கடந்த சில ஆண்டுகளாக இயற்கை இடற்பாடுகளுக்கு மத்திய அரசு உரிய நிவாரணத்தை வழங்காமல் பாரபட்சம் காட்டுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.


சிபிஐ(எம்) மாவட்ட அலுவலகம் திறப்பு 


மயிலாடுதுறை நீதிமன்ற சாலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாவட்டக்குழு கட்டிடம் திறப்புவிழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் பங்கேற்று திறந்து வைத்தார். முன்னதாக அலுவலகத்தில் வாயில் பகுதிகளில் கட்சி கொடியை ஏற்றி வைத்த மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.




செய்தியாளர்கள் சந்திப்பு 


அப்போது அவர் கூறுகையில், வடகிழக்கு பருவமழை தொடக்கத்திலேயே அதிகமான பாதிப்பு இருக்கும் என்ற அச்சம் மக்கள் மனதில் உள்ளது. டெல்டா மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பெரிய அளவில் மழை இருக்கும் என்று அறிவிப்புகள் வருகிறது. தமிழக அரசு முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சென்னையில் பெய்த மழையில் தமிழக முதல்வர் துணை முதல்வர் அமைச்சர்கள் களத்திலே இருந்து மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் பாதுகாக்கப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டுகளை தெரிவிக்கிறது.




பாரபட்சம் காட்டும் மத்திய அரசு  


வருகின்ற தொடர் மழை வெள்ளம் போன்ற இடர்பாடுகளில் இருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து மக்களை பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மழை உள்ளிட்ட இயற்கை இடர்பாடுகளில் பாதிக்கப்பட்ட நெல், வாழை கரும்பு போன்ற பயிர்கள் குறித்து முறையான கணக்கெடுப்பு செய்து நிவாரணம் வழங்க வேண்டும். மத்திய அரசு இயற்கை இடர்பாடு பாதிப்புகளுக்கு கடந்த சில ஆண்டுகளாக உரிய நிதியை வழங்காததால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணத்தை வழங்க முடியவில்லை. மத்திய அரசு தனது பாரபட்சத்தை கைவிட்டு மாநில அரசின் சுமையில் தானும் பங்கெடுத்து உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும். 




ஆளுநர் பதவி தேவையற்றது 


ஆளுநர் ரவி தமிழ்நாட்டிற்கு விரோதமாக தமிழர் பண்பாடு, கலாச்சாரம், ஆகியவற்றிற்கு எதிராக பேசுவதை தொடர்ந்து வருகிறார். பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் ஆளுநர் தன் நடவடிக்கையை மாற்றிக்கொள்ளவில்லை. தமிழகத்திற்கு எதிராக செயல்படும் ஆளுநரை மாற்ற வேண்டும் என்று எல்லா கட்சியினரும் கோரிக்கை விடுத்தும், மத்திய அரசு ஆளுநரை மாற்றமால் இருக்கிறது. ஆளுநரின் பதவிக்காலம் முடிந்தும் மாற்றுவது குறித்து ஆலோசிப்பதாக மத்திய அரசு கூறுகிறது. எங்களைப் பொறுத்தவரை தமிழ்நாட்டிற்கும் மற்றும் எந்த மாநிலத்திற்கும் ஆளுநர் பதவி என்பது தேவையில்லை. பாஜக அல்லாத 10 மாநிலங்களில் ஆளுநர் பதவியை பயன்படுத்தி மத்திய அரசு போட்டி சர்க்கார் நடத்துவது கண்டிக்கத்தக்கது. மாநில அமைச்சரவையில் எடுக்கப்படும் முடிவுகளை செயல்படுத்துவது தான் ஆளுநரின் கடமை என்று உச்ச நீதிமன்றம் பலமுறை தீர்ப்பு வழங்கியும், அதற்கு நேர்மறையாக தான் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் செயல்படுகிறார்கள். இந்த போக்கை இந்தியா முழுவதும் மாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.




தமிழ்த்தாய் வாழ்த்து பிரச்சினை 


தமிழ்த்தாய் வாழ்த்தை திருத்தி பாடுவதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது. தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில் திராவிடம் என்ற வரி விடப்பட்டது சர்ச்சையான பின்னர்தான் வருத்தம் தெரிவிப்பதாக கூறுகிறார்கள். எப்படி அந்த வரி விடப்பட்டது என்பதற்கான விளக்கமும் சொல்லப்படவில்லை. அதை உடனடியாக அப்போதே சரி செய்து இருக்க வேண்டும்.


தமிழ்நாடு வறுமை மாநிலமாக மாறும் 


தமிழகத்தில் தொகுப்பூதியம், மதிப்பூதியம் என்ற அடிப்படையில் பணியாளர்கள் பணியமர்த்தப்படும் நிலை உள்ளது. பணி பாதுகாப்பு, சம்பள பாதுகாப்பு சமூக பாதுகாப்பு இல்லை என்றால் தமிழகத்தை வறுமை மாநிலமாக மாற்றிவிடும். எனவே தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறும் ஆசிரியர்கள், செவிலியர்கள் மருத்துவர்களை உள்ளிட்டோரை பணி நிரந்தரம் செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும். 


கார்ப்பரேட்களுக்கு, மதவாதிகளுக்கு ஆதரவாக இருக்கிற மத்திய பாஜக அரசை எதிர்த்து இளைஞர்கள் ஒன்று திரண்டு போராட வேண்டும். பாஜக தேர்தல் ஆணையத்தை கையில் வைத்துக்கொண்டு தேர்தல் முடிவுகளை மாற்றி வருகிறது என குற்றச்சாட்டை தெரித்தார்.