பிள்ளைகள் விரட்டியதால் வேப்பங்கொட்டை பொறுக்கியும் தன்மானம் இழந்து யாசகம் பெற்று வாழ்ந்து வருவதால் தன்னை கருணை கொலை செய்து விடும் படி முதியவர் ஒருவர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டை விட்டு விரட்டப்பட்ட தந்தை
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேட்டை அடுத்த மண்ணிப்பள்ளம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் 76 வயதான சிங்காரம். கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி இறந்த நிலையில், டீக்கடை நடத்தியும், கூலி வேலையும் செய்து வந்துள்ளனர். இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். 1 ஏக்கர் நிலம் மற்றும் வீடுடன் 50 குழி இடம் உள்ளது. 25 குழி இடத்தை மகள் பெயரில் எழுதி வைத்துள்ளார். இந்நிலையில் மீதம் உள்ள அவரது சொத்தினை அவரது மகன் எழுத படிக்க தெரியாத அப்பாவிடம் இருந்து அவர் பேரில் எழுதி வாங்கிகொண்டு, தந்தையை வீட்டை விட்டு விட்டியதாகவும், அதனால் கடந்த 10 ஆண்டுகளாக இருக்க இடம் இன்றி தவித்து வருவதாக தனது மகன் மீது குற்றம்சாட்டியுள்ளார் சிங்காரம்.
முதியோர் உதவித்தொகை தடுத்து நிறுத்தம்
இந்த சூழலில் இது தொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் கடந்த 2021 - 2022 ஆம் ஆண்டு சோழம்பேட்டை முதியோர் இல்லத்தில் சமூக நலத்துறையினரால் தங்கவைக்கப்பட்டுள்ளார். மேலும் முதியவர் சிங்காரத்தை பராமரிப்பதாக மயிலாடுதுறை கோட்டாட்சியரிடம் அவரது மகன் உறுதியளித்து சென்றுள்ளார். ஆனால், அவரை பராமரிக்காத அவரது மகன், சிங்காரம் வாங்கி வந்த முதியோர் உதவி தொகையையும் தவறான தகவல் கொடுத்து ரத்து செய்ய வைத்துள்ளார்.
கருணை கொலை செய்ய கோரி மனு
மேலும் அவரை மகன் தொடர்ந்து தன்னை துன்புறுத்தி வருவதால் தற்போது வீதியில் நிற்பதாகவும், வயோதிகம் மற்றும் முதுமையினால் நடமாட்டம், பார்வை குறைபாடு, வயோதிக மூப்பினால் ஏற்படும் பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருவதால், டீ குடிக்க கூட வழியில்லாமல் இருப்பதாகவும் தற்போது வேப்பங்கொட்டை பொருக்கியும், யாசகம் கேட்டும் வாழ்ந்து வரும் தனக்கு தன்மானம் தடுப்பதால் தனது வயது மூப்பையும், மகனின் துன்புறுத்தலையும் கருத்தில் கொண்டு தன்னை கருணை கொலை செய்து விடும்படி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
Virat Kohli: அந்த ஒரு இன்னிங்ஸ்.. அதனால தான் அவரு கிங்! கோலியை புகழ்ந்த அப்ரிடி
பெற்ற மகன் தந்தையின் சொத்துக்களை அபகரித்து கொண்டு தந்தையை வீட்டை விட்டு விரட்டி அடித்த நிலையில், தனக்கு வாழ வழி இல்லையென கூறி தன்னை கருணை கொலை செய்ய கோரி முதியவர் மனு அளித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இச்சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கும்படி கோட்டாட்சியருக்கு உத்தரவிட்டுள்ளார்.
மதுபோதையில் முந்திரி மரங்களுக்கு தீ வைக்கும் மது பிரியர்கள் - விவசாயிகள் அதிர்ச்சி