மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் கையில் பதாகைகள் ஏந்திய தங்கள் குழந்தைகளுடன் அலோபதி மருத்துவத்திற்கு எதிராக இயற்கை வழி வாழ்வியல் கூட்டமைப்பு சார்பில் மனு அளித்துள்ளனர்.


இயற்கை வழி வாழ்வியல் கூட்டமைப்பு மனு


அவர்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது; நம்நாட்டில் சித்தா, ஹோமியோபதி, ஆயுர்வேதம், நேச்சுரோபதி, யுனானி, அக்குபங்சர் மற்றும் மரபு வாழ்வியல் என்று பலதரப்பட்ட வழிமுறைகள் இருந்தும், இவைகளையெல்லாம் பின்பற்றாமல் மருத்துவ தேர்வு உரிமை கொடுக்காமல், குழந்தை பருவத்திலேயே பல பக்க விளைவுகள் ஏற்படுத்தக்கூடிய ஆங்கில அலோபதி ஒற்றை மருத்துவத்தை மட்டும் தமிழ்நாடு அரசு நூதனமாக ஒற்றை மருத்துவத் திணிப்பாக திட்டமிட்டு பள்ளிக்கல்வி துறையின் மூலம் பல்லாண்டுகளாக செய்து கொண்டிருக்கிறது.




பள்ளிக்கு குழந்தைகள் கல்வி கற்க மட்டுமே வருகிறார்கள் - பக்க விளைவுகள் சுமக்க அல்ல


பல பக்க விளைவுகள் கொண்ட ஆங்கில மருத்துவத்தை மட்டும் மறைமுகமாக நூதன முறையில் திணிப்பதை அரசு உடனடியாக தடை செய்ய வேண்டும். பள்ளிக்கு பிள்ளைகள் கல்வி கற்க மட்டுமே வருகிறார்கள். பக்க விளைவுகள் உள்ள இரசாயன மருந்துகளில் ஏற்படும் பாதிப்புகளை சுமக்க அல்ல. ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு வாழ்வியல்முறையில் வாழ்வார்கள் எதைப்பற்றியும் அறியாது, பெற்றோர்களிடமும் முன்அனுமதி பெறாது, அனைத்து குழந்தைகளுக்கும் கொடுக்கப்படும் தடுப்பூசிகள், சத்து மாத்திரைகள், ஆல்பெண்டசால் போன்ற இரசாயன மருந்துகளை பள்ளிக்குள்ளேயே சென்று குழந்தைகளுக்கு கொடுக்கப்படுவது ஆராய்ச்சி அடிப்படையிலான ஒற்றை மருத்துவத்தை நூதனமான மறைமுக திணிப்பாக உள்ளது. 




மக்களாட்சிக்கு எதிரான தேசத் துரோக குற்றம்


தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிக் குழந்தைகளிடம் ஒற்றை மருத்துவ திணிப்பை அரசு உடனடியாக கைவிட வேண்டும். இது மக்களாட்சிக்கு (ஜனநாயகத்திற்கு) எதிரான தேசத் துரோக குற்றம். பள்ளியில் மதத் திணிப்பு என்பது தேவையில்லாத உரிமை மீறல் மட்டுமே. ஆனால், குழந்தைகளின் உடல் மற்றும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய பக்கவிளைவுகளுடன் கூடிய ஆங்கில ஒற்றை மருத்துவத்தை திணிப்பது என்பது கொலைமுயற்சி மற்றும் தேசத் துரோக குற்றச்செயல் ஆகும். பள்ளிகளில் ஆசிரியர்கள் பார்வையில் தடுப்பூசி மற்றும் மருந்து, மாத்திரைகள் கொடுக்கப்படும்போது, மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஒற்றை மருத்துவ மாயையில் அதீத நம்பிக்கை ஏற்படுத்தப்படுகிறது.




பள்ளி அல்லாத இடங்களை விழிப்புணர்வு செய்யுங்கள். 


இம்மருந்துகளால் ஏற்படும் பக்கவிளைவுகளுக்கு யார் பொறுப்பேற்பார்கள்? இப்படி ஆராய்ச்சி அடிப்படையில் தடுப்பூசிகளை போடுவதையும் மாத்திரைகளை திணிப்பதையும், இலவசமாக நஞ்சுள்ள மாதவிடாய் பஞ்சுகளை கொடுப்பதையும் தமிழ்நாடு அரசு உடனடியாக அனைத்து கல்வி வளாகங்களிலும் தடை செய்ய வேண்டும். பக்க விளைவுகள் உள்ள அலோபதி மருந்து பொருட்களை விற்பதற்கும் நோய்களை பற்றிய பயத்தை விதைப்பதற்கும் பள்ளி அல்லாத இடங்களை விழிப்புணர்வுக்கு பயன்படுத்துங்கள். பள்ளிகளில் இனி அனுமதிக்கமாட்டோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




அந்த மனுவினை இயற்கை வழி வாழ்வியலாளர் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீர்காழி நலம் சுதாகர் தலைமையில், இயற்கை விவசாயி ராமலிங்கம், காவிரி டெல்டா விவசாய சங்க மாவட்ட தலைவர் ராஜேஷ் மற்றும் வீட்டில் குழந்தை பெற்றெடுத்த பெற்றோர்கள் சேர்ந்து மனுவை வழங்கினர் .