சேர்ந்து அதிக விலைக்குப் படுஜோராக விற்பனை செய்து வந்துள்ளனர்.
சமூக வலைதளத்தில் வைரலான வீடியோ
இந்தச் சட்டவிரோத மது விற்பனை குறித்து யாரோ ஒருவர் ரகசியமாக வீடியோ பதிவு செய்து, அதைச் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், சேகரின் வீட்டின் வெளியே மது பாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதும், அவற்றை சேகரின் குடும்பத்தினர் கணக்குப் பார்த்து விற்பனை செய்வதும் தெளிவாகத் தெரிகிறது.
வீடியோவில் மேலும் அதிர்ச்சியூட்டும் விஷயமாக, மதுபானம் வாங்க வந்த ஒரு நபரிடம் சேகர் பேசுவதும் பதிவாகியுள்ளது. அந்த உரையாடலில், "ஒன்பதரை மணிக்கு ரவுண்ட்ஸ் வருவார்கள் ஒன்பதரை மணிக்குள்ள பாத்து வாங்கிக்கோங்க, என்று அந்தச் சாராய வியாபாரி சர்வ சாதாரணமாகப் பேசுவது பதிவாகியுள்ளது. இந்த வீடியோ காட்சி, இந்தச் சட்டவிரோத விற்பனை எந்தவித அச்சமும் இல்லாமல், தொடர்ந்து பகிரங்கமாக நடைபெற்று வருகிறது என்பதைக் காட்டுகிறது.
காவல்துறை நடவடிக்கை எடுக்குமா?
காந்தி ஜெயந்தி போன்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாளில், ஒரு கிராமத்தின் மையத்திலேயே கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெறுவதும், அது சமூக வலைதளங்களில் பரவுவதும், காவல்துறையின் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் செயல்பாடுகள் குறித்துக் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது.
சட்டவிரோத மது விற்பனையால் இளைஞர்கள் சீரழிவதும், குடும்பங்களில் அமைதி குலைவதும் வாடிக்கையாகி வரும் நிலையில், இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெளிமாநில மது விற்பனையால் அரசுக்குக் கிடைக்க வேண்டிய வருவாய் இழப்பு ஒருபுறம் என்றால், சமூகத்தின் ஒழுக்கம் சீர்குலைவது மறுபுறம் உள்ளது.
சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை உடனடியாகத் தலையிட்டு, வேட்டங்குடி கிராமத்தைச் சேர்ந்த சேகர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கடத்தி வரப்பட்ட வெளிமாநில மது பாட்டில்களைப் பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் சமூக நல அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.