தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் விஜய். கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட நடிகர் விஜய் கடந்த சில ஆண்டுகளாக அரசியலில் ஆர்வம் காட்டி வந்தார். இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக்கழகம் எனும் கட்சியை தொடங்கினார்.


த.வெ.க கட்சி கொடி நாளை அறிமுகம்:


கட்சியைத் தொடங்கிய பிறகு இரண்டு படங்களில் மட்டுமே நடிப்பேன் என்றும், 2026 சட்டமன்ற தேர்தலில் களமிறங்கப்போவதாகவும் அறிவிப்பை வெளியிட்டார். தமிழ்நாடு முழுவதும் உள்ள தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் மூலமாக தனது அரசியல் பணிகளை அவர் தீவிரப்படுத்தினார்.


தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியை அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் நாளை அறிமுகம் செய்ய உள்ளார். பனையூரில் உள்ள அவரது இல்லத்தில் இதற்கான விழா நாளை நடக்கிறது. இதையடுத்து, நீலாங்கரை மற்றும் கானத்தூர் காவல்நிலையத்தில் தமிழக வெற்றிக் கழகத்தினர் அனுமதி கோரியுள்ளனர். தனிப்பட்ட இடத்தில் நடைபெறும நிகழ்ச்சி என்பதால் அதற்கு அனுமதி தேவையில்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


பலத்த பாதுகாப்பு ஏற்பாடு:


அதேசமயம், நடிகர் விஜய்க்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர் என்பதால் அவரது கட்சி கொடி அறிமுக விழாவில் பங்கேற்க கட்சித் தொண்டர்களும், நிர்வாகிகளும் குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அந்த பகுதியில் நாளை போக்குவரத்தை கட்டுப்படுத்த மற்றும் ரசிகர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்க முடிவு செய்துள்ளனர். மேலும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையிலும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடி அவரது கட்சி மாநாட்டில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் நாளையே தனது கட்சி கொடியை அறிமுகப்படுத்துகிறார். கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் ஏதேனும் சிறப்புரை ஆற்றுவாரா? என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


சூடுபிடிக்கும் விஜய்யின் அரசியல்:


நடிகர் விஜய் நடிப்பில் கோட் படம் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், அவர் கட்சி கொடியை அறிமுகம் செய்ய உள்ளார். இதனால். கோட் படத்தின் தொடக்க காட்சிகளில் கட்சி கொடியுடன் படத்தை கொண்டாட விஜய் ரசிகர்களும், தமிழக வெற்றிக் கழக தொண்டர்களும் முடிவு செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த சில வாரங்களாக சூடுபிடித்துள்ள நடிகர் விஜய்யின் அரசியல் செயல்பாடுகள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.