மயிலாடுதுறை மாவட்டம்  குத்தாலம் பகுதியில் உள்ள 8 எண்ணெய் கிணறுகளில் மராமத்து பணிகள் மேற்கொள்ளப்போவதாக ஓஎன்ஜிசி அறிவித்திருப்பது வேளாண் பாதுகாப்பு சட்டத்தை மீறும் செயல் என மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.ஜெயராமன் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.


மீண்டும் 8 எண்ணெய்  கிணறுகளை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் ஓஎன்ஜிசி


குத்தாலம் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள 8 கிணறுகளில் மராமத்து பணிகள் மேற்கொள்ள உள்ளதாக ஓஎன்ஜிசி நிறுவனம் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.ஜெயராமன் மயிலாடுதுறையில் இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: வேளாண் மண்டல பாதுகாப்பு சட்டம் எண்ணெய் எடுப்பு திட்டங்களால் காவிரிப்படுகை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதை ஏற்றுக்கொள்கிறது. அச்சட்டம்  பழைய திட்டங்கள் தொடர அனுமதித்தது. இந்நிலையில் பழைய எண்ணெய் கிணறுகளில் மராமத்து செய்வதாகக் கூறிக்கொண்டு ஆட்சேபனைக்குரிய பெரிய வேலைத் திட்டங்களை ஓஎன்ஜிசி நிறுவனம் நடத்த முயற்சித்து வருகிறது. 




இத்திட்டம் குறித்து கடந்த மார்ச் மாதம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர், குத்தாலம் வட்டாட்சியர் உள்ளிட்டோரை சந்தித்து மனு அளித்து, ஓஎன்ஜிசி நடவடிக்கைகளை மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு தடுத்து நிறுத்தியது.  சம்பந்தப்பட்ட 8 எண்ணெய் கிணறுகள் பற்றிய ஆவணங்களை மாவட்ட நிர்வாகம் பரிசோதிப்பதுடன் அதன் நகல்களை பார்வைக்கு வழங்க வேண்டும் ஆட்சியரிடம் வேண்டுகோள் வைக்கப்பட்டது. ஆனால், இதுவரை எந்த ஆவணமும் காட்டப்படவே இல்லை. மாவட்ட நிர்வாகம் அந்த ஆவணங்களை பரிசோதித்ததாகவும் தெரியவில்லை. 




பராமரிப்பு என்ற பெயரில் புதிய திட்டம் 


இந்நிலையில் மராமத்து நடத்தப் போவதாக ஓஎன்ஜிசி அறிவித்தது காவிரி படுகை மக்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. பராமரிப்பு என்ற பெயரில், மூன்று கிலோமீட்டர் ஆழத்தில் உள்ள ஷேல் என்ற களிப்பாறையில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை நடைமுறைப்படுத்த இருக்கிறது. பழைய எண்ணெய் கிணறுகளின் உள்ளே 1,500 மீட்டர் ஆழத்தில், பக்கவாட்டில் சாய்வாக சைடு ட்ராக்கிங் என்ற பெயரில் புதிதாக குழாய்களை அமைத்து, 3000 மீட்டர் ஆழத்துக்கு பக்கவாட்டுக் கிணறுகளை அமைத்து எண்ணெய் - எரிவாயு எடுக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஏற்கனவே  அனுமதிக்கப்பட்ட  திட்ட அறிக்கையில் கூறப்படாத ஒன்று.  சட்டங்களை மீறிய செயல் இது.  




பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் தலைமையிலான குழுவின் அறிக்கையை வெளியிட வேண்டும் 


ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட திட்டத்தில் ஏதேனும் மாற்றம் இருந்தால் புதிதாக சுற்றுச்சூழல் பாதிப்பு அறிக்கை மற்றும் அதை சரி செய்வதற்கான மேலாண்மை திட்டஅறிக்கை ஆகியவற்றைத் தயார் செய்து, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் புதிய அனுமதியைப் பெற வேண்டும். இத்தகைய செயல்பாடுகளை தமிழக அரசும், மாசு கட்டுப்பாட்டு வாரியமும் அனுமதி தரக்கூடாது. மராமத்து என்ற பெயரில் அபாயகரமான திட்டங்களை ஓஎன்ஜிசி நடத்துவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் தலைமையிலான குழு சமர்ப்பித்துள்ள அறிக்கை வெளியிடப்படும் வரை ஓஎன்ஜிசி எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது என்று தடை செய்யப்பட வேண்டும்.  தமிழக அரசு அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும். ஓஎன்ஜிசி மரமத்துப் பணிகளை மேற்கொள்ளும் செயல்பாடுகளில் ஈடுபடுமேயானால் மக்களை ஒன்று திரட்டி மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் சார்பில் போராட்டங்கள் நடத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.