மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி நகராட்சிக்குட்பட்ட தேர் கீழ வீதி பகுதியில் திறந்த நிலையில் உள்ள சாக்கடை கால்வாய், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த பல மாதங்களாக சிமெண்ட் ஸ்லாப் உடைந்த நிலையில் கிடக்கும் இந்த சாக்கடை, சீர்காழி நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கிற்கு ஒரு சான்றாக உள்ளது என சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளனர்.

நகராட்சி அலட்சியத்தால் தொடரும் விபத்துகள்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தேர் கீழ வீதி பகுதியில் அமைந்துள்ள சாக்கடை கால்வாயின் சிமெண்ட் மூடி உடைந்ததால், கால்வாய் முழுவதுமாக திறந்த நிலையில் இருக்கிறது. இதன் காரணமாக அவ்வழியே செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், இரவு நேரங்களில் இதனை கவனிக்காமல் அதில் விழுந்து காயமடைகின்றனர். பள்ளி மாணவர்கள் மற்றும் பாதசாரிகளும் இதில் தவறி விழுந்து காயம் அடைவது தொடர் கதையாகி வருகிறது.

சில மாதங்களுக்கு முன்பு, அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது இருசக்கர வாகனத்துடன் கால்வாயில் விழுந்து பலத்த காயம் அடைந்தார். பின்னர், அப்பகுதி மக்கள் சீர்காழி நகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். ஆனால் புகார் அளித்து ஒருமாத காலம் கடந்தும் அது தொடர்பான எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த சூழலில் ஆபத்தான அந்தப் பகுதியை எச்சரிக்கை செய்யும் விதமாக அப்பகுதி பொதுமக்கள் ஒரு மரக்கிளையினை அங்கு நட்டு வைத்துள்ளனர்.  அதனை கண்டும், கால்வாயை மூடுவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பெரும் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். 

உயிர் சேதம் ஏற்பட்டால் யார் பொறுப்பு?

நகராட்சி நிர்வாகத்தின் இத்தகைய அலட்சியத்தால், எங்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை” என்று அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர். சாலைகளில் உள்ள பள்ளங்கள் மற்றும் திறந்த சாக்கடைகளால் ஏற்படும் விபத்துகள் ஒருபுறம் என்றால், அதிகாரிகள் அதனைப் புறக்கணிப்பது பொதுமக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது. இது போன்ற விபத்துகள் தொடர்ந்து நடந்தால், பொதுமக்கள் மட்டுமல்லாது, நகரின் வளர்ச்சிக்கும் பெரும் தடையாக இருக்கும். “தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்களும், பள்ளி செல்லும் மாணவர்களும் இந்தப் பாதையைப் பயன்படுத்துகின்றனர். திறந்த சாக்கடையால் எப்போது வேண்டுமானாலும் ஒரு பெரும் விபத்து நிகழலாம். உயிரிழப்பு ஏற்படும் முன், நகராட்சி நிர்வாகம் உடனடியாக சாக்கடையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

நகராட்சி ஆணையர் பதிலளிக்க வேண்டும்

இப்பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய் ஆபத்தான நிலையில் இருப்பது குறித்து நகராட்சி ஆணையர் பதிலளிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒருசில சிமெண்ட் ஸ்லாப்கள் மட்டுமே உடைந்திருப்பதால், அதனை உடனே சீரமைப்பது பெரிய செலவு இல்லை. ஆனால், அதனை சரிசெய்ய அதிகாரிகள் காட்டும் அலட்சியம், பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஆகவே, பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, உடனடியாக இந்த சாக்கடை கால்வாயை சீரமைக்க வேண்டும். திறந்த நிலையில் உள்ள கால்வாயை மூடுவதோடு, இது போன்ற அவசர நிலைகளில் விரைந்து செயல்பட ஒரு அவசர கால நடவடிக்கை குழுவை அமைக்கவும் நகராட்சி நிர்வாகம் முயற்சிக்க வேண்டும். இல்லையெனில், ஒரு பெரும் துயரச் சம்பவம் நடக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. பொதுமக்களின் உயிருக்கு உத்தரவாதம் அளிப்பது அரசின் கடமை. அந்த கடமையை சீர்காழி நகராட்சி நிர்வாகம் செவ்வனே செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.