மயிலாடுதுறையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் அதிகாரிகள் முன்னிலையில் பள்ளி வயது சிறார்கள் பேனா விற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி, கொள்ளிடம், குத்தாலம், பூம்புகார், தரங்கம்பாடி உள்ளிட்ட பேருந்து நிலையங்கள், சுற்றுலா தலங்கள் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் சமீப காலமாக சிறுவர்கள் பிச்சை எடுப்பது மற்றும் பேனா, கிழங்கு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வருவது அதிகரித்து வருகிறது. இவர்கள் பின்னால் பெரும் மாபியா கும்பல் இருப்பதாகவும், இது தொடர்பாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக ஆர்வலர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இதனிடையே மயிலாடுதுறையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் உதவிகள் மற்றும் மின் வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மற்றும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் திமுக பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டனர். அப்போது நிகழ்ச்சியை பார்ப்பதற்காக அமர்ந்திருந்த பெண்களிடம் சிறுவர்கள் பேனா விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது அனைவரிடமும் சென்று சிறுவர்கள் பேனா விற்பனை செய்தனர்.
இதனை அடுத்து மாணவர்களிடம் சென்று பேசியபோது, சரிவர பதிலளிக்காமல் அவர்கள் அங்கிருந்து விலகிச் சென்று விட்டனர். சிறுவயதில் பள்ளிக்குச் செல்ல வேண்டிய மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைத்துதுறை உயர் அதிகாரிகள் முன்னிலையில் அரசு நிகழ்ச்சியில் பேனா விற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை அங்கிருந்த அதிகாரிகள் சரிவர கண்டுகொள்ளாத நிலையில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து இதுபோன்ற சிறுவர்களை மீட்டு நல்வழிப்படுத்தி பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் அரசு சார்பில் பாதியில் படிப்பை விட்டு விட்டு பள்ளி செல்லாத மாணவர்கள் கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் நடவடிக்கை ஒருபுறம் நடைபெற்று வந்தாலும், இது போன்று அதிகாரிகள் கண்முன்னே பல மாணவர்கள் பிச்சை எடுப்பதும், வியாபாரம் செய்வதும், குழந்தை தொழிலாளர்களாக இருப்பதையும் இவர்கள் கண்டும் காணாமல் இருப்பது வேதனையான ஒன்று என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். கண்முன்னே உள்ள குழந்தைகள் தொழிலாளிகளை காக்க தவறும் அதிகாரிகள் எங்கிருந்து சுயமாக செயல்பட்டு குழந்தை தொழிலாளர்களை மீட்பதும், அவர்களை காப்பதும் நடைபெற போகிறது? என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் இந்த சம்பவத்தால் எழுந்துள்ளது.