விவசாயிகள் அரசின் பல்வேறு திட்டப் பலன்களைப் பெறுவதற்கு தங்களது நில உடைமை விவரங்கள் பயிர் சாகுபடி அறிக்கை போன்ற தொடர்புடைய ஆவணங்களை இணையத்தில் பதிவு செய்வது குறித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் விவசாயிகளுக்கு செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது;
விவசாயிகளுக்கு காலதாமதம்
விவசாயிகள் அரசின் பல்வேறு திட்டப் பலன்களைப் பெறுவதற்கு தங்களது நில உடைமை விவரங்கள் பயிர் சாகுபடி அறிக்கை போன்ற தொடர்புடைய ஆவணங்களை ஒவ்வொரு முறையும் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. இதில் ஏற்படும் காலதாமதத்தினை தவிர்க்கும் வகையிலும் அரசின் திட்டங்களில் விவசாயிகள் குறித்த நேரத்தில் பயன்பெற ஏதுவாகவும் அனைத்து விவரங்களையும் மின்னணு முறையில் சேகரித்திட தமிழ்நாட்டில் வேளாண் அடுக்ககம் திட்டம் (Agri Stack) செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
நிலுவையில் உள்ள 40 சதவீத விவசாயிகள்
இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் பதிவு செய்ய கடந்த 15.04.2025 -ம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், இதுநாள்வரை மயிலாடுதுறை மாவட்டத்தில் 20,193 பட்டாதாரர்கள் மட்டுமே மேற்படி திட்டத்தில் பதிவேற்றம் முடித்துள்ளார்கள். இன்னும் 40 சதவீத விவசாயிகள் வேளாண் அடுக்ககம் திட்டத்தில் இணையாமல் உள்ளனர். இந்நிலையில் பதிவு செய்யாத விவசாயிகள் அனைவரும் தங்களது நில உடைமை ஆவண விவரங்கள், ஆதார் எண், கைபேசி எண் ஆகிய விவரங்களுடன் தங்கள் கிராமத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தோட்டக்கலைத்துறை, வேளாண்மைத்துறை கள அலுவலர்களை கிராம நிர்வாக அலுவலகத்தில் நேரில் சந்தித்து தங்களது நில உடைமை ஆவண விவரங்களை விடுபாடின்றி வேளாண் அடுக்ககம் திட்டத்தில் இணைக்கும் பணியினை உடன் முடித்துக்கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
தேசிய அளவிலான தனித்துவ அடையாள எண்
மேலும் விவசாயிகள் பொது சேவை மையங்களிலும், (CSCs) சென்று தங்களது நில உடைமை விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம். விவசாயிகளின் அனைத்து ஆவணங்களும் இணைக்கப்பட்ட பின்னர் ஒருங்கிணைக்கப்பட்ட ஆதார் எண் போன்ற தனித்துவமான தேசிய அளவிலான அடையாள எண் ஒவ்வொரு விவசாயிக்கும் ஏற்படுத்தப்படும். மேற்படி திட்டத்தில் இணைந்தால் மட்டுமே பிரதம மந்திரி கவுரவ நிதித் திட்டத்தின் (PMKISAN) கீழ் நிதி உதவி பெறும் விவசாயிகள் தடையின்றி திட்டப்பயன்களை தொடர்ந்து பெற முடியும். அடுத்த தவணை தொகை இதில் இணைந்து பதிவு செய்த விவசாயிகளுக்கு மட்டுமே வழங்கப்படும்.
சிறப்பு முகாம்கள்
2025-2026-ம் நிதி ஆண்டு முதல் பிரதம மந்திரி கவுரவ நிதித் திட்டம் (PMKISAN) பயிர்க் காப்பீடுத் திட்டம் (PMFBY) போன்ற ஒன்றிய மற்றும் மாநில அரசின் திட்டங்களில் விவசாயிகள் எளிதில் பயன்பெற தேசிய அளவிலான தனித்துவ அடையாள எண் மிகவும் அவசியம் என்பதால் விவசாயிகள் தங்களது கிராமங்களில் ஊராட்சி மன்ற அலுவலகம் (அ) கிராம நிர்வாக அலுவலகங்களில் வேளாண்மை உழவர் நலத்துறை அலுவலர்களால் ஜூன் 30 வரை நடத்தப்படும் சிறப்பு முகாம்கள் மற்றும் அருகில் உள்ள பொது சேவை மையங்களுக்கு நேரடியாகச் சென்று தங்கள் நில உடைமை விவரங்கள், ஆதார், கைபேசி எண் ஆகிய விவரங்களை அளித்து எவ்வித கட்டணமுமின்றி 30.06.2025 ஆம் தேதிக்குள் இத்திட்டத்தில் பதிவு செய்து பயன்பெறுமாறு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.