வைத்தீஸ்வரன் கோயிலில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் பேரூராட்சி ஊழல் நடப்பதாக பேசியதால், திமுக மாவட்ட பொருளாளர் உள்ளிட்ட 7 பேர் கொண்ட கும்பல் பேரூராட்சி அலுவலகத்திலேயே கடுமையாக தாக்கியுள்ளனர்.
மனித சங்கிலி போராட்டம்
தமிழகம் முழுவதும் தமிழக அரசின் சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் சொத்து வரி உயர்வை கண்டித்து மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
Diwali & Navratri 2024: சென்னை - கன்னியாகுமரி பண்டிகை கால சிறப்பு ரயில் சேவை
மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற்ற போராட்டம்
அதில் ஒன்றாக மயிலாடுதுறை மாவட்டத்திலும் மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, வைத்தீஸ்வரன் கோயில், குத்தாலம் உள்ளிட்ட பகுதிகளிலும் நடைபெற்றது. சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன் கோயில் கடைவீதியில் வைத்தீஸ்வரன் கோயில் பேரூர் கழக செயலாளர் போகர். ரவி தலைமையில் நடைபெற்றது. அதில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் கையில் பாதகைகளை ஏந்தி சொத்து வரி உயர்வு திரும்ப பெற கோரி திமுக அரசுக்கு எதிரான மின் கட்டண உயர்வு, பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை செயல்படுத்தாத திமுக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பி மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வைத்தீஸ்வரன் கோயில் மனித சங்கிலி போராட்டம்
இந்நிலையில் நேற்றுமுன்தினம் வைத்தீஸ்வரன் கோயில் அதிமுக சார்பில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி நிர்வாக சீர்கேடு மற்றும் முறைகேடுகள் குறித்து பேசியதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் போகர் ரவி வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி செயல் அலுவலர் சந்தித்து 5 ஆண்டுகளுக்கு முன்பு செய்த ஒப்பந்த பணிக்கான தொகையை நிறுத்தி வைத்தது குறித்து செயல் அலுவலரிடம் கேட்க சென்றதாக சொல்லப்படுகிறது. அப்போது அங்கு வந்த திமுக மாவட்ட பொருளாளரும், வைத்தீஸ்வரன் பேரூராட்சி மன்ற தலைவர் பூங்கொடியின் கணவருமான அலெக்சாண்டர், அவரது சகோதரரும், பேரூராட்சி துணைத் தலைவருமான அன்புச் செழியன் உள்ளிட்ட ஏழு பேர் போகர். ரவியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தகவல் அறிந்த அதிமுக மாவட்டசெயலாளர் பவுன்ராஜ் தலைமையில் அதிமுகவினர் மருத்துவமனையில் குவிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மேலும் சிகிச்சைக்கா அவரை சிதம்பரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
காவல்நிலையம் முற்றுகை
இந்நிலையில் வைத்தீஸ்வரன் கோவில் காவல்நிலையத்தில் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சூழலில் வைத்தீஸ்வரன் கோயில் பேரூர் கழக செயலாளர் போகர் ரவியை தாக்கியவர்களை உடனே கைது செய்ய வலியுறுத்தி 200 -க்கும் மேற்பட்ட அதிமுகவினர் முன்னாள் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் சக்தி தலைமையில் வைத்தீஸ்வரன் கோயில் காவல்நிலைத்தை முற்றுகையிட்டனர். தொடர்ந்து அவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி, விரைவில் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்வதாக உறுதியளித்தனர். அதனை தொடர்ந்து அவர் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.