மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வீட்டின் மதில் சுவரை இடித்துக்கொண்டு உள்ளே புகுந்த விபத்தில், தூய்மைப் பணியாளர் உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பயங்கர விபத்து - இருவர் உயிரிழப்பு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த புத்தூரில், கடலூரில் இருந்து நாகப்பட்டினம் நோக்கிச் அரசு பேருந்து ஒன்று சென்றுள்ளது. அப்போது புத்தூர் கடைவீதியில் பேருந்து வந்த போது, பேருந்தை கவனிக்காமல் டீக்கடையில் இருந்து சாலையைக் கடக்க 50 வயதான சேகர் என்பவர் முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அரசு பேருந்து ஓட்டுனர் சேகர் மீது மோதாமல் இருக்க, திடீரென பேருந்தைத் திருப்பியுள்ளார், இதில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து, சேகர் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த சேகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்தார்.

வீட்டிற்குள் நுழைந்த அரசு பேருந்து 

மேலும் கட்டுபாட்டை இழந்த பேருந்து நிற்காமல், வேகமாகச் சென்று, சாலையோரம் இருந்த நாகராஜன் என்பவரின் வீட்டின் காம்பவுண்ட் சுவரை இடித்துக்கொண்டு, வீட்டின் மீது மோதி நின்றது. இந்த விபத்தின்போது, வீட்டிற்கு குப்பைகளைச் சேகரிக்க வந்த தூய்மைப் பணியாளர் 45 வயதான சித்ரா என்பவரும் மீதும் பேருந்து மோதியது. அதில் அவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்தார்.

அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பேருந்து பயணிகள்

விபத்து நடந்தபோது பேருந்தில் பல பயணிகள் இருந்தனர். ஆனால், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பெரிய அளவில் காயங்கள் ஏற்படவில்லை. உடனடியாக, பேருந்தின் முன்பக்கக் கண்ணாடிகள் உடைந்து, பயணிகள் அதிலிருந்து வெளியேறினர். இந்த விபத்து நடந்தவுடன், பேருந்து ஓட்டுநர் பேருந்தை அங்கேயே விட்டுவிட்டுத் தலைமறைவானார்.

போலீசார் தீவிர விசாரணை

விபத்து குறித்து உடனடியாக கொள்ளிடம் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கொள்ளிடம் போலீசார், விபத்தில் உயிரிழந்த சேகர் மற்றும் சித்ராவின் உடல்களை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்துக்கான காரணம் குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  தலைமறைவான அரசு பேருந்து ஓட்டுநரைத் தேடி வருகின்றனர். 

மக்களின் கோபம் - நிவாரணம் 

இந்த விபத்து குறித்து அப்பகுதி மக்கள் பெரும் கோபம் கொண்டுள்ளனர். அடிக்கடி இந்தக் பகுதிகளில் விபத்துகள் நடைபெற்றது. ஆனால், சாலை பாதுகாப்பு குறித்து அரசு சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்றும் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக, இப்பகுதியில் வாகனங்களின் அதிக வேகம் குறித்துப் பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் மக்கள் வேதனை தெரிவித்தனர். பல குடும்பங்களின் வாழ்க்கையைச் சீர்குலைக்கும் இது போன்ற சம்பவங்களைத் தடுக்க, அரசு உடனடியாக உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு உரிய நிவாரண உதவி வழங்க வேண்டும் என்றும் மக்கள் கேட்டுக்கொண்டனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.