சீர்காழி அடுத்த கீழப்பெரும்பள்ளம் கேது ஸ்தலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை, மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் வழிபாடு செய்துள்ளனர். 


தமிழக கோயில்களில் பாஜக தலைவர்கள்


பிரதமர் நரேந்திரமோடி தியானத்திற்காக நேற்று கன்னியாகுமரி வந்துள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் ஒரே சமயத்தில் தமிழ்நாடு வருவது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளாக பார்க்கப்படுகிறது.  நேற்றோடு நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரங்கள் நாடு முழுவதும் நிறைவடைந்துள்ள நிலையில், ஜூன் 1ஆம் தேதியான நாளை இறுதி கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைப்போம் என்று சூளுரைத்துக்கொண்டிருக்கும் பாரதிய ஜனதா கட்சி  தலைவர்கள் தங்களது பிரச்சாரங்களை முடித்துவிட்டு கோயில்களை நோக்கி சென்று வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.




திருமயத்தில் அமித்ஷா


அந்த வகையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாடு வந்து பிரத்யேகமாக புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் உள்ள கோட்டை பைரவரை வழிபட்டார். இது அனைவரையும் புதுக்கோட்டை மாவட்டத்தை நோக்கி திரும்பி பார்க்க வைத்துள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை தஞ்சை பெரிய கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் உள்ளிட்ட பெரிய பிரபலமான கோயில்களுக்கு சென்று வழிபடுவதையே அரசியல் கட்சி தலைவர்கள் வாடிக்கையாக வைத்திருக்கும் நிலையில், திருமயம் கோட்டையில் உள்ள பைரவர் கோயிலை அமித்ஷா நாடி வந்து வழிபட இருப்பது ஏன் என தமிழக அரசியல்வாதிகளே வியப்பில் ஆழ்ந்திருக்கின்றனர்.




கீழப்பெரும்பள்ளம் கேது ஸ்தலத்தில் அண்ணாமலை


இந்நிலையில் சீர்காழி அடுத்த கீழப்பெரும்பள்ளம் கேது ஸ்தலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை, மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் வழிபாடு செய்துள்ளனர். நவகிரகத்தில் கேது ஸ்தலமாக விளங்கும் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கீழப் பெரும்பள்ளம் கிராமத்தில் நாகநாத சுவாமி கோயில் அமைந்துள்ளது.  இங்கு கேது பகவான் தனி சன்னதியில் அருள் பாலித்து வருகின்றார். நவகிரக கோயில்களில் ஒன்றான இக்கோயிலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மாநில பொதுச் செயலாளரும், தஞ்சாவூர் பாராளுமன்ற வேட்பாளர் கருப்பு முருகானந்தம் கேது ஸ்தலத்தில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர்.




முன்னதாக கோயில் நிர்வாகம் சார்பாக சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டு ஒவ்வொரு சன்னதியிலும் சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டனர். தொடர்ந்து கேது பகவான் வழிபாட்டுக்கு பின் தாமரைப்பூமாலை அணிவித்து பரிவட்டம் கட்டி கோயில் சார்பில் சிறப்பு செய்தனர். தொடர்ந்து பொதுமக்கள் கேட்டுக் கொண்டதன் பெயரில்  பொதுமக்களுடன் அண்ணாமலை புகைப்படம் எடுத்துக் கொண்டு  பொதுமக்களை மகிழ்வித்து கொண்டார். தேர்தல் முடிவுகள் வர உள்ள நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்கள் பல்வேறு கோயில்களில் வழிபட்டு செய்து வருகின்றனர். அந்தவகையில், இன்று கேது பகவான் ஸ்தலத்தில் தமிழக பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை வழிபாடு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.




கேது கோயிலின் சிறப்பு 


மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு அருகே  கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற நாகநாதர் கோயில். கேது பகவான் கோயில் ( ஸ்தலம்) என அழைக்கப்படும் இந்த கோயிலில் சவுந்தரநாயகி அம்மனுடன் நாகநாதர், பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ராகு - கேதுக்கள் தோஷ பரிகாரம் செய்யும் ஆலயமாகவும், வாசுகி பாம்பு வழிபாடு செய்த ஸ்தலமாகவும் இது விளங்குகிறது. பலவர்ணங்களை உடையவராக கருதப்படும் கேது பகவான் நவகிரகங்களில் ஞானத்தை அளிப்பவராவார். இவர் மனக்கோளாறு, தோல்வியாதிகள், புத்திரதோஷம், சர்ப்பதோஷங்களை அளிக்கவல்லவர். கேது பகவானுக்கு கொள்ளு தானியத்தை கீழே பரப்பி அதில் தீபமிட்டு வணங்கினால் கேது பகவானால் ஏற்படும் தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். நவக்கிரகங்களில் ஒன்றான கேது பகவானுக்கு தனி சன்னதி உள்ள இந்த கோயிலில் கேது பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.