கொள்ளிடம் அருகே ஆரப்பள்ளம் ஊராட்சி, நல்லூர் மெயின் ரோட்டைச் சேர்ந்த சாமியம்மாள் (55) என்பவரின் பசுமாடு மீது உயர் அழுத்த மின் கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து பசுமாடு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

மேய்ச்சலுக்காக சென்ற பசுமாடு

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அடுத்த ஆரப்பள்ளம் ஊராட்சி, நல்லூர் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் 55 வயதான சாமியம்மாள். இவர் தனது கணவரை இழந்த நிலையில், பசுமாடுகளை வளர்த்து பால் விற்று தனது வாழ்வாதாரத்தை நடத்தி வந்தார். இந்நிலையில் ஆச்சாள்புரம் அருகே உள்ள வயலுக்கு சாமியம்மாள் தனது மாடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டிச் சென்றுள்ளார். 

அறுந்து விழுந்த மின்கம்பி

இந்த சூழலில் வழக்கமாக மாடுகள் மேயும் இடத்தில், எதிர்பாராதவிதமாக உயர் அழுத்த மின் கம்பிகள் திடீரென அறுந்து விழுந்துள்ளது. அப்போது துரதிர்ஷ்டவசமாக அங்கு மேய்ந்து கொண்டிருந்த ஒரு பசுமாட்டின் மீது மின்கம்பி விழுந்தது, இதில் உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்து அந்த மாடு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இந்த கோர சம்பவத்தால் மற்ற மாடுகளும், அருகில் இருந்த சாமியம்மாளும் அலறி அடித்துக்கொண்டு ஓடி உயிர் தப்பினர்.

Continues below advertisement

இது குறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த ஆணைக்காரன்சந்திரம் போலீசார் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின் கம்பிகள் அறுந்து விழுந்ததற்கான காரணம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. 

வாழ்வாதாரத்தை இழந்த சாமியம்மாள்

சாமியம்மாள், தனது கணவர் மறைவுக்குப் பிறகு, பசுமாடுகளை வளர்ப்பதை ஒரு முழுநேர தொழிலாகக் கொண்டு வாழ்ந்து வருகிறார். பால் கறந்து விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் வருவாய்தான் அவரது குடும்பத்தின் ஒரே ஆதரவாக இருந்துள்ளது. திடீரென ஒரு பசுமாட்டை இழந்ததால், சாமியம்மாள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில்"நான் என் மாடுகளை நம்பித்தான் என் வாழ்க்கையை நடத்தி வந்தேன். இந்த மாடுதான் எனக்கு எல்லாமே. இப்போ இதை இழந்துட்டேன். என் வாழ்வாதாரமே போச்சு. அரசுதான் எனக்கு உதவி செய்யணும்," என்று கண்ணீருடன் அவர் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

பொதுமக்களின் கோரிக்கை

இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த கவலையையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் அடிக்கடி மின்கம்பிகள் அறுந்து விழுந்து விபத்துகள் ஏற்படுவது குறித்து பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். மின்வாரியம் பழைய மற்றும் பழுதான மின்கம்பிகளை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்றும், மின் கம்பிகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக, மேய்ச்சல் நிலங்கள், பொது இடங்கள் மற்றும் குடியிருப்புகள் அருகே உள்ள மின் கம்பிகளை முறையாகப் பராமரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

"மின் கம்பிகள் பராமரிப்பில் மின்வாரியம் அலட்சியமாக இருப்பதால்தான் இதுபோன்ற விபத்துகள் நடக்கின்றன. ஒரு உயிரை இழந்த சாமியம்மாளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் மின்வாரியம் பார்த்துக்கொள்ள வேண்டும்," என்று அப்பகுதி சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.