மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே சோழன்பேட்டை ஊராட்சி கல்லணை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள காவிரி ஆற்றுப் பாசன தென்பாதி வாய்க்காலின் நடுவே ஆற்று நீர் போவதற்கு இடையூறாக அமைக்கப்பட்டுள்ள மின் கம்பங்களை மாற்றி அமைக்க வேண்டி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 


தென்பாதி வாய்க்கால்


மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே சோழன்பேட்டை ஊராட்சி கல்லணை நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது காவிரி ஆற்றுப் பாசன வாய்க்காலான தென்பாதி வாய்க்கால். இந்த பிரதான காவிரி ஆற்றில் இருந்து பிரியும் தென்பாதி வாய்க்கால் சோழன்பேட்டை, ஆனந்த குடி, அருள்மொழி தேவன், உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு முக்கிய ஆற்றுப் பாசன வாய்க்காலாக திகழ்ந்தது வருகிறது.




பயன்பெறும் விவசாயிகள் 


இந்த தென்பாதி வாய்க்கால் மூலம் அப்பகுதியில் சுமார் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட விளைநிலங்கள் மற்றும் ஏராளமான குளங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த வாய்க்கால் மூலம் வரக்கூடிய நீரை ஆங்காங்கே குளங்களில் சேகரித்து வைத்துக் கொண்டு தேவைப்படும் பொழுது விவசாயிகள் தங்களுடைய விவசாய பணிகளுக்கு நீரை பயன்படுத்தி வருவதோடு, மீன் வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.




சாலை அகலப்படுத்தும் பணி


இந்நிலையில் மயிலாடுதுறை- கல்லணை நெடுஞ்சாலையை ஒட்டி வரக்கூடிய பல ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த வாய்க்காலை நெடுஞ்சாலைத்துறையினர் சாலையை அகலப்படுத்துவதற்காக அதனுடைய அகலத்தை தற்போது குறைத்துள்ளனர். வாய்க்கால் நன்கு அகலமாக இருந்த பொழுது மின்சாரத் துறையினர் தங்களுடைய மின்கம்பங்களை வாய்க்காலின் நடுவே ஊன்றி சுற்றுவட்டார பகுதிகளுக்கு மின்விநியோகம் அளித்தனர். தற்பொழுது வாய்க்காலின் அகலம் நெடுஞ்சாலை துறையினரால் குறைக்கப்பட்டுள்ளதாலும், நடுவே நடப்பட்டுள்ள மின்கம்பத்தால் அதில் செடி கொடிகள் சிக்கி கொண்டு காவிரி ஆற்றில் இருந்து வரக்கூடிய நீர் சரியாக செல்ல முடியாமல் தடைப்பட்டு விளைநிலங்களும், குளங்களும் வாய்க்கால் பாசனம் பெறுவதில் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 




வாய்க்காலில் மின்கம்பம் 


இதுகுறித்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கூறுகையில், இப்பொழுதும் மின் மோட்டார் வசதி இல்லாத விவசாயிகள் மற்றும் சிறுகுறு விவசாயிகளாகிய நாங்கள் காவிரி ஆற்றுப் பாசனத்தை நம்பி மட்டுமே விவசாயம் செய்து வருகிறோம். அப்படிப்பட்ட எங்களுக்கு பிரதான பாசன வாய்க்காலாக இருப்பது இந்த தென்பாதி வாய்க்கால், பழமையான இந்த வாய்க்கால் காவிரி ஆற்றில் இருந்து பிரிந்து மயிலாடுதுறை - கல்லணை நெடுஞ்சாலையை ஒட்டி வருகிறது. நெடுஞ்சாலைத்துறையினர் சாலையை அகலப்படுத்துவதற்காக வாய்க்காலின் அகலத்தை விவசாயிகளிடம், பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்காமல் தன்னிச்சையாக சிமெண்ட் ரிவிட்மெண்டுகள் அமைத்து அகலத்தை குறைத்துள்ளனர். இது மட்டும் இல்லாமல் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் இந்த வாய்க்கால் அகலமாக இருந்த பொழுது இதன் நடுவே மின்சாரத்துறையினர் தங்களுடைய மின் கம்பங்களை நட்டு, சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் விவசாய மின் இணைப்புகளுக்கு மின்விநியோகம் செய்து வருகின்றனர். 




விவசாயிகள் கோரிக்கை 


வாய்க்காலின் அகலம் குறைந்ததாலும், நடுவே மின்கம்பங்கள் நடப்பட்டுள்ளதாலும் தென்பாதி வாய்க்காலில் வரக்கூடிய ஆற்று நீரின் அளவு வெகுவாக குறைந்து விட்டது. இதனால் குளங்களில் நீர் நிரப்புவதிலும் விவசாய பணிகளுக்கு இந்த நீரை பயன்படுத்துவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விவசாயம் தான் நமது நாட்டின் பிரதான தொழில், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முதுகெலும்பு என்பதை கருத்தில் கொண்டு வாய்க்காலின் நடுவே ஆற்று நீர் செல்வதற்கு தடையாக நடப்பட்டுள்ள மின் கம்பத்தை மாற்றி அமைப்பதற்கும் வாய்க்காலை அகலப்படுத்துவதற்கும், அதற்கான அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.