மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சியின் கீழ் செயல்படும் புதிய பேருந்து நிலையம் கடந்த 1995 -ஆம் ஆண்டு 9 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டது. தற்போது இந்த பேருந்து நிலையம் சாலைகள் மிகவும் சேதமடைந்து மோசமான நிலையில் காணப்படுகிறது. இந்நிலையில் தமிழக அரசின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 8 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பேருந்து நிலையம் மேம்படுத்தும் பணியை 9 மாதத்தில் முடிப்பதற்காக நாமக்கல் ஜிவி கன்ஸ்ட்ரக்சன் என்ற நிறுவனம் ஒப்பந்தம் எடுத்துள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதற்காக பேருந்து நிலையம் வளாகத்தில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற துறை அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் விழா நடைபெறுவதாக இருந்தது.
ஆனால் பல்வேறு காரணங்களால் அமைச்சர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை. இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் விழா நடைபெற்றது. விழாவிற்கு திமுக மாவட்ட செயலாளரும், பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன், சீர்காழி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், நகராட்சி நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகரன், நகராட்சி ஆணையர் ஹேமலதா, துணை நகர மன்ற தலைவர் சுப்பராயன் ஆகியோர் முன்னிலை வகித்தார். முன்னதாக அடிக்கல் நாட்டு விழா காலை 9:15 மணிக்கு நடைபெறும் என குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் திமுக மாவட்ட செயலாளர் நிவேதா எம் முருகன் எம்எல்ஏ சுமார் 1 மணி நேரம் கடந்து தாமதமாக நிகழ்வுக்கு வருகை தந்தார்.
இதனால் காலை 9 மணிக்கே நிகழ்வுக்கு வந்த மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி சீர்காழி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைவரும் அவரது வருகைக்காக நீண்ட நேரம் காத்திருந்தனர். பின்னர் நிவேதா எம்.முருகன் எம்எல்ஏ வந்த பிறகு நிகழ்ச்சி தொடங்கப்பட்டு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. பின்னர் விழாவில் மாவட்ட மகாபாரதி பேசிய போது திடீரென மின் வெட்டு ஏற்பட்டது. இதனால் சிறிது நேரம் ஆட்சியரின் பேச்சு தடைப்பட்டது. பின்னர் மின்சாரம் வந்த பிறகு ஆட்சியர் தனது உரையை தொடர்ந்து பேசி முடித்தார். நிகழ்ச்சியில் ஆளும் கட்சி கவுன்சிலர்களைத் தவிர மற்ற கவுன்சிலர்கள் வராதது மக்களிடையே அதிர்ப்தியை ஏற்படுத்தியது.
முன்னதாக மாவட்ட செயலாளர் நிவேதா எம்.முருகன் பேசியபோது ஆதரவு கவுன்சிலர்கள் பெயரை மட்டும் வாசித்ததால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது, அதனை போக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் பேசிய போது சீர்காழி நகராட்சியில் உள்ள 24 வார்டு எண்ணையும் குறிப்பிட்டு, கவுன்சிலர்கள் பெயரை வாசித்தார். அரசின் பொது நிகழ்ச்சியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெரும்பாலான கவுன்சிலர்கள் கலந்து கொள்ளாததும், அரசு நிகழ்ச்சியின் இடையே மின் வெட்டு ஏற்பட்டதும் பலரது மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
IPL 2024 Auction: ஐபிஎல் ஏலம் - 10 அணிகளில் உள்ள காலியிடங்கள் என்ன? கைவசம் இருக்கும் தொகை போதுமானதா?