கடந்த சில தினங்களுக்கு முன்பு வங்கக்கடலில் உருவாகிய புயல் சின்னம், வட தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும் 9 மாவட்டங்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கையை சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.


புயல் மாதம்


ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் வங்கக்கடலில் புயல் உருவாவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு புயலுக்கான அடையாளமாக காற்றழுத்த மையம் உருவாகியிருந்தது. கடந்த ஒரு வார காலமாக இது கொஞ்சம் கொஞ்சமாக வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியிருக்கிறது. இது இப்போது வட தமிழக கடல் பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது. தொடர்ந்து சில மணி நேரங்களில் இது புயலாக வலுப்பெறக்கூடும் என கணிக்கப்பட்டிருக்கிறது.




6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்


இந்த சூழலில் நாளை 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் அடுத்த 12 மணி நேரத்தில் வடக்கு- வடமேற்கு திசையில் இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டி புயல் சின்னம் நகரக்கூடும். அதன் பிறகு, வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழக புதுவை கடலோரப்பகுதிகளில், காரைக்காலிற்கும் மாமல்லபுரத்திற்கும் இடையே வரும் நவம்பர் 30-ம் தேதி காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்கக்கூடும்.




அப்போது காற்றின் வேகம் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 28-ஆம் தேதி மாலை முதல் 29-ஆம் தேதி காலை வரை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் பொழுது புயலாக வலுப்பெற்று காற்றின் வேகம் மணிக்கு 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 85 கிலோ மீட்டர் வேகத்தில் வீச வாய்ப்பு உள்ளது. 




மழை பொழிவு மாவட்டங்கள் 


நாளை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழை ஓரிரு இடங்களில் அதி கன மழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.




மழைநீரில் மூழ்கிய 300 ஏக்கர் 


இந்நிலையில் கனமழையால் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சின்ன பெருந்தோட்டம் கிராமத்தில் சுமார் 300 ஏக்கரில் விவசாயிகள் சம்பா சாகுபடி செய்திருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. கடந்த மூன்று நாட்கள் பெய்த மழையில் வடிகால் வசதி இல்லாமலும், கடல் நீர் உட்புகுந்தும் சம்பா சாகுபடி பயிர்கள் தற்போது தண்ணீரில் மூழ்கி அழுகி வருகிறது. மேற்கு பகுதியில் இருந்து வரும் அதிகப்படியான மழை நீரால் 300 ஏக்கர் சாகுபடி செய்யப்பட்ட சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி கடல் போல் காட்சி அளிக்கிறது. தண்ணீர் வடிய வழியில்லாமல் இருந்து வருகிறது.




தொடர்ந்து புறக்கணிப்பு 


மேலும் மழை தொடர்ந்து பெய்து வருவதால் சம்பா சாகுபடி பயிர்கள் முற்றிலும் அழிந்து விடும் எனவும் விவசாயிகள் வேதனை அடைந்துள்ள விவசாயிகள், இந்த பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாக நிவாரணம் மற்றும் காப்பீட்டுத் தொகை வழங்காத நிலையில், தற்போது ஏக்கருக்கு 30 ஆயிரம் செலவு செய்து சாகுபடி செய்தாலும் ஆண்டு தோறும் இந்த பகுதியில் மழை நீர் தேங்கி பயிர்கள் அழுகி பாழாவதால் இரண்டு முறை விவசாயம் செய்ய நேரிடுவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். 


இந்த பகுதியின் பிரதான வடிகாலான செல்வனாறு கரையை பலப்படுத்தி, கடல் நீர் உட்புகாமல் ஆற்றின் முகத் துவாரத்தில் கதவணை அமைத்து தரவும், பாதிக்கப்பட்ட விளைநிலங்களை உரிய கணக்கீடு செய்து அரசு நிவாரணம் வழங்கவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.