மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனையில் பிரசவத்தின் போது அலட்சியமாக செயல்பட்டதால் குழந்தை உயிரிழந்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனை மருத்துவரை மாவட்ட சுகாதார இணை இயக்குனர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்ததை கண்டித்து மருத்துவர்கள் வெளிநோயாளிகள் பிரிவு சிகிச்சையை புறக்கணித்து எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
வலியால் துடித்த கர்ப்பிணி பெண்
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரை சேர்ந்தவர் முருகேசன் சிவரஞ்சனி தம்பதியினர். நிறைமாத கர்ப்பிணியான சிவரஞ்சனி, கடந்த 2 -ம் தேதி மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது சிவரஞ்சனி வலியால் துடித்தகவும், அதனால் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவரிடம் உறவினர்கள் வலியுறுத்தியதாகவும், அதனை மருத்துவர்கள் ஏற்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
மூச்சி பேச்சு இன்றி பிறந்த குழந்தை
இந்த சூழலில் கடந்த 6-ம் தேதி சிவரஞ்சனிக்கு பேச்சு மூச்சு இன்றி ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதனை தொடர்ந்து 6 மணி நேரம் குழந்தையை பச்சிளம் குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்துள்ளனர். ஆனால் அதில் எவ்வித முன்னேற்றமும் இல்லாததால் மேல் சிகிச்சைக்காக கடந்த 7 -ஆம் தேதி சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு குழந்தையை அனுப்பி வைத்துள்ளனர்.
குழந்தையின் சடலத்துடன் சாலைமறியல்
இந்நிலையில் அங்கு தீவிர சிகிச்சை பெற்றுவந்த குழந்தை, நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. இதனை அடுத்து சிதம்பரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து நேராக குழந்தையின் உடலுடன் மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனைக்கு வந்த குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் உரிய நேரத்தில் அறுவை சிகிச்சை செய்யாமல் தாமதப்படுத்தியதால் தான் குழந்தை இறந்ததாகக் குற்றம் சாட்டி, அலட்சியமாக செயல்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனை எதிரே குழந்தையின் சடலத்துடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
பின்னர் இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் பானுமதி, வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணு பிரியா, ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சம்பந்தப்பட்ட மருத்துவரை பணிநீக்கம் செய்வதாக மாவட்ட சுகாதாரத் துறை பணிகள் இணை இயக்குநர் பானுமதி அறிவித்த நிலையிலும், அதனை ஏற்க மறுத்த போராட்டக்காரர்கள் மருத்துவரை கைது செய்ய வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரிக்கை வைத்தனர்.
மருத்துவர் பணியிடை நீக்கம்
தொடர்ந்து சம்பந்தப்பட்ட மருத்துவர் ரம்யாவை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட சுகாதாரத் துறை பணிகள் இணை இயக்குநர் பானுமதி உத்தரவிட்டார். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
மருத்துவர்கள் போராட்டம்
இந்நிலையில் மருத்துவர்களிடம் உரிய விசாரணை செய்யாமல் பெற்றோர், உறவினர்களிடம் விசாரணை செய்ததன் அடிப்படையில் மருத்துவர் ரம்யா தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, அதனை ரத்து செய்ய கோரி இன்று மயிலாடுதுறையில் புறநோயாளிகள் பிரிவு சிகிச்சையை மட்டும் மருத்துவர்கள் புறக்கணித்துள்ளனர். மேலும் இதுகுறித்து முறையான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதனால் மருத்துவமனையில் உள்ள 21 மருத்துவர்கள் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் உள்ள அனைத்து அவசர சிகிச்சை பிரிவுகள் இயங்கி வருகிறது. ஆனால் புறநோயாளிகள் பிரிவில் மருத்துவம் பார்ப்பதற்காக நோயாளிகளுக்கு டோக்கன் வழங்கப்பட்ட நிலையில் காலை 7:00 மணி முதல் தற்போது வரை நோயாளிகள் காத்து கிடைக்கின்றனர். பள்ளி மாணவர்கள் முதியவர்கள் என ஏராளமானோர் மருத்துவர்கள் இல்லாததால் திரும்பி வேறு மருத்துவமனைக்கு சென்று வருகின்றனர்.