மயிலாடுதுறையில் சிறுத்தை 


மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகர் கூறைநாடு செம்மங்குளம் அருகே இரவு 11 மணிக்கு சிறுத்தை நடமாடியதை பார்த்ததாக சிலர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனை அடுத்து மாவட்ட காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் அங்கு விரைந்து வந்தனர். மேலும் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக காட்டுத்தீ போல் செய்தி பரவியதால் அப்பகுதியில் ஏராளமானோர் கூடினர். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்தப் பகுதியில் சோதனை செய்தபோது, சிறுத்தையின் கால் தடம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்ததன் பெயரில் உடனடியாக சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக கூறப்பட்ட பகுதியில் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.




சிறுத்தை நடமாட்டத்தை உறுதி செய்த வனத்துறை 


தொடர்ந்து சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதியில் உள்ள கால்தடங்களை வனத்துறையினர் ஆய்வு செய்து சிறுத்தையின் கால் தடம் என்று உறுதி செய்தனர். பின்னர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது அப்பகுதியில் சிறுத்தை நடமாடியது தெரியவந்தது. நாய்கள் கூட்டமாக சிறுத்தையை விரட்டி சென்ற காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.




தேடுதல் வேட்டை 


மேலும் பொதுமக்களை எச்சரிக்கும் வண்ணம் இன்று காலை வாகனத்தில் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் சீர்காழி வன சரக அலுவலர் டேனியல் ஜோசப் தலைமையில் வனத்துறையினர் கையில் வலைகளுடன் சிறுத்தையை தேடி வருகின்றனர். மேலும் நேற்று இரவு சிறுத்தை பதுங்கிய பகுதியில் பன்றி ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.




பள்ளிக்கு விடுமுறை 


சிறுத்தையை பொதுமக்கள் யாராவது கண்டால் 9360889724 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் உள்ள கூரைநாடு பகுதியில் செயல்படும் பால சரஸ்வதி மெட்ரிகுலேஷன் என்ற தனியார் பள்ளிக்கு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று விடுமுறை அறிவித்துள்ளார். வனத்துறை தீயணைப்பு துறை, காவல் துறை இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாகவும், கண்காணிப்பு கேமராக்கள் மூலம் சிறுத்தை நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும். விரைவில் சிறுத்தை பிடிக்கப்பட்டு விடும். ஆகையால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை‌ என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.





ஆச்சரியத்தில் மக்கள் 


மயிலாடுதுறை மாவட்டம் மற்றும் இன்றி அதன் சுற்றியுள்ள மாவட்டங்களிலும், காடுகள், மலைகள் எதுவும் இல்லாத நிலையில், இப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது ஆச்சரியம் கலந்த அச்சத்தை பொதுமக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது ‌.




சரக்கு ரயிலில் வந்த சிறுத்தை...?


மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு நெல் மூட்டைகள் சரக்கு ரயில் மூலம் ஏற்றி அனுப்பி வைக்கப்படுகிறது. அங்கு நெல் மூட்டைகளை இறக்கி விட்டு, காடுகள் நிறைந்த கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மீண்டும் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வரும் சரக்கு ரயில்களில் இந்த சிறுத்தை ஏறி, இங்கு வந்து இறங்கி இருக்கலாம் என விலங்கு ஆர்வலர்கள் பலரும் யூகிக்கின்றனர்.